வேறு
மண்டபத்திற்குள் புகுதல்

94.

பளிங்கொளி 1கதுவப் போழ்ந்த பலகைகண் குலவச் சேர்த்தி
விளங்கொளி விளிம்பிற் செம்பொன் வேதிகை வெள்ளி வேயுட்
டுளங்கொளி 2பவளத் திண்காற் சுடர்மணி தவழும் பூமி
வளங்கவின் றனைய தாய மண்டப 3மலிரப் புக்கான்.
 

     (இ - ள்.) பளிங்கு ஒளி கதுவப் போழ்ந்த - பளிங்குக்கற்களை ஒளிமிகுமாறு
பிளந்த; பலகை - பலகைகளை; கண் குலவச் சேர்த்தி - இடம் நன்கு விளங்கும்படியாகப்
பொருத்தியமைத்து; விளங்கு ஒளி விளிம்பில் - விளங்குகின்ற ஒளியையுடைய ஓர
இடங்களில்; செம்பொன் - சிவந்த பொன்னினால் இயற்றப்பெற்ற; வேதிகை வெள்ளி
வேயுள் - மேடையையும் வெள்ளியால் வேயப்பட்ட கூரையினையும்; துளங்கு ஒளி பவளம்
திண் கால் - அசைந்து விளங்குகின்ற ஒளிபொருந்திய பவழத்தாலாகிய திண்ணிய
தூண்களையும்; சுடர்மணி தவழும் பூமி - ஒளிமணிக்கற்கள் பதிக்கப்பெற்ற தரையினையும்
உடையதும் ஆகி; வளம் கவின்று அனையது ஆய - சிறந்த அழகு மிக்கதாய; மண்டபம் -
திருவோலக்க மண்டபம்; மலிரப்புக்கான் - விளங்கும்படி அதனுள்ளே நுழைந்தான்.
(எ - று.)

பயாபதி மன்னவன் திருவோலக்க மண்டபம் விளங்கும்படி அதனுள்ளே நுழைந்தான்.
சிறந்த கொலுமண்டபத்தில் வந்து சேர்தலால் அரசனுக்கு அழகுண்டாவதென்பதில்லாமல்,
அரசன் வந்து சேர்தலால் மண்டபத்திற்கு நிறைந்த விளக்கம் உண்டாவதென இவனுடைய
அழகு முதலிய சிறப்புக்களை யுணர்த்துவார் 'மண்டபம் மலிரப்புக்கான்' என்றார். கம்பர்,
“புனைமணி மண்டபம் பொலிய வெய்தினான்“ என்றார்.

( 25 )

?@