சுயம்பிரபை விமானத்தின் ஏழாவது மாடத்தை எய்துதல்

975.

பொலங்கலம் புலம்ப வாயம் புடைநின்று போற்றுக் கூவ
அலங்கலுங் குழலுந் தாழ வணிஞிமி றரவஞ் செய்ய
இலங்கலங் கனக மாடத் 1தெழுநிலை யேற லுற்றாள்
2விலங்கலின் குவடு சேரு மெல்லியற் றோகை போல்வாள்.

     (இ - ள்.) பொலம் கலம் புலம்ப - பொன் அணிகலன்கள் ஆரவாரிப்பவும்,
ஆயம்புடைநின்று போற்றுக் கூவ - தோழியர் பக்கத்தே சூழ்ந்துநின்று வாழ்த்துப் பாடவும்,
அலங்கலும் குழலும் தாழ - மலர்மாலையும் அளகக்கற்றையும் தாழ்ந்து தூங்கவும், அணி
ஞிமிறு அரவம்செய்ய - அழகிய வண்டுகள் இசை பாடவும், இலங்கல் அம் கனகம் மாடத்து
- அவ்விமானத்தின் கண்ணதாகிய விளங்கும் அழகிய பொன்னாலியன்ற மாடத்தில்,
எழுநிலை ஏறலுற்றாள் - ஏழாவதாகிய மேனிலை மாடத்தே ஏறுகின்ற அச்சுயம்பிரபை,
விலங்கலின் குவடுசேரும் - பொன்மலையின் சிகரத்தே ஏறுதலையுற்ற, மெல்லியற்றோகை
போல்வாள் - மெல்லிய தன்மையுடைய தோகைமயிலை ஒத்துத் தோன்றினாள், (எ - று.)

கனகமாடம் என்றமையால் பொன்விலங்கல் என்க. பொன்னணிகலன் புலம்பவும், ஆயம்
போற்றவும், அலங்கலும் குழலும் தாழவும், ஞிமிறு அரவம் செய்யவும் சுயம்பிரபை
அவ்விமானத்தின் ஏழாம் நிலைமாடத்தே ஏறலுற்றாள் என்க.

( 149 )