(இ - ள்.) ஏங்கு நீர் வளாகம் காக்கும் - முழங்குகின்ற கடலாற் சூழப்பட்ட நிலத்தைக் காவல் செய்தலில் வல்லுநரான, இக்குவாமன்னர் ஏறே - இக்குவாகு என்னும் அரசன் மரபின்வந்த மன்னர்களுட் சிறந்த அரிமாப்போன்றவனே!, நீர் தூங்குமருத வேலிச் சுரமைநாடு உடைய தோன்றால்! - நீர்நிறைந்த மருத நிலத்தாற் சூழப்பட்ட சுரமை நாட்டை ஆள்கின்ற பெருமையுடையோனே, ஏங்குநீர் அமிர்தின் தீர்த்தம் சென்றனர் தெளித்தல் அன்றே - ஒலிக்கின்ற நீராகிய அமிழ்தை ஒத்த தீர்த்தம் பெற்றுடையோர் அதனைத் தெளிக்கப்படும் மரபினையுடையார்பால் தாமே வலிந்து சென்று தெளித்தல் அல்லவோ, ஓங்குநீர் உலகந்தன்னுள் - மிக்க நீரையுடைய உலகத்தின்கண், உயர்ந்தவர்க்கு உரியது என்றான் - சான்றோர்களுக்கு உரியதொரு பண்பாகும் என்று கூறினான், (எ - று.) உயரிய தீர்த்தத்தைத் தவமுண்மையாற் பெற்ற சான்றோர் அதனை வலியச் சென்று அயலார்மேற் றெளித்து அவரை உய்யக்கோடல் சான்றோர்க்குரிய பண்பென்றான் என்க. தீர்த்தம் - கடவுட்டன்மையுடைய நீர்; ஈண்டுத் தன்மகள் சுயம்பிரபையைத் தீர்த்தம் என்றான் என்க, |