(இ - ள்.) வெஞ்சுடர் ஆழி ஆளும் விறலவற்கு இளைய தாதை - வெவ்விய ஒளியையுடைய ஆழிப்படையைத் தாங்குபவனாகிய ஆற்றல் மிக்க திவிட்டனுடைய இளந்தந்தையாகிய, செஞ்சுடர் இலங்கு பூணான் - ஞாயிற்று மண்டிலம் போலத் திகழ்கின்ற அணிகலன்களையுடைய, திறல் சிறீபாலன் என்பான் - ஆற்றல் மிக்க சிறீபாலன் என்னும் வேந்தன், மஞ்சுடை விஞ்சை நாடன் மலரடி வணங்கி - முகில் தவழும் விச்சாதர நாட்டரசனாகிய சடிமன்னனின் மலர்போன்ற திருவடிகளை வணக்கம் செய்து, மற்ற வஞ்சமில் புகழினான்றன் - மேலும் வஞ்சகவழியானன்றி நன்னெறிக்கண் நின்றீட்டிய புகழுடைய அச்சடி மன்னனுடைய, மனத்தையும் - நன்மனத்தையும், வணங்கியிட்டான் - தன்மனத்தாலே பெரிதும் போற்றித் தொழுதான், (எ - று.) மனத்தைத் தொழுதலாவது அம்மனத்தின் பெருந்தகைமை குறித்து அதனை நன்கு மதித்தல். சிறீபாலன் என்னும் பயாபதியின் றம்பியும் சடிமன்னனை வணங்கி, அம் மன்னன்றன் மாசில் மனத்தையும் மதிக்கலானான் என்க. |