(இதுமுதல் 6 செய்யுள்கள் ஒருதொடர்) (இ - ள்.) தேங்கமழ் அலங்கல் மார்பன் - தேன் மணம் கமழ்கின்ற மலர்மாலை சூட்டப்பட்ட மார்பினையுடையனாய, சித்திரதரனைக் கூவி - சித்திரதரன் என்னும் தலைமைப்பணியாளன் ஒருவனை விளித்து, பாங்கு அமை பஞ்சும் பட்டும் துகில்களும் - நேரிதான பஞ்சாடைகளும் பட்டாடைகளும் ஏனைய துகில்களும், பரப்பி - விரித்து, மேலால் - அவையிற்றின்மேல், வீங்கிய சுடரவாய பிடைமணிக் கலன்கள் - மிக்க ஒளியுடையனவாகிய மணிகள் செறிந்த அணிகலன்களை, விஞ்சை நீங்கருந் திறலினான்றன் நெடுநகர் - வித்தையகலாத ஆற்றலுடைய சடியின்பாடி அரண்மனையகத்தே, நிறைக்க என்றான் - நிறைத்து வைக்கக்கடவாய் என்று பணித்தான், (எ - று.) பஞ்சும் பட்டும், அல்லாத மயிர் முதலியவற்றாலாய கம்பளங்கள் முதலியவற்றையும் இனம்பற்றித் துகில் என்றான் ; இனி துகில் - வெண் பட்டெனினுமாம், விஞ்சை - வித்தை. விஞ்சையன் - விச்சாதர மன்னன் எனினுமாம். |