(இ - ள்.) வாசம் நீர் தெளித்து - மணங்கமழும் நீர் தெளிக்கப்பட்டு; அலர்பரப்பி - மலர்கள் பரப்பப்பட்டு; வான் அகம் ஏசு நீள் இருக்கைய - விண்ணுலகத்தையும் இகழும்படியான நீண்ட இடத்தையும் அவற்றின்கண் அணைகளையும் உடையனவும், இலங்கு சென்னிய - விளங்குகின்ற முடியை யுடையனவுமான; மூசுதேன் நெடுங்கடை மூன்றும் - நெருங்குகின்ற வண்டு களையுடைய நீண்ட திருவாயில்கள் மூன்றையும்; போய் - தாண்டிச் சென்று; புறத்து ஓசை நீள்மண்டபம் அது - ஒலிகள் எதிரொலி செய்துபுறத்தே நீளுதற்குக் காரணமான திருவோலக்க மண்டபமாகிய; உவந்தது எய்தினான் - தான் விரும்பியதனை அடைந்தான். (எ - று.) தெளித்து - தெளிக்கப்பட்டு; பரப்பி - பரப்பப்பட்டு என்க. வாசநீர் - பனிநீர் முதலியன. அதனைத் தெளித்தல் மணமுண்டாதற்கும் துகளடங்கற்கும். அலர் பரப்புதல் அரசன் அடிகளில் கல்முதலியன உறுத்தாதிருத்தற்கு. சென்னி என்றது மண்டபத்தின் மேலுள்ள முடிகளை. ஓசை - புகழுமாம். |