சுயம்பிரபை நிறை யழிதல்

981.

சிறையென்ப தில்லைச் செவ்வே செம்புனல் 1பெருகு மாயி
னிறையென்ப தில்லைக் காம நேர்நின்று சிறக்கு மாயி
னிறைநின்ற துள2தென் பார்சென் றரும்பெற லிவள துள்ள
3நறைநின்று கமழுங் குஞ்சி நம்பிபாற் பட்ட தன்றே.
 

     (இ - ள்.) இறைநின்றது உளது என்பார் - காமம் கதுவப்பட்டார்பால் நிறை சிறிது
உளதாதலும் கூடும் என்பார் உளராயின் அவர் அறியார், என்னை ?, சிறை என்பது
செவ்வே செம்புனல் பெருகுமாயின் இல்லை - அணையிட்டுச் சிறைசெய்தல் என்பது,
புதுப்புனல்மிக்குப் பெருகுமிடத்தே இல்லையாகும், காமம் நேர்நின்று சிறக்குமாயின் -
காமவிழைவும் தனக்குரிய பிற ஏதுக்கள் பெற்றுச் சிறப்புறுமாயின் அவ்விடத்தே, நிறை என்பது இல்லை -நிறை என்று கூறப்படும் அச்செறிவு சிறிதும் இல்லையாய் ஒழியும்; இங்ஙனமாகலின், அரும்பெறல் இவளது உள்ளம் - பெண்மையாற் சிறந்து பெறற்கரிய பேறாகத்திகழும் இச்சுயம்பிரபையின் உள்ளந்தானும், சென்று - நிறைகடந்து போய், நறைநின்று கமழும் குஞ்சி நம்பிபால் - தேன்மணம் நிலைத்து நின்று கமழ்தலையுடைய தலைமயிரையுடைய திவிட்டன்பால், பட்டது - பொருந்துவதாயிற்று, அன்றே :
அசை, (எ - று.)

“சிறையு முண்டோ செழும்புனன் மிக்குழீஇ
நிறையு முண்டோ காமம் காழ்கொளின்“ (மணிமேகலை)

என்னும் அடிகளுடன் இச் செய்யுளை ஒப்புக் காண்க.

( 155 )