(இ - ள்.) பாவாய் - பாவை போன்றவளே!, பேய் மையானம் கொண்டிருந்தன்ன - கரிய பேய்கள் நன் காட்டில் நின்றாற்போன்று நிற்கின்ற, பெருவரை - பெரிய மலைகள், நெரிதரத் திரை சிந்தி் - நெரிந்து போகும்படி அலைகளால் மோதி, தீமை யானைகள் - தீயனவாகிய காட்டியானைகளின், செவியுகு - செவி முதலியவற்றில் ஊறிப் பொழிகின்ற, செறிகடாம் - செறிந்த மதநீர், திளைத்தலில் - கலத்தலாலே, திசைநாறி - திக்குகளில் மணம் வீசி, போய் - ஒழுகி, மையானம் கொண்டு - கரிய மரக்கலங்களைத் தன்பாற் கொண்டு பெருந் திசைப்புடையன - பெரிய திக்குளில் உளவாய, புனல்யாறு - வேறு பல நீர் யாறுகள், சேய்மையான் - சேய்மைக்கண் கிடந்து தோன்றுவனவாகலின் அவைகள், நமக்கு ஒளிர்முத்தின் - சுடர்வீசும் முத்துக்களால் இயன்ற, பருவடம் - பெரிய வடங்கள் கிடந்து தெளிப்ப ஒத்துள - விளங்குவன போன்றுள்ளன, (எ - று,) யானம் - மரக்கலம். பெரியவரைகளை நெரித்து யானை மதம் கமழ, மரக்கலங்களைக் கொண்டு ஒழுகா நின்ற யாறுகள், பல சேய்மைக் கண்ணேமாகிய நமக்கு, நித்திலக் கோவைகள் கிடந்து திகழுமாப் போலே, தோன்றுதல் காண்! என்றாள் என்க. |