அந்தணர் வாழ்த்துக்கூற அரசன் அவர்களை வணங்குதல்

89. அந்தண ராசிடை கூறி யாய்மலர்ப்
பைந்துணர் நெடுமுடி பயில வேற்றினார்
செந்துணர் 1நறுமலர் தெளித்துத் 2தேவர்மாட்
டிந்திர னனையவ னிறைஞ்சி யேத்தினான்.
 

     (இ - ள்.) அந்தணர் - அழகிய தண்ணளியையுடையவர்களாகிய முனிவர்கள்; ஆசு
இடைகூறி - வாழ்த்துரைகளை இடையிடையே கூறி; ஆய்மலர்ப் பைந்துணர் - அழகிய
மலர்கள் பொருந்திய பசிய பூங்கொத்துக் களை; நெடுமுடி பயில ஏற்றினார் -
நெடியமுடியிலே பொருந்துமாறு போட்டார்கள்; இந்திரன் அனையவன் -
தேவர்கோமானைப் போன்றவனாகிய பயாபதி மன்னனும்; தேவர்மாட்டு - தெய்வத்தன்மை
பொருந்தியவர்களாகிய அம்முனிவர்களிடத்திலே; செம்துணர் நறுமலர் தெளித்து - அழகிய
கொத்தாகவுள்ள நறுமலர்களைத் தூவி; இறைஞ்சி ஏத்தினான் - வணங்கிப் போற்றினான். (எ - று.)

     அந்தணர்க்குத் தேவர் உவமை எனினுமாம். அரசன் படுக்கையை விட்டெழுந்து
முகத்தைக் கழுவி மங்கலப் பொருள்களைப் பார்த்தவுடன் அந்தணர்கள் அங்குத் தோன்றி
மலர்களைச் சொரிந்து வாழ்த்துரைகளைக் கூறினார்கள். பயாபதி மன்னன் அவர்களைப்
போற்றி வணங்கினான். அரசர் துயிலுணர்ந்தவுடன் முனிவரை வணங்குதலும் அவர்
வாழ்த்தலுமாகிய வழக்க முண்மையை,

          “மகடூஉத் துறந்த மாசறு படிவத்துத்
          துகடீ ராளர்க்குத் துளக்கிய முடியன்
          மலர்கண் ணளைஇய மந்திர நறுநீர்
          பலருடன் வாழ்த்தப் பண்புளி யெய்தி“

எனவரும் பெருங் கதையானும் (1 - 34 : 17 - 20) உணர்க.

     அந்தணராவார் எவ்வுயிர்மாட்டுந் தண்ணருள் காட்டும் சீரியோராவார்.
அத்தகையோர் பிரமப் பொருளையுணர்ந்து நிற்கும் முனிவரராகிய பெரியோர் என்க.
ஆசஸ் என்னும் வடசொல் ஆசு என ஈறு திரிந்த தென்பர். தேவர்மாட்டு : மாட்டு
ஏழனுருபு.

( 20 )