969..

காமரு மகளிர் வீசுங் 1களமணிப் பவழத் திண்காற்
சாமரை பயந்த தென்ற றகைமுடித் தாது சிந்தப்
பூமரு பொறிவண் டார்ப்பப் பொலிந்தவ ரிருந்த போழ்தி
2னேமரு கடலந் தானை 3யிருநிலக் கிழவன் சொன்னான்.

     (இ - ள்.) காமரு மகளிர் வீசும் - விருப்பத்தை உண்டாக்கும் இயல்புடைய
மகளிர்களால் வீசப்பட்ட, களம் மணி - நீலநிறமுடைய மரகதமணி பதிக்கப்பட்ட,
பவழத்திண்கால் - பவழத்தினாலியன்ற திண்ணிய காம்பினையுடைய, சாமரை பயந்த
தென்றல் - வெண்சாமரை வீசுதலாலே எழுப்பப்பட்ட தென்றலை ஒத்த இனிமையுடைய
காற்று, தகைமுடித் தாது சிந்த - தகுதியுடைய முடிமாலையின் பூந்துகளை உதிர்ப்பவும்,
பூமரு பொறிவண்டார்ப்ப - மலரின்கண் மேவுதலையுடைய புள்ளிகளைப் பொருந்திய
வண்டுகள் ஆரவாரிப்பவும், பொலிந்து அவர் இருந்த போழ்தில் - அம்மன்னர்கள்
பொலிவுடையவராக வீற்றிருந்த அமயத்தே, ஏமரு கடலந்தானை - செல்வம்மிக்க
கடல்போலும் அழகிய படைகளையுடைய, இருநிலக்கிழவன் சொன்னான் - பெரிய நிலத்தைக்
காவல் செய்பவனாகிய பயாபதி வேந்தன் சொல்வானாயினான், (எ - று.)

ஏம் - செல்வம். மகளிர் வீசும் சாமரையின் காற்றாலே தம் மலர் மாலையின் பூந்துகள்
பறக்குமாறும், வண்டுகள் ஆரவாரிக்குமாறும், அம் மன்னர்கள் வீற்றிருந்த அமயத்தே
பயாபதி பின்வருமாறு பேசினன் என்க.

( 143 )