(இ - ள்.) பைங்கண் செம்முகம் பரூஉக்கை அம்பகடு பசிய கண்களையும் சிவந்த முகத்தையும், பருத்த துதிக்கையையுமுடைய அழகிய களிற்றியானைகள், அங்கண் மால்வரை அருவிதம் தடக்கையில் புடைத்து தம்பால் பிடிக்கணம் சூழ - தம் பக்கத்தே தம் பிடி யானைகள் சூழ்ந்து நிற்ப, நின்று - அழகிய இடமுடைய பெரிய மலையினின்றும் பொழியும் அருவியாகிய நீர்வீழ்ச்சியைத் தம்முடைய வலிய துதிக்கையாலே சிதறி, அமர்ந்து ஆடி - விரும்பி விளையாடி, செங்கற்றூளி - அம்மலையிடத்தாகிய காவிக் கற்களின் துகளை வாரி, தம் செவிப்புறத்து எறிதலில் - தம்முடைய செவிகளிலே வீசுதலாலே, பொங்கி சிகரங்களிடையெல்லாம் - அத்துகள் மிக்குப்படிந்து மலைச் சிகரங்களின்மேல், குங்குமப்பொடி யொத்து - குங்குமப் பொடி படிந்ததைப் போன்று, பொலிகின்ற - திகழ்கின்றன வாதலை, பொலங்கொடி - பொற்பூங்கொடியை ஒப்பாய், புடை நோக்காய் - பக்கத்தே காண்க! (எ - று,) களிற்று யானைகள் அருவிநீரைத் தடுத்து விளையாடிப் பின்னர்ச் செங் கற்றூளியைத் தம் செவியிடத்தே வீசிக்கோடலாலே, அவை குங்குமப்பொடி யப்பிய சிகரங்களைப்போற் றோன்றுதல் காண் என்றாள், என்க. |