899.

கன்னி மூதெயில் சூழ்கடி காவினுட்
கன்னி தாதைகண் ணார்நக ரிஞ்சியுட்
கன்னி மார்பலர் காக்குங் கடையதோர்
கன்னி மாநகர் கன்னிக் கியற்றினார்.

      (இ - ள்.) கன்னி மூதெயில் சூழ் கடி காவினுள் - அழிவில்லாத பழைதாகிய
மதிலாற் சூழப்பட்ட மணமிக்க - அப்பூம்பொழிலின்கண், கன்னி தாதை கண் ஆர்நகர்
இஞ்சியுள் - சுயம்பிரபையின் தந்தையாகிய சடிமன்னனுடைய இடமகன்ற அரண்மனை
மதிலின் அகத்தே, கன்னிமார் பலர் காக்கும் கடையது - கன்னியராகிய காவல் மகளிர்
பலரால் பாதுகாத்தலையுடைய தலைவாயிலையுடைத்தாகிய, ஓர் கன்னிமாநகர் - ஒரு
கன்னிமாடம், கன்னிக்கு இயற்றினார் - சுயம்பிரபைக்கு இயற்றினார்கள், (எ - று.)

கன்னிமூதெயில் என்றார் ஒருவராலும் ஒருகாலத்தும் தாக்கப்படாத பழைய
திண்மதிலென்றற்கு. அம் மதிலினூடே, கன்னிக்குக் கன்னிமாடம் கண்டனர், என்க.

( 73 )