புலவர்கள் வருதல்

99. காவல னென்னுஞ் செம்பொற் கற்பகங் கவின்ற போழ்தில்
நாவல ரென்னும் வண்டு நகைமுகப் பெயரி னாய
பூவலர் பொலிவு நோக்கிப் 1புலமயங் 2களிப்ப வாகிப்
பாவல ரிசையிற் றோன்றப் 3பாடுபு பயின்ற வன்றே.
 

     (இ - ள்.) காவலன் என்னும் செம்பொன் கற்பகம் - அரசன் என்கிற சிவந்த
பொன்மயமான கற்பகமரம்; கவின்ற போழ்தில் - அழகுபெற்று விளங்கிய சமயத்தில்;
நாவலர் என்னும் வண்டு - புலவர்கள் என்கின்ற வண்டுகள்; நகைமுகம் பெயரின் ஆய -
மகிழ்ச்சியையுடைய அரசனது முகமென்கிற; பூ அலர் பொலிவு நோக்கி - மலரானது
மலர்ந்துள்ள அழகைப் பார்த்து; புலமயம் களிப்ப ஆகி - தமது ஐம்புலன்களும்
மகிழ்ச்சியை அடையுமாறு; பா அலர் இசையில் தோன்ற - பாடல்கள் விளங்குகின்ற
இசையோடு அமைய; பாடுபு பயின்ற - பாடிக்கொண்டு பொருந்தின. அன்றே - அசை.
(எ - று.)

     முகப்பெயரின் ஆயபூ என்றது - திருமுகமாகிய மலரினது என்றவாறு. அரசன்
மகிழ்ச்சியுடன் அமர்ந்திருக்கும்போது, பரிசில் வேண்டிய புலவர்கள்அரசனைப் புகழ்ந்து
பாடிக்கொண்டு அடைந்த செய்தி இப்பாட்டிற் கூறப்பட்டது. இப்புலவர்கள் எப்போதும்
அரசன் மாட்டிருந்து புகழ் பாடுவோரல்லர் என்பதும் பரிசில் விரும்பி வந்தவரென்பதும்
புலவர்களை வண்டுகளாக உருவகப்படுத்தியமையின் விளங்கும். பயாபதிக்குக் கற்பகமும்,
அவன் முகத்திற்குக் கற்பக மலரும் நாவலர்க்கு வண்டும் உவமைகள். புலமயம் -
புலன்களின் தன்மை; அறிவின்றன்மையுமாம்.

( 30 )