927.

அரசுவா வதனோ டாடி யியலறிந் தணைந்த பாகன்
புரைசைதா னெகிழ்த்து மற்றோர் புதுவடம் புரள வீக்கி
உரைசெய்காற் சுவடு நுங்கச் செறித்தொன்று புறத்த தாக்கி
நிரைசெய்கா னிகளம் விட்டு நிலத்தவ ரேறு கென்றான்.
 

     (இ - ள்.) அரசுவாவதனோடு ஆடி இயல் அறிந்து அணைந்த பாகன் - அந்த அரச
யானையோடு பெரிதும் ஊடாடி அதனுடைய இயற்கையாகிய குணங்களை நன்கு அறிந்து
அதன்பால் சென்று பயின்றுள்ள அப்பாகன், புரசை நெகிழ்த்து - கழுத்திடு கயிற்றை
அவிழ்த்து, மற்றோர் புதுவடம் புரள வீக்கி - வேறொரு புதியதாகிய கயிற்றைப் புரளுமாறு
கட்டி, உரைசெய்தாற் சுவடு நுங்கச் செறித்து - கூறப்படுகின்ற காற்சுவட்டைக் கவ்வும்படி
பிணித்து, ஒன்று புறத்ததாக்கி - ஒருகாலைத் தளையாது புறத்தே விட்டு, நிலத்தவர்
ஏறுகென்றான் - தரையில் நிற்கும் யானைத் தொழிலாளர்கள் ஏறுக என்று கூறினான்,
(எ -று.)

    அத் தொழிலாளரை அதனைப் பண்ணுறுத்தற்கு ஏறுக என்றான் என்க. ஆடி -
ஊடாடி. புரசை - யானைக் கழுத்திலிடும் கயிறு. நிகளம் - விலங்கு. நிலத்தவர் - பூமிமேல்
நிற்கும் பாகர்.

( 101 )