(இ - ள்.) பூமரு புரிந்த நுண்நூல் - பொலிவுடைய முறுக்கிய நுண்ணிய நூல்பூண்ட; புரோகிதன் - வேள்வி யாசிரியனும்; பொறிவண்டு ஆர்க்கும் - புள்ளிகளையுடைய வண்டுகள் ஒலிக்கும்; மாமலர் அணிந்த கண்ணி மந்திரக்கிழவர் - சிறந்த மலர்கள் பொருந்திய மாலையை அணிந்த அமைச்சர்களும்; மன்னர் ஏமரு - தன்னோடு பொருந்தாதவர்களான பகைவர்கள் கலங்குதற்குக் காரணமாகிய; கடல்அம் தானை இறைமகன் குறிப்பு நோக்கி - கடல்போற் பரந்த அழகிய படையையுடைய அரசனது மனக்குறிப்பைப் பார்த்து; தாமரைச் செங்கண் தம்மால் பணித்த - அவனுடைய தாமரை மலர்போலுஞ் சிவந்த கண்களாற் காட்டப்பெற்ற; தானத்தர் ஆனார் - இடங்களிலே அமர்ந்தார்கள். (எ - று.) நூல் - பூணூல்; பூ - பொலிவு, பூமருநூல், புரிந்தநூல், நுண்ணூல் எனத் தனித்தனி கூட்டுக. வேள்வியாசிரியன் அமைச்சர் ஆகியோர் அரசனாற் குறிப்பிடப்பட்ட இடங்களில் அமர்ந்தார்கள். மந்திரக் கிழவர் - மறைமுகமாகக் கலந்தெண்ணுதற்கு உரியவர்களாகிய அமைச்சர்கள். மன்னார் - தம்மொடு பொருந்தாதவர்; எனவே பகைவர் என்பது பெறப்பட்டது. கணணினாற் சொல்வது அரசர்கள் மாண்பு. ஆதலால்; “செங்கண் தம்மால் பணித்த தானத்தரானார்“ என்றார். |