(இ - ள்.) வீங்கிய கனைகழல் வேந்தர் வேந்தனே - மிக்க ஆரவாரத்தையுடைய வீரக்கழல் அணிந்த மன்னர் மன்னனாகிய பயாபதிவேந்தன், ஆங்கு அவன் அழகு கண் பருக - அவ்விடத்தே அவ்வருக்க கீர்த்தியி்ன் பேரழகைத் தன்னுடைய கண்கள் பருகா நிற்பவும், மற்றவன் - அவ்வருக்க கீர்த்தியினுடைய, தாங்குஎழு அனைய தோள் தழுவி - சுமையைத் தாங்குமியல்புடைய தூண்களை ஒத்த தோள்களைத் தழுவிக்கொண்டு, தன்னொடும் - தன்னுடனே, ஓங்கிய மழகளிற்று உம்பர் ஏற்றினான் - உயர்ந்த இளமையுடைய அரசுவாவின் எருத்தின் மேல் வீற்றிருக்குமாறு ஏற்றிக்கொண்டான், (எ - று.) அவ்வாறு வணங்கிய அருக்ககீர்த்தியின் அழகினைப் பருகுவான் போலப் பார்த்துப் பயாபதி வேந்தன், அவனைத் தன்னோடு அரசுவாவின் எருத்தத்தே ஏற்றிக் கொண்டான்; என்க. |