(இ - ள்.) நீலமாமணிக் குன்று ஏய்ப்ப - மரகதமணி மலையைப்போன்று, நிழல் எழுந்து இலங்கும் மேனி - ஒளிவிரிந்து திகழும் நீலமேனியையுடையவனும், கோலவாய் அரசகாளை - அழகிய திருவாய்மலரினனாகிய அரசன் மகனும் ஆகிய, குங்குமம் குவவுத் தோளான்மேல் - குங்குமம் அப்பிய திரண்ட தோளையுடைய திவிட்டன்பால், அவாம் கெடுங்கண் ஓட - காட்சி விதுப்புற்ற தன் நெடிய கண்கள் ஓடுவனவாக, அவை மீட்டு விலக்க மாட்டாள் - அங்ஙனம் வலிந்து ஓடும் தன் கண்களை மீட்க இயலாதவளாய், மாலைவாய் குழலி - மலர்மாலை பொருந்திய கூந்தலையுடைய சுயம்பிரபை, சாலமம்மர்கொள் மனத்தள் ஆனாள் - மிகுந்த காம மயக்கமுடைய நெஞ்சுடையவளாயினள், (எ - று.). கருமுகில் உருவக்காளை, இன்னவன் என்று சுயம்பிரபை காட்டிய வுடனே, குங்குமக் குவவுத் தோளான்மேல் அவாம் நெடுங்கண் ஓட, அக்கண்ணை மீட்க வியலாது மயங்கினாள் என்க. |