(இ - ள்.) புரவிய குரமுகம் - குதிரைகளின் குளம்புகளின் நுனி, இடுதொறும் - மிதித்திடுந்தோறும், பொடியெழும் - நிலத்தில் துகள்கள் எழாநிற்கும், அருவிகொள் மதமழை பொழிதொறும் - யாானைகள் அருவிகொண்டோடும்படி மதநீராகிய மழையைப் பொழியும் தோறும், துகளாய நிலம், அளறெழும் - சேறாம், (இவ்வாற்றால் அவ்வழி) மருவிய மனிதரும் மனம் நனி அயர்வுறு தெருவுகள் - சென்ற மனிதர்கள் மனம் மிகவும் வருந்துதற்குக் காரணமான அத்தெருக்கள், படுவது சிலர் இடை தெரிவார் - படும்பாட்டை ஒரு சிலரே, காண்பாராயினர், (எ - று.) தெருக்கள் அங்ஙனமாதலைப் படையின் ஊடே சென்று பார்க்கவும் அரிதென்பார் தெருபடும்பாட்டைச் சிலரே தெரிவார் என்றார். புரவிகளாற் றுகளெழுந்தும் யானை மதத்தாற் சேறுபட்டும் தெரு படும்பாடு கூட்டமிகுதியாற் றெரிவரியதாம் என்க. |