(இ - ள்.) பொன் அவிர் திருவடி - பொன்போல் விளங்குகின்ற அழகிய அடிகள்; போற்றி போற்றி என்று - வாழ்க வாழ்க என்று கூறி; அன்னம் மெல் நடையவர்பரவ - அன்னப்பறவையின் மெல்லிய நடையைப்போன்ற நடையையுடையவர்களாகிய பெண்கள் பலர் வாழ்த்துக்கூறவும்; ஆய்துகில் கன்னியர் - ஆராய்ந்தெடுத்த ஆடையை அணிந்த கன்னியர்; கவரிகால் எறிய சாமரைகளை வீசிக் காற்றெழுப்பவும், காவலன் - பயாபதி மன்னன்; முன்னிய - தான் அடைதற்கு எண்ணிய; நெடும் கடை முற்றம் முன்னினான் - திருவோலக்க மண்டபத்தின் நீண்ட வாசலின் முன்இடத்தை அடைந்தான். (எ - று.) பெரியோர்களை சிறியோர்கள் வாழ்த்துமிடத்து அடிகளை வாழ்த்துதல் மரபு; எனவே அன்னமென்னடையவர் திருவடி போற்றி போற்றி என்று வாழ்த்துக் கூறலாயினர். இஃது அடியீடேத்துதல் எனப்படும். அரசர் எழுந்தருளும் பொழுது கன்னிமகளிர் அடியீடேத்தலும், கவரிவீசலும் விளக்கேந்தலும் மங்கல நீரேந்தலும் இன்னோரன்ன பிறவுஞ் செய்தல் மரபு. இதனை இந்நூலிற் பிறாண்டுங்காணலாம். (கவரி கொண்டெறிய) என்றும் பாடம். |