(இ - ள்.) யான் அருந்தவம் உடையனே - யானும் செயற்கருந் தவத்தைச் செய்தவனே ஆதல்வேண்டும், அன்றெனில் - அவ்வாறு தவம்செய்திரேன் எனின், அணங்கு போலும் - தெய்வ மடந்தையே போன்ற, பெருந்தகை நங்கை தன்னை - சிறந்த தகுதிகள் அனைத்தும் பொருந்திய இச்சுயம்பிரபையை, பெற்றவன் தாதை என்னும் - வாழ்க்கைத் துணைவியாகப் பெற்றவனாகிய திவிட்டனுக்குத் தந்தை என்று கூறப்படுகின்ற, திருந்திய மொழியும் - வாய்மையேயாகிய இன்சொல்லும், தெய்வச் செல்வமும் - தெய்வத்தன்மையுடைய செல்வங்களும், தெய்வம் அன்னீர் - தெய்வத்தன்மையும் உடையீராகிய நுங்கள், பொருந்திய தொடர்பும் - பொருந்துதற்குரிய தொடர்பும், எய்த - அடைவதற்கு, புவியில் புணருமோ என்றான் - இவ்வுலகத்தே வேறோராற்றற் கூடுங்கொலோ என்று கூறினான், (எ - று.) சிறப்பெல்லாம் நல்வினையாலேயே எய்தற்பாலன ஆகலின் இந்நங்கையை மருகியாகப் பெறும்பேறு எனக்குக் கிடைத்ததனாலும் நுங்கள் தொடர்பு பெற்றதனாலும் யானும் அருந்தவம் பெரிதும் ஆற்றினேன் போலும் என்று மகிழ்ந்தான் என்க. |