மகளிர்கள் சுயம்பிரபையைக் காண வருதல்

994.

மதுகரி வயந்த சேனை யெனவிவ ராதி யாகப்
புதுமலர்க் கொடியும் பூவுந் துணர்களும் புணர்ந்த பேரார்
கதிரன கலங்க டாங்கிக் காப்புமங் கலங்க ளேந்தி
எதிர்தரு மிளமை யாரோ ராயிரத் தெண்மர் சூழ்ந்தார்.

     (இ - ள்.) மதுகரி வயந்தசேனை என இவர் ஆதியாக - மதுகரி என்பாளும்
வயந்தசேனை என்பாளுமாகிய இவ்விருவர் முதலிய, புதுமலர் கொடியும் பூவும் துணர்களும்
புணர்ந்த பேரார் - புதிய பூங்கொடிகள், மலர்கள், கொத்துக்கள் என்னும் இவையிற்றின்
பரியாயப் பெயர்களையே தம் பெயர்களாகக் கொண்டவர்கள், எதிர்தரும் இளமையோர் -
அப்போது தான் புதிதாக இளம்பருவம் வந்தெய்தப் பெற்றவர்கள், ஓர் ஆயிரத்து எண்மர் -
இத்தகைய மகளிர் ஆயிரத்தெண்மர்கள், கதிர் அனகலங்கள் தாங்கி - கதிரவனைப்போன்று
ஒளிதருகின்ற அணிகலன்களை அணிந்து, காப்பு மங்கலங்கள் ஏந்தி - காவலாகிய
எண்வகை மங்கலப் பொருள்களையும் ஏந்திக்கொண்டு, சூழ்ந்தார் - வந்து மொய்த்தனர்,
(எ- று.)

கமலம், குமுதம், நீலம், முல்லை, மல்லிகை, என்றின் னோரன்ன பெயருடையோர் என்க.
அட்டமங்கலம் - “சாமரை தீபம் தமநியப் பொற்குடம் - காமர் கயலின் இணைமுதலாத் -
தேமருவு - கண்ணாடி தோட்டி கதலிகை வெண் முரசம் - எண்ணிய மங்கலங்கள் எட்டு“
என வரும் (சிந்தாமணி - கோவிந்தை - 64 ஆம் செய்யுள் நச்சி - உரையானும் உணர்க.)

( 168 )