(இ - ள்.) பொன் அணிகலத்தின் குப்பை - பொன்னாலியன்ற அணிகலன்களின் குவியல்களும், புரிமணிக் கோவைப் போர்வை - நூலையுடைய மணி கோக்கப்பட்ட போர்வைகளும், மன்னிய வயிரக் குன்றம் - நிலைபெற்ற வயிரமணி மலைகளும், வலம்புரி மணியின் கோவை - வலம்புரிச் சங்கீன்ற முத்துவடங்களும், பின்னிய பவழவல்லிப் பிறங்கலோடு - பின்னி வளரும் இயல்புடைய பவழக்கொடியின் குவியலும், ஏனைய எல்லாம் - ஒன்பான் மணிகளுள் கூறப்படாதொழிந்தனவும், கொல் நவில் வேலினான்றன் கோயின்முன் - கொலைத்தொழில் வல்ல வேல் ஏந்தும் விஞ்சை வேந்தன் அரண்மனையின்கண், குவிக்க என்றான் - குவிக்கக் கடவாய் என்றான், வயிரக்குன்றம் - வயிரமணிகளாற் குவிக்கப்பட்ட குன்றம்போன்ற குவியல், (எ - று.) வயிரக்குன்றம் - வயிரமணிகளாற் குவிக்கப்பட்ட குன்றம் போன்ற குவியல். அணிகலக் குப்பை, மணிக்கோவை, போர்வை, வயிரக்குப்பை, முத்துக் கோவை, பவழக் குவியல், ஆகிய எல்லாம் சடியின் இருக்கையில் குவிக்கக் கடவீர் என்றான், என்க. |