(இ - ள்.) அகநகர் - நமது போதன நகரத்தின் உள்ளிடத்தை, குங்குமக் குழம்பு கொட்டி - குங்குமத்தாலாய செங்குழம்பைக் கொட்டி, சந்தனத் தொளி - சந்தனச் சேற்றின்கண், கண்கூட்டி - கூட்டற்பாலவாய மணப்பொருள் பிறவும் கூட்டிக் கொட்டி, அங்கலுழ் விரையின் சேற்றோடு - அழகிதாய் நெகிழ்ச்சியுடைய கலவைச் சாந்தும் கொட்டி, அளறு செய்து - சேறாக்கி, மங்குல் ஆய் விசும்புமூட - முகில் போன்று நுண்ணிய வானம் போர்க்கும்படி, அகிற்புகை மயங்க மாட்டி - அகிலாலாய மணப்புகையைப் பொருந்த ஊட்டி, பொங்கு பொன் சுண்ணம் வீசி - மிகுந்த பொன்துகளைத் தூவி, இவ்வாற்றால், மணவினை புனைவி என்றான் - திருமணம் நிகழ்த்துதற்கு வேண்டிய செயல்களைச் செய்வித்திடுக என்றருளினான், (எ-று.) இதன்கண், போதன நகரத்தின் உள்ளே திவிட்டநம்பியின் திருமண விழாவிற்கு வேண்டியவற்றைச் செய்க, எனப் பயாபதி கட்டளையிடுதல் கூறப்படுகின்றது. |