சுயம்பிரபை புன்முறுவல்

998.

வலங்கொண்டு தொழுது வாழ்த்தி
     மற்றவ ரடைந்த போதி
னுலங்கொண்ட வயிரத் தோளா
     னுழைக்கல மகளி 1ரென்று
நலங்கொண்டோ ரார்வங் கூர
     நகைமுக முறுவ றோன்றிப்
2புலங்கொண்ட ததனைக் காப்பான்
     பூவொன்று நெரித்து மோந்தாள்.

     (இ - ள்.) மற்றவர் - அம்மகளிர்கள், வலங்கொண்டு தொழுது வாழ்த்தி
அடைந்தபோதின் - தன்னை வலமாக வந்து வணங்கி வாழ்த்துக்கூறி அவண்
அடைந்தபொழுது, உலங்கொண்ட வயிரத்தோளான் உழைக்கல மகளிர் என்று - இவர்கள்
திரள்கற்போன்ற உறுதியாய தோளையுடைய திவிட்ட நம்பியின் உழைக்கல மகளிர்கள்
ஆவர் என்று கருதுவதனாலே, நலம்கொண்டு ஓர் ஆர்வம்கூர - அந்நலத்தைப்
பற்றுக்கோடாகக்கொண்டு ஒரு விருப்பம் தோன்றிற்றாக, நகைமுகம் முறுவல் தோன்றிப் புலம் கொண்டது - விளக்கமுடைய தன்முகத்தே புதுவதொரு நகைதோன்றிப்
புறத்தார்க்குப் புலனாந்தன்மை எய்திற்று, அதனைக்காப்பான் - அந்நகையை அயலார்
அறியா வண்ணம் காக்கும் பொருட்டு, பூவொன்று நெரித்துமோந்தாள் -
ஆண்டயலிற்கிடந்ததொரு மலரை விரல்களால் நெகிழ்த்து மோப்பாளாய் அந்நகையை
மறைத்தாள், (எ - று.)

அம்மகளிர் அடைந்து வலங்கொண்டு வணங்கியபொழுது, இவர்கள் எம்பெருமானின் ஏவன்
மகளிர் என்று எழுந்த எண்ணத்தாலே, தன்முகத்தே புதிய ஒளியாகிய மெய்ப்பாடு
தோன்றப், புறத்தே கிடந்த பூவினை மோப்பாளாய் அதனைப் பிறர் காணாதபடி மறைத்தாள்
என்க.

(172)