(இ - ள்.) ஓடைமால் களிற்றினான் - நெற்றிப்பட்டத்தையணிந்த ஆண்யானையையுடைய பயாபதி மன்னன்; வழிமுறை பயின்றுவந்த மரபினார் - வழிவழியாகப் பழகிவந்த பழைமையை உடையவர்கள்; மன்னர் கோமான் - அரசர்க்கரசனாகிய தனது; விழுமலர் அடிக்கண் - சிறந்த தாமரை மலர்போன்ற திருவடிகளிடத்திலே; மிக்க அன்பினார் - மிகுந்த அன்பையுடையவர்கள்; வென்றி நீரார் - வெற்றித்தன்மையே பொருந்தியவர்கள்; எழு வளர்த்து அனைய தோளார் - இரும்புத்தூணை வளர்த்தாற் போன்று விளங்குந் தோளையுடையவர்கள்; இளையவர் - அகவையிற் சிறியவர்கள்; இன்னநீரார் - இத்தன்மை பொருந்தியவர்களான படைத்தலைவர்கள், உழையவர் ஆக வைத்தான் - தன்னுடைய பக்கத்திலே இருக்கும்படியாகச் செய்தான். (எ - று.) வென்றிநீரார் என்பதற்குப் புலன்களை வென்ற தன்மையை உடையவர்கள் என்றுரைப்பினுமாம். அவ்வக் காலங்களிற் சேர்க்கப்படாமல் தொன்றுதொட்டு வழிமுறையாக வருதல் படை வீரர்கட்குச் சிறப்பாகையால் அதனை முதலிற் கூறினார். முகப்பெயரின் ஆயபூ என்றது - திருமுகமாகிய மலரினது என்றவாறு. அரசன் மகிழ்ச்சியுடன் அமர்ந்திருக்கும்போது, பரிசில் வேண்டிய புலவர்கள்அரசனைப் புகழ்ந்து பாடிக்கொண்டு அடைந்த செய்தி இப்பாட்டிற் கூறப்பட்டது. இப்புலவர்கள் எப்போதும் அரசன் மாட்டிருந்து புகழ் பாடுவோரல்லர் என்பதும் பரிசில் விரும்பி வந்தவரென்பதும் புலவர்களை வண்டுகளாக உருவகப்படுத்தியமையின் விளங்கும். பயாபதிக்குக் கற்பகமும், அவன் முகத்திற்குக் கற்பக மலரும் நாவலர்க்கு வண்டும் உவமைகள். புலமயம் - புலன்களின் தன்மை; அறிவின்றன்மையுமாம். “இறைவினை திரியாப் பழவினையாளரை வழிமுறை மரபில் தந்தொழின்முறைநிறீஇ“ என்றார் பெருங் கதையினும். (1. 32 : 83 - 4.) உழையவர் - அமைச்சர் முதலியோர்; ஈண்டுப்படைத் தலைவர் என்க. மரபினார் எனவே அந்தப்படை வீரர்களின் முன்னோரும் பயாபதி மன்னனுடைய தாதை மூதாதை முதலியோரிடத்தில் படைவீரராக இருந்தமை பெறப்பட்டது. வழிமுறை பயின்று வந்த மரபினாரைத் திருவள்ளுவர் “தொல் படை“ என்பர். “உலைவிடத் தூறஞ்சா வன்கண் தொலைவிடத்துத், தொல்படைக் கல்லால் அரிது“ என்பது திருக்குறள். நாடோறும் வளர்தலையுடைய இரும்புத்தூண் ஒன்று உளதாயின் அதனைப்போன்ற தோள் என்பார், 'எழுவளர்த் தனைய தோளார்' என்றார். இன்ன நீரார் என்றதனால், தொன்மை, அன்பு, ஆற்றல், அறை போகாமை, மானம் முதலியநல்லியல்புகளையும் குறித்தார். |