(இ - ள்.) பொன் திரள் கடிகை பூட்டி - பொன்னாற் றிரட்டப்பட்ட கடிகை என்னும் மாலையை அணிந்து, புரிமணியோடை சேர்த்தி - விளங்குகின்ற மணிகள் பதித்த நெற்றிப் பட்டத்தை அணிந்து, புளகச் சூழி - கண்ணாடியாலியன்ற குழியென்னும் முகப்பட்டத்தை, முகம் புதைத்து இலங்க வீழ்த்து - முகத்தை மூடித்திகழும்படி தூங்கவிட்டு, சுற்றி நின்றெரியும் செம்பொன் சுடர்நிலைப் பட்டம் சேர்த்தி - யானையினது மத்தகத்தைச் சூழச் நிலைத்து ஒளிரும் செம்பொன்னாலியன்ற சுடருடைய நிலைமைத்தாய பட்டத்தைச் சேர்த்தி, கற்றையம் கவரிக் கண்ணி - கற்றையாகக் கட்டப்பட்ட அழகிய கவரிமானின் மயிராலாய சாமரைகளை, கருணமூலத்து வைத்தான் - செவியின் அடியிலே செருகிவைத்தான், (எ - று.) கடிகை - ஒரு பொன்மாலை. ஓடை - நெற்றிப் பட்டம். புளகச் சூழி - கண்ணாடிப் பட்டம். இஃது உச்சியிலிருந்து முகத்தே தொங்கவிடும் ஓரணி. மேலும் கடிகை பூட்டி. ஓடைசேர்த்தி, புளகம் வீழ்த்து, பட்டம் சேர்த்தி, கருணமூலத்துக் கவரிக் கற்றை வைத்தான் என்க. |