(இ - ள்.) எழில்கொள்கந்து அனைய திண்தோள் இளையரோடு - அழகு மிக்க தூணையொத்த திண்ணிய தோள்களையுடைய விசயதிவிட்டர் முதலிய இளைஞர்களுடனே, அரசர் ஈண்டி - மன்னர்கள் சேர்ந்து, பொழிலகம் தழீஇய சோலைப் பொன்னகர்க் கோயில்புக்கு - பூம்பொழிலின் ஊடே ஒருபுடை பற்றிய திருநிலையகம் என்னும் சோலைக்கண்ணதாகிய அழகிய பொன்னாலியன்ற நகராகிய அரண்மனையிலே புகுந்து, தழுமலர்க்கோதை நல்லார் இசை ததும்பப் பலாண்டு வாழ்த்த - பிணைந்த மலர்மாலை புனைந்த மகளிர்கள் இனிய இசை பெருகி ஒழுகும்படி பல்லாண்டு பாடி வாழ்த்தெடுப்ப, செழுமலர்த் திரள்கள் தாழும் - செழிப்புடைய மலர்க்குழாங்கள் சிதராநின்ற, சித்திரகூடம் சேர்ந்தார் - சித்திரகூடத்தை எய்தினர், (எ - று.) சித்திரகூடம் சடிமன்னன் பொருட்டு இயற்றப்பட்டது முன்னர்க் கூறப்பட்டது. |