(இ - ள்.) மருமகள் வணங்க முன்னே தன் மருகியாகிய சுயம்பிரபை தன் திருவடிகளிலே வணங்கினாளாக அவள் வணங்குதற்கு முன்னரே, வலப்புடைக் குறங்கினேற்றி - பயாபதி வேந்தன் அச்சுயம்பிரபையைத் தன்னுடைய வலப்பக்கத்துத் தொடையின்கண் ஏறியிருக்கும்படி செய்து, கருமைகொள் குவளைக் கண்ணி - கரியநிறம் பொருந்திய குவளைமலரை ஒத்த கண்ணையுடைய சுயம்பிரபையின், கழிநலக்கதிர்ப்பு - மிக்க எழிலினது விளைவினை, நோக்கி - நன்கு உற்றுப்பார்த்து, திருமகளிவளைச் சேரும் செய்தவம் உடைய காளை - திருமகளாகிய இச்சுயம்பிரபையை மனைக்கிழத்தியாகப் பெறுதற்கு மனம் முதலியவற்றை அடக்கிச் செய்தற்குரிய நோன்பினைச் செய்துடைய திவிட்டநம்பி, அருமைகொள் திகிரி - பெறற்கரிய இந்நிலவலயத்தை, ஆள்தற்கு ஐயம் ஒன்று இல்லை என்றான் - ஒரே குடையின் கீழ் ஆள்வதும் திண்ணமே அதற்கு ஒரு சிறிதும் ஐயமின்று என்றான், (எ - று.) திருமகளைப் பெற்றவன் வையம் ஆளுதல் இயல்பாகலின் ஆள்தற்கு ஐயமொன்றில்லை என்றான் என்க. கதிர்ப்பு - மிகுதி. |