911.

ஆங்கவர் 1மொழியைக் கேட்டே யறிவினுக் கரச ரென்று
வாங்கிருங் கடலந் தானை மன்னவன் மகிழ்ந்து 2மற்றைப்
பூங்குழை மகளிர் காக்கும் பொன்னணி வாயில் போகித்
தேங்கம ழலங்கன் மார்பன் றிருநகர் முற்றஞ் சேர்ந்தான்.

     (இ - ள்.) ஆங்கு அவர் மொழியைக் கேட்டே - அவ்விடத்தே அவ்வமைச்சர்தம்
அறிவியல் மொழியைச் செவியுற்ற, வாங்கு இருங் கடல் அந்தானை மன்னவன் - வளைந்த
பெரிய கடல்போன்ற அழகிய படைகட்கு
அரசனாகிய பயாபதி, அறிவினுக்கு அரசர் என்று மகிழ்ந்து - (யாம் வறிய மண்ணிற்கு
மட்டும் அரசாக) நீவிரோ அறிவுலகிற்கே அரசர் ஆவீர்கள் என முகமன் கூறி (அவர்
மகிழ) மகிழ்ச்சியை அடைந்து, மற்றைப் பூங்குழை மகளிர் காக்கும் பொன் அணிவாயில்
போகி - அழகிய தோடுடைய மகளிர்களால் காவல் செய்யப்பட்ட அப்பொன்னால்
அழகுறுத்தப்பட்ட வாயிலைக் கடந்து, தேம் கமழ் அலங்கல் மார்பன் - தேன் கமழ்மாலை
அணிந்த மார்பையுடைய அம்மன்னன், திருநகர் - அரண்மனையின், முற்றம் -
தலைவாயிலை, சேர்ந்தான் - எய்தினான்; (எ - று,)

அறிவினுக்கு அரசர் என்றான், யான் உலகிற்கு மட்டுமே மன்னன் நீவிர் அறிவிற் கரசர் ஆதலார் நீயிரே என்னினும் பெரியீர் என்றவாறு.

( 85 )