921.

தேங்கனி குழவித் தீநீர் செம்பழத் திரளின் கண்ணி
பாங்கமை 1பளிதச் சாதி பாசிலைத் தழையின் கற்றை
தீங்கழை கரும்பின் 2கட்டி திரணறைக் கடிகை யின்ன
தோங்கலந் திலாத சொல்லான் றொன்னகர்ச் சொரிக வென்றான்.

     (இ - ள்.) தேங்கனி - தெங்கங்கனிகளும், குழவித் தீநீர் - தெங்கிளநீர்க்
குரும்பைகளும், செம்பழத் திரள் - தேமா பலா வாழை முதலிய செவ்விய
பழக்குவியல்களும், இன் கண்ணி - இனிய மலர்க்கண்ணிகளும். பாங்கு அமை - பக்குவம்
அமைந்த, பளிதச் சாதி - கத்தூரி வகைகளும், பாசிலைத் தழையின் கற்றை -
வெற்றிலையாகிய தழைக்கற்றைகளும், தீங்கழைக் கரும்பின் கட்டி - இனிய கழியாகிய
கரும்பின் சாற்றாலாய கற்கண்டும், திரள் நறைக் கடிகை - திரண்ட சாதிக்காயும், இன்ன -
இன்னோரன்ன பிறவும், தோம் கலந்திலாத சொல்லான் - குற்றமற்ற வாய்மையாளனாகிய
சடிமன்னனுடைய, தொன்னகர் - அரண்மனையிடத்தே, சொரிக-கொட்டுக, என்றான்-என்று
பணித்தான், (எ-று.)

     தேங்கனி - முதிர்ந்த தேங்காய். குழவித்தீநீர் - இளநீர்க் குரும்பை. பாசிலைத் தழை
- வெற்றிலை. தொன்னகர் - திருநிலையகம். பழைதாகலின், அதன்கணமைந்த
அரண்மனையையும் தொன்னகர் என்றான்.

( 95 )