(இ - ள்.) காமரு கவின் ஒளிக்காளைமார்களை - விரும்புதற்குக் காரணமாண அழகையும் புகழையும் உடைய காளை போன்ற விசயதிவிட்டர்களை, சாமரை நன்னுதல் தடக்கை யானையான் - வெண்சாமரை அணிந்த நல்ல நெற்றியையுடையதும் பெரிய துதிக்கையுடையதும் ஆகிய அரசுவாவையுடைய சடிமன்னன், தாமரைச் செங்கணால் தழுவி - முன்னர்த் தனது தாமரை மலரை ஒத்த சிவந்த கண்களாலே அவர்களைத் தழுவுவது போல விரும்பி நோக்கி, பின் அவர் பூமரு பொன் வரை அகலம் புல்லினான் - மீண்டும் அவ்விசய திவிட்டர்களுடைய மலர் பொருந்திய பொன்மலையை ஒத்த மார்வங்களைத் தழீஇக் கொண்டான், (எ - று.) சடிமன்னன் தன்னை வணங்கிய விசயதிவிட்டர்களை மிகவும் விரும்பி நோக்கிப் பின்னர்த் தழுவிக் கொண்டான், என்க. சாமரையால் அலங்கரிக்கப்பட்ட நல்லநுதலையுடைய யானை என்க. |