சடிமன்னன், சுயம்பிரபையைப் பயாபதியை
வணங்கப் பணித்தல்

985.

மங்கையை வலத்துக் கொண்டு மாலையுங் குழலுந் தோடு
மங்கையாற் றிருத்தி மாம னடிகளைப் பணிக வென்று
செங்கயற் கண்ணி தாதை செவ்விரல் குவியப் பற்றிப்
பங்கயப் பழன னாடன் பாதமூ லத்து வைத்தான்.

     (இ - ள்.) மங்கையை - சுயம்பிரபையை, வலத்துக்கொண்டு - தன் வலப்பாகத்திலே
கொண்டு, மாலையும் குழலும் தோடும் - அவள் அணிந்துள்ள மாலையையும் அவளுடைய
அளகத்தையும் தோடுகளையும், அங்கையால் திருத்தி - தனது அழகிய கைகளாலே
சீர்திருத்தி, மாமன் - நின் மாமன் (ஆகிய பயாபதி மன்னனின்), அடிகளைப் பணிக என்று
- திருவடிகளிலே வீழ்ந்து வணங்குவாயாக என்று கூறி, செங்கயற்கண்ணி தாதை - சிவந்த
கயல் மீன்களை ஒத்த கண்ணையுடைய சுயம்பிரபையின் தந்தையாகிய சடியரசன், செவ்விரல்
குவியப்பற்றி - சுயம்பிரபையின் செவ்விய விரல்கள் குவியும்படி தன் கைகளால் பற்றி,
பங்கயப் பழன நாடன் - தாமரை மலர்ந்த கழனிகளையுடைய சுரமை வேந்தனுடைய, பாத
மூலத்து வைத்தான்-திருவடிகளிலே அவள் கரங்கள் பொருந்துமாறு வைத்தான், (எ-று.)

சடிமன்னன், நங்கையை வலத்தே கொண்டு திருத்தி, மாமன் அடிகனைப் பணிக என்று,
விரல் பற்றி நாடன் பாதத்தே வைத்தான், என்க.

( 159 )