வாயில் காப்போர் உலகு காப்போன் வரவை எதிர்பார்த்தல் |
90. | விரையமர் கோதையர் வேணுக் கோலினர் உரையமர் காவல்பூண் கடையி னூடுபோய் முரசமர் முழங்கொலி மூரித் தானையன் அரசவை மண்டப மடைவ 1தெண்ணினார். |
(இ - ள்.) விரைஅமர் கோதையர் - மணம்பொருந்திய மாலையை அணிந்தவரும்; வேணுக்கோலினர் - மூங்கிற்கோலைக் கையிலுடையவர் களுமாகிய காவன்மகளிர்; உரைஅமர் - புகழ் பொருந்தியதும்; காவல்பூண் கடையின் ஊடுபோய் - தாங்கள் காத்தலைச் செய்கின்றதுமாகிய வாசல்களின் ஊடே உலாவி நின்று; முரசு அமர் முழங்குஒலி மூரித்தானையன் - முரசுகள் பொருந்தி முழங்குகின்ற ஒலியோடுகூடிய பெருமை பொருந்திய படைகளை யுடைய பயாபதி அரசன்; அரசு அவைமண்டபம் அடைவது - திருவோலக்க மண்டபத்திற்கு வருதலை; எண்ணினார் - எதிர்பார்த்தார்கள். (எ - று.) இவர்கள் மகளிர் என்பதுதோன்ற 'விரையமர் கோதையர்' என்றார். வாயில் காப்போர் யாவரும் அவரவர்கட்குரிய வாயில்களினின்று உலாவிக்கொண்டு அரசன் கொலு மண்டபத்திற்குச் செல்வதை எதிர் பார்த்திருந்தார்கள். வேணு - மூங்கில். |
( 21 ) |