(இ - ள்.) அருள் அறிந்து உழையர் ஓடி - வேந்தன் கட்டளையிட்டருளியதை அறிந்த பணியாளர்கள் விரைந்தோடி, அரசுவா வருக என்ன - நம் அரசயானை வருவதாக என்று அக்கட்டளையை அறிவித்தலும், மருளிவண்டுழலும் தாரை - வண்டுகள் மயக்கங்கொண்டு உழல்தற்கு ஏதுவாகிய மதநீரைத் தாரையாகப் பொழியும், மழகளிறதனை -இளமை மிக்க அக்கோக்களிற்றை, மேய்ப்பான் - ஓம்புகின்ற பாகன், இருள் இருங்குன்றம் ஏய்க்கும் - இருண்ட பெரிய மலையினை ஒக்கும் அவ்வியானையின், இரும்பிணர் எருத்தம் ஏறி - பெரிய சருச்சரையுடைய பிடரின்கண் ஏறி இருந்து, வெருவரும் மொழியில் தேறி - அஃதஞ்சுதற்குக் காரணமான யானை மொழியினாலே அதனைத் தெளியச்செய்து, (இனிதே நடத்துதலின்) மேன் முறைத் தொழிலன் ஆனான் - பாகு நூல் வல்லாருள் சிறந்த தொழிலையுடையன் ஆயினான், (எ - று.) மேன்முறைத் தொழிலன் - யானைமேலிருந்து நடத்தும் தொழிலன் ஆனான் எனினுமாம். அரசுவா - பட்டத்தியானை. மேய்ப்பான் - யானைப்பாகன். |