சடிமன்னன் எளிவந்தமைக்குக் காரணம் இயம்பல்
972..

வருதற்கு முதலு முன்பே மருசிவந் துணர்த்தக் 1கேட்டேன்
பொருதற்கண் ணரிய வேலோய் புராணநூற் புலவர் யாரும்
கருதற்கண் ணரிய கண்ணி கடல்வண்ணற் குரிய ளென்னத்
தருதற்கு மகிழ்ந்து வந்தேன் றாழமீங் கொழிக வென்றான்.

     (இ - ள்.) பொருதற்கண் அரிய வேலோய் - போர் ஆற்றுமிடத்தே பகைவரால்
வெல்லுதற்கரிய வேற்படையுடையோனே, வருதற்கு முதலும் - யான் இங்கு வருவதற்குரிய
காாரணமும், முன்பே - முன்னரே, மருசிவந்து உணர்த்தக் கேட்டாய் - மரீசி என்னும்
தூதுவன் வந்து கூறக்கேட்டனை, மேலும்; புராண நூற்புலவர் எல்லோரும், கருதற்கண்
அரிய கண்ணி - ஆராயுமிடத்தே பெறற்கரியளாக விளங்கும் சிறந்த கண்களையுடைய
சுயம்பிரபை, கடல்வண்ணற்கு உரியள்என்ன - கடல் போன்ற நீனிறவண்ணனாகிய
திவிட்டநம்பிக்கே கிழத்தியாம் உரிமையுடையாள் என்று கூறினர்; ஆதலாலே, தருதற்கு
மகிழ்ந்து வந்தேன் - அத் திவிட்ட நம்பிக்குரிய பொருளாகிய சுயம்பிரபையை அவனுக்கே
அளிக்கும் பொருட்டு மிக்க மகிழ்ச்சியோடு இங்கு வந்தேன், தாழம் ஈங்கு ஒழிக என்றான் -
ஆதலால் நீ காலந்தாழ்த்தலைச் செய்யாதொழிக என்று கூறினான், (எ - று.)

முதல் காரணம். தாழம் ஒழிக - உயர்வு தாழ்வு கருதி உள்ளம் தாழ்ச்சியுறுதலை நீ தவிர்க்க
என்றான் எனினும் ஆம். தாழம்பட்ட ஓசை, குறைந்த ஓசை என்பவாகலின், தாழம் -
குறைதல் ஆயிற்று.

( 146 )