896.

2தெள்ளு வண்பவ ழத்திர ளூன்றிய
வெள்ளி மண்டப மும்விரை நாறுப
பள்ளி யம்பல மும்பகற் கோயிலும்
வள்ள னன்னகர் வாய்மலி வுற்றவே.

     (இ - ள்.) தெள்ளு வண் பவழத் திரள் ஊன்றிய - தெரிந்தெடுத்த வளப்பமான
பவழத் தூண் நாட்டிய, வெள்ளி மண்டபமும் - வெள்ளியாலியன்ற அம்பலங்களும்,
விரைநாறுப - மணம் கமழ்கின்ற, பள்ளி அம்பலமும் - பள்ளிகொள்வதற்குரிய மன்றங்களும்
பகற் கோயிலும் - பகற்பொழுதைக் கழித்தற்குரிய அம்பலங்களும், வள்ளல் நன்னகர்வாய் -
வண்மைமிக்க சடியின் அழகிய அரண்மனையிடத்தே, மலிவுற்ற - மிக்கன, (எ - று.)

     மேலும் பவழத் தூண் நாட்டப்பட்ட வெள்ளி மண்டபங்களும் பள்ளியம்பலமும், பகற்
கோயிலும் அவ்வரண்மனைக்கண் அமைக்கப்பட்டுள்ளன, என்க.

( 70 )