(இ - ள்.) அவ்வழி - அவ்வாறு நிகழும்போது, அமிழ்தம் பூத்த அருங்கலம் கொம்பை - நற்குணமாகிய அமிழ்தம் நிறைந்த பெறற்கரிய கலத்தையும் பூங்கொம்பையும் ஒத்தவளாகிய சுயம்பிரபையை, தங்கோன் இவ்வழி வருக என்றது - தம்மரசனாகிய சடி, இங்கு வருவாளாக என்று பணித்தருளியதை, அவள் தமர் இசைப்பக் கேட்டு - அவள் தோழியர் கூறக்கேட்டு, மைவழி நெடுங்கணாளும் - மை தீட்டப்பட்ட நீண்ட கண்களையுடையவளும், செவ்வழி மழலை - செவ்வழி என்னும் பண்போன்றினிய மழலையை மிழற்றுகின்றவளும் ஆகிய சுயம்பிரபை, மனம் புக்க குரிசில் தன்னை - தன்மனத்தே புக்குக் குடிகொண்ட திவிட்டனை, நாணே எழினியா மறைத்து - தன் நாணம் என்னும் பண்பே திசைச்சீலையாகக் கொண்டு பிறர் அறிவுறாவகை மறைத்து, சென்றாள் - அங்குச் செல்வாளாயினாள், (எ - று.) திவிட்டனை மறைத்தென்றது - திவிட்டனால் நிகழ்ந்த தன் நிறையழிதல் முதலியவற்றைப் பிறர் அறியாவகை மறைத்து என்றபடி. |