(இ - ள்.) கண்ணிடை உமிழும் செந்தீக் கடாக்களிற்று உழவ - கண்களிலே நெருப்புக் காலும் சீற்றமிக்க ஆண் யானைகளாகிய ஏரால் பகைப்புலத்தை உழுகின்ற உழவனாகிய விஞ்சை வேந்தே!, மண்ணிடை என்னை இங்கோர் பொருள் என மதித்து - மண்ணிடத்தே வாழும் மனிதனாகிய என்னையும் ஒரு பொருளாக மதித்து இவ்விடத்தே, விண்ணிடை இழிந்துவந்த விண்ணவர் கிழவன் ஒப்பாய் - வானுலகத்தை நீத்து மண்ணுலகிற்கு வந்துள்ள அமரர்கோமான் ஆகிய இந்திரனையே ஒப்பானவனே, வந்தது - நீ இவ்வாறு எளிவந்த செயல், எண்ணிடையுணரும் மாந்தர்க்கு - கருத்திடைவைத்து ஆராய்வார்க்கு, இடைதெரிவரியது ஒன்று - தக்கதோர் காரணம் காண்டல் அரியதொன்றாக இராநின்றது, என்றான் - என்று விநயத்துடன் மொழிந்தான், (எ - று.) வானுலகத்தினின்றும் வந்த இந்திரனை ஒப்பான நீ, மானிடனாகிய என்னை மதித்து, இவ்வாறு எளிவந்தமைக்கு, என்பால் வைத்த அன்பே அன்றிப் பிறிதொரு காரணமில்லை என்றான் என்க. |