(இ - ள்.) இன்ன போல்வன - இவைபோன்ற காட்சிகள், இளையவட்கு - சுயம்பிரபைக்கு, உழையவள் - தோழியாகிய அமிர்தபிரபை, இனியன பலகாட்டி - இனிய பலவற்றைக் காட்டி; பன்னும் ஆயிடை - விளக்கும் பொழுது, பழனங்கள் வளாவிய - வயல்கள் சூழ்ந்த, கலிபடு நெடுதீத்தம் - ஆரவாரிக்கின்ற நெடிய நீர்ப்பெருக்கு, துன்னும் நீர் வயல் - செறிந்த நீர் வளமிக்க வயல்களையுடைய, சுரமியத்து - அகணியுள் - சுரமை நாட்டின் அகத்தேயுள்ள, சுடர் அணி நகர் சார்ந்து - ஒளியால் அழகுற்ற போதன நகரத்தையடைந்து, தென்என் தேன் இமிர் - தென்னாதெனா எனப் பாடும் அளிகள் இசைபாடுகின்ற, திருநிலை அகம் எனும் செறிபொழிலது - திருநிலை அகம் என்னும் பெயரையுடைய நெருக்கமுடைய பூம்பொழிலை, சேர்ந்தார் - அடைந்தனர், (எ - று.) இவ்வாறு சுயம்பிரபைக்கு, அமிர்தபிரபை கூறி வருமளவில், விமானம் சுரமை நாடடைந்து, போதனநகரின் அணித்தேயுள்ள, திருநிலையகம் என்னும் பூம்பொழிலை எய்திற்றென்க. |