வயல்களும் ஊர்களும் | 9. | ஆங்கவ ரணிநடை யன்னத் தோட்டன தீங்குரன் மழலையாற் சிலம்புந் தண்பணை வீங்கிள முலையவர் மெல்லென் சீறடி ஓங்கிருஞ் சிலம்பினாற் சிலம்பு மூர்களே. | (இ - ள்.) ஆங்கு - அந்நாட்டின்கண்ணுள்ள; தண்பணை - குளிர்ந்த மருதநிலங்கள்; அவர் - அந்த மங்கையரின்; அணிநடை - அழகிய நடையினையுடைய; அன்னத்தோட்டன - அன்னப் பறவைகளின் தொகுதி யினுடைய; தீங்குரல் மழலையால் சிலம்பும் - இனிய குரலான நிரம்பா ஒலியால் ஆரவார முடையனவாயிருக்கும்; ஊர்கள் - அந்நாட்டிலுள்ள ஊர்கள், வீங்கு - பருத்த; இளமுலை அவர் - முற்றாக்கொங்கைகளையுடைய மங்கையரின்; மெல் என் சீறடி - மெல்லிய சிறிய அடிகளில் அணியப்பட்ட; ஓங்கு - உயர்ந்த; இரும் சிலம்பினால் - பெரிய சிலம்புகளினால்; சிலம்பும் - ஆரவாரமுடையனவாயிருக்கும், (எ - று.) ஆங்கு : அசைநிலை. அவர் என்னுஞ்சுட்டை முற்பாட்டிலுள்ள மங்கையருக்காக்குக. அந்நாட்டின் வயலிடங்களெல்லாம் அன்னப்பறவைகளின் இன்னொலி யால் சிறந்திருக்கும். ஊரிடங்களோ மங்கையர்கள் காலில் அணிந்துள்ள காற்சிலம்பின் ஒலியினால் நிறைந்திருக்கும் என்பதாம் வயலிடங்கட்கு அன்னப்பறவைகளின் ஒலியும் ஊரிடங்கட்கு மங்கையர் காற்சிலம்பொலியும் ஒலியாகக் கூறப்பெற்றன. | ( 9 ) | | |
|
|