(இ - ள்.) ஆய்ந்தசீர் அரசர் ஆங்குக் கலந்தபின் - ஆராய்தற்குரிய பெரும்புகழ் படைத்த இருபால் வேந்தர்களும் அவ்வாறு அளவளாய்க் கலந்த பின்னர், அமுதவெள்ளம் பாய்ந்தது - அன்பால் பொங்கிய அமிழ்தத்தை ஒத்த இன்பம் வெள்ளமாகப் பெருகிப் பாயா நின்றது, பரவை நன்னீர் பாற்கடல் பரந்ததேபோல் - விரிந்த நன்னீர்க்கடல் திருப்பாற்கடலின் கண்ணே புக்குக் கலந்ததே போன்று, ஏந்திய காதல்கூர - இருபகுதியாரும் வேற்றுமை தோன்றாவாறு மிக்க அன்பாலே கேண்மைகொண்டு, பெயர்ந்து எழில் நகல் புக்கார் - அவ்விடத்தினின்றும் புறப்பட்டு அழகிய நகரத்திற் புகுந்தனர், (அவர் யாரெனில்) காந்திய கனகபயைம்பூண் கருவரை அனையதோளார் - சுடருகின்ற பொன்னாலாய பசிய அணிகலன்களையுடைய கரிய மலை போன்ற சடிமன்னனும் பயாபதியும், (எ - று.) பரவை நன்னீர்ப் பாற்கடல் - விரிவுடைய நல்ல நீர்மை பொருந்திய பாற்கடல் எனக்கொண்டு அப்பாற்கடல் பரந்ததேபோல் எழினகர் பெயர்ந்து புக்கார் என முடிப்பதும் ஒன்று. |