(இ - ள்.) முன்னவர் இருந்த பின்னை - முற்கூறப்பட்டவாறு வேள்வி யாசிரியனும் அமைச்சர்களும் அமர்ந்த பிற்பாடு; மின் இவர் கடகம் பைம்பூண் - மின்னொளியைப் போலும் ஒளி வீசுகின்ற கடகம் என்னும் கைவளையையும் மற்றும் பலவகையான பசியபொன்னணிகளையும் பூண்டுள்ள; வென்றி வேல் வேந்தர் எல்லாம் - வெற்றி பொருந்திய வேலையேந்திய அரசர்கள் அனைவரும்; மூரிநீர் உலகம் காக்கும் - பெருமை பொருந்திய கடலாற் சூழப்பெற்ற உலகினைப் புரக்கும்; மன்னவன் கழலை - பயாபதி அரசனது அடிகளில் அணிந்துள்ள வீரக் கழல்களை; தங்கள் மணிமுடி நுதியில் தீட்டி - தங்கள் மணிகள் பதிக்கப்பெற்ற முடியின் முனையிலேபடச் செய்து வணங்கி; பின் - பிறகு; அவன் பணித்ததானம் - அரசன் குறிப்பாற் காட்டிய இடங்களில்; பெறும்முறை வகையின் சேர்ந்தார் - பெறுகின்ற முறைமையின் வரிசையின்படி அடைந்தார்கள். (எ - று.) வேள்வியாசிரியன் அமைச்சர் ஆகியோர் அமர்ந்த பிறகு சிற்றரசர்கள் தங்கள் முடி பயாபதி மன்னனுடைய அடிகளிற் படுமாறு பணிந்து அரசனாற் குறிப்பிடப்பட்ட இடங்களில் அமர்ந்தார்கள். கழலை மணிமுடி நுதியில் தீட்டலாவது சிற்றரசர்கள் பணியும்போது அவர்களுடைய முடி அரசனுடைய வீரக்கழலிற்பட்டுத் தேய்த்தல். 'ஒன்னலர் மணிமுடி யுரிஞ்சு தாளினான்' என்பது நைடதம். “கோவுடை நெடுமணி மகுட கோடியால், சேவடியடைந்த பொற் கழலுந் தேயுமால்“ என்பது கம்பராமாயணம். |