3.குமாரகாலச் சருக்கம்
கலிவிருத்தம்

விசய திவிட்டரின் அவதாரம்
 
70. ஆங்கவர் திருவயிற் றமரர் கற்பமாண்
டீங்குட னிழிந்துவந் திருவர் தோன்றினார்
வாங்குநீர்த் திரைவளர் வளையு மக்கடல்
ஓங்குநீர் நிழலுமொத் தொளிரு மூர்த்தியார்.
உரை
   
விசயன்
 
71. பெண்ணிலாந் தகைப்பெருந் தேவி பேரமர்க்
கண்ணிலாங் களிவள ருவகை கைம்மிகத்
தண்ணிலா வுலகெலாந் தவழ்ந்து வான்கொள
வெண்ணிலாச் சுடரொளி விசயன் றோன்றினான்.
உரை
   
திவிட்டன்
 
72. ஏரணங் கிளம்பெருந் தேவி நாளுறச்
சீரணங் கவிரொளித் திவிட்டன் றோன்றினான்
நீரணங் கொளிவளை நிரந்து விம்மின
ஆரணங் கலர்மழை யமரர் சிந்தினார்.
உரை
   
நன்னிமித்தம்
 
73. திசையெலாந் தெளிந்தன தேவர் பொன்னக
ரிசையெலாம் பெருஞ்சிறப் பியன்ற வேற்பவர்
நசையெலா மவிந்தன நலியுந் தீவினைப்
பசையெலாம் பறந்தன பலர்க்கு மென்பவே.
உரை
   
மைந்தரின் குமார காலச்சிறப்பு
 
74. செய்தமா ணகரியிற் சிறந்து சென்றுசென்
றெய்தினார் குமரராம் பிராய மெய்தலும்
மைதுழாம் நெடுங்கணார் மனத்துட் காமனார்
ஐதுலாங் கவர்கணை யரும்பு வைத்தவே.
உரை
   
விசயன்
 
75. காமரு வலம்புரி கமழு மேனியன்
தாமரை யகவிதழ் தடுத்த கண்ணினன்
தூமரு ளிருடுணர்ந் தனைய குஞ்சியன்
பூமரு பொலங்குழை புரளுங் காதினன்.
உரை
   
76. வாடலில் கண்ணியன் மலர்ந்த மார்பினன்
தாடவழ் தடக்கையன் றயங்கு சோதியன்
கோடுயர் குன்றெனக் குவவுத் தோளினன்
பீடுடை நடையினன் பெரிய நம்பியே.
உரை
   
திவிட்டன்
 
77. பூவையம் புதுமலர் புரையு மேனியன்
தூவிரி தாமரை தொலைத்த கண்ணினன்
தீவிரி யாம்பலிற் சிவந்த வாயினன்
மாவிரி திருமறு வணிந்த மார்பினன்.
உரை
   
78. செங்கயல் வலம்புரி திகிரி யென்றிவை
தங்கிய வங்கைய னடித்தண் போதினன்
மங்கல மழகளி றனைய செல்கையன்
இங்குமுன் மொழிந்தவற் கிளைய நம்பியே.
உரை
   
79. திருவிளைத் துலகுகண் மலரத் தெவ்வர்தம்
புரிவளை நன்னகர்ச் செல்வம் புல்லென
வரிவளைத் தோளியர் மனத்துட் காமநோய்
எரிவளைத் திடுவதோ ரிளமை யெய்தினார்.
உரை
   
80. உவர்விளை கடற்கொடிப் பவள மோட்டிய
துவரிதழ் வாயவர் துளங்கு மேனியர்
அவர்கடர் மருள்கொலோ வனங்க னாய்மல
கவர்கணை கடைக்கணித் துருவுகாட்டினார்
உரை
   
81. கடலொளி மணிவணன் கனவில் வந்தமெ
துடலகம் வெறுவிதா யுள்ளம் வவ்வினான்
விடலில னெம்முயிர் விடுக்குங் கொல்லென
மடவர லவர்குழா மயக்க முற்றதே.
உரை
   
82. வார்வளை வண்ணனென் மனத்து ளான்பிறர்
ஏர்வள் நெடுங்கணுக் கிலக்க மல்லனாற்
கார்வளர் கொம்பனா ரிவர்கள் காமநோய்
ஆர்வளர்த் தவர்கொலென் பவரு மாயினார்.
உரை
   
83. கண்ணிலாங் கவினொளிக் காளை மார்திறத்
துண்ணிலா வெழுதரு காம வூழெரி
எண்ணிலாச் சுடர்சுட விரிந்து நாண்விடாப்
பெண்ணிலாற் பிறிதுயர் பெரிய தில்லையே.
உரை
   
84. திருவளர் செல்வர்மேற் சென்ற சிந்தைநோய்
ஒருவரி னொருவர்மிக் குடைய ராதலால்
உருவளர் கொம்பனா ருள்ளங் காய்வதோர்
எரிவளர்த் திடுவதோ ரிளமை யெய்தினார்.
உரை
   
பயாபதி துயிலுணர்த்து

திருவோலக்க மண்டபம் அடையும் சிறப்பு
 
85. மற்றொர்நா ளமரிகைக் கொடிகொண் மாமணிச்
சுற்றுவான் சுடரொளி தழுவிச் சூழ்மலர்
முற்றிவண் டினம்விடா முடிகொள் சென்னியக்
கொற்றவ னிளையவர் குழைய வைகினான்.
உரை
   
86. மஞ்சுடை மணிநகு மாலை மண்டபத்
தஞ்சுட ரகிற்புகை யளைந்து தேனளாய்ப்
பஞ்சுடை யமளிமேற் பள்ளி யேற்பவன்
செஞ்சுட ரிரிவதோர் திறத்த னாயினான்.
உரை
   
87. மன்னவன் றுயில்விடுத் தருள மைந்தர்பொற்
றுன்னிய வுடையினர் துதைந்த கச்சையர்
பின்னிய ஞாணினர் பிடித்த வில்லினர்
அன்னவ ரடிமுதற் காவ னண்ணினார்.
உரை
   
88. தங்கிய தவழொளி தடாவி வில்லிட
மங்கல வுழைக்கல மருங்கு சேர்ந்தன
அங்கவன் கண்கழூஉ வருளிச் செய்தனன்
பங்கய முகத்தர்பல் லாண்டு கூறினார்.
உரை
   
89. அந்தண ராசிடை கூறி யாய்மலர்ப்
பைந்துணர் நெடுமுடி பயில வேற்றினார்
செந்துணர் நறுமலர் தெளித்துத் தேவர்மாட்
டிந்திர னனையவ னிறைஞ்சி யேத்தினான்.
உரை
   
90. விரையமர் கோதையர் வேணுக் கோலினர்
உரையமர் காவல்பூண் கடையி னூடுபோய்
முரசமர் முழங்கொலி மூரித் தானையன்
அரசவை மண்டப மடைவ தெண்ணினார்.
உரை
   
91. பொன்னவிர் திருவடி போற்றி போற்றியென்
றன்னமென் னடையவர் பரவ வாய்துகிற்
கன்னியர் கவரிகா லெறிப்பக் காவலன்
முன்னிய நெடுங்கடை முற்ற முன்னினான்.
உரை
   
92. மஞ்சிவர் வளநகர் காக்கும் வார்கழல்
நஞ்சிவர் வேனர பதியை யாயிடை
வெஞ்சுடர் வாளினர் விசித்த கச்சையர்
கஞ்சுகி யவர்கண்மெய் காவ லோம்பினார்.
உரை
   
93. வாசநீர் தெளித்தலர் பரப்பி வானகம்
ஏசுநீ ளிருக்கைய விலங்கு சென்னிய
மூசுதே னெடுங்கடை மூன்றும் போய்ப்புறத்
தோசைநீள் மண்டப முவந்த தெய்தினான்.
உரை
   
ஆசிரிய விருத்தம்
 
94. பளிங்கொளி கதுவப் போழ்ந்த பலகைகண் குலவச் சேர்த்தி்
விளங்கொளி விளிம்பிற் செம்பொன் வேதிகை வெள்ளி வேயுட்
டுளங்கொளி பவளத் திண்காற் சுடர்மணி தவழும் பூமி
வளங்கவின் றனைய தாய மண்டப மலிரப் புக்கான்.
உரை
   
பயாபதி அரியாசனத்திருத்தல்
 
95. குஞ்சரக் குழவி கவ்விக் குளிர்மதிக் கோடு போலும்
அஞ்சுட ரெயிற்ற வாளி யணிமுக மலர வூன்றிச்
செஞ்சுட ரணிபொற் சிங்கா சனமிசைச் சேர்ந்த செல்வன்
வெஞ்சுட ருதயத் துச்சி விரிந்தவெய் யவனொ டொத்தான்.
உரை
   
புரோகிதன் முதலியோர் தத்தமக்குரிய ஆசனங்களில் அமர்தல்
 
96. பூமரு புரிந்த நுண்ணூற் புரோகிதன் பொறிவண் டார்க்கும்
மாமல ரணிந்த கண்ணி மந்திரக் கிழவர் மன்னார்
ஏமரு கடலந் தானை யிறைமகன் குறிப்பு நோக்கித்
தாமரைச் செங்கண் டம்மாற் பணித்ததா னத்த ரானார்.
உரை
   
97. முன்னவ ரிருந்த பின்னை மூரிநீ ருலகங் காக்கும்
மன்னவன் கழலைத் தங்கண் மணிமுடி நுதியிற் றீட்டிப்
பின்னவன் பணித்த தானம் பெறுமுறை வகையிற் சேர்ந்தார்
மின்னிவர் கடகப் பைம்பூண் வென்றிவேல் வேந்த ரெல்லாம்.
உரை
   
உழையவர்
 
98. வழிமுறை பயின்று வந்த மரபினார் மன்னர் கோமான்
விழுமல ரடிக்கண் மிக்க வன்பினார் வென்றி நீரார்
எழுவளர்த் தனைய தோளா ரிளையவ ரின்ன நீரார்
உழையவ ராக வைத்தா னோடைமால் களிற்றி னானே.
உரை
   
பாவலரின் பாராட்டு
 
99. காவல னென்னுஞ் செம்பொற் கற்பகங் கவின்ற போழ்தில்
நாவல ரென்னும் வண்டு நகைமுகப் பெயரி னாய
பூவலர் பொலிவு நோக்கிப் புலமயங் களிப்ப வாகிப்
பாவல ரிசையிற் றோன்றப் பாடுபு பயின்ற வன்றே.
உரை
   
வாழ்த்து
 
100. பண்ணமை மகர நல்யாழ்ப் பனுவனூற் புலவர் பாடி
மண்ணமர் வளாக மெல்லாம் மலர்ந்தநின் புகழோ டொன்றி
விண்ணகம் விளங்கு திங்கள் வெண்குடை நிழலின் வைகிக்
கண்ணம ருலகங் காக்குங் கழலடி வாழ்க வென்றார்.
உரை
   
101. மஞ்சுடை மலையின் வல்லி தொடரவான் வணங்க நின்ற
அஞ்சுடர்க் கடவுள் காத்த வருங்குல மலரத் தோன்றி
வெஞ்சுட ரெஃக மொன்றின் வேந்துகண் ணகற்றி நின்ற
செஞ்சுடர் முடியி னாய்நின் கோலிது செல்க வென்றார்.
உரை
   
பயாபதி யாவர்க்கும் காட்சிக்கு எளியனாதல்
 
102. இன்னணம் பலரு மேத்த வினிதினங் கிருந்த வேந்தன்
பொன்னணி வாயில் காக்கும் பூங்கழ லவனை நோக்கி
என்னவ ரேனு மாக நாழிகை யேழு காறும்
கன்னவி றோளி னாய்நீ வரவிடு காவ லென்றான்.
உரை
   
ஒரு நிமித்தகன் வருகை
 
103. ஆயிடை யலகின் மெய்ந்நூ லளவுசென் றடங்கி நின்றான்
சேயிடை நிகழ்வ தெல்லாஞ் சிந்தையிற் றெளிந்த நீரான்
மேயிடை பெறுவ னாயின் வேந்துகாண் குறுவன் கொல்லோ
நீயிடை யறிசொல் லென்றோர் நிமித்திக னெறியிற் சொன்னான்.
உரை
   
104. ஆங்கவ னரசர் கோமான் குறிப்பறிந் தருளப் பட்டீர்
ஈங்கினிப் புகுமி னென்றா னிறைவனை யவனுஞ் சேர்ந்தான்
வீங்கிருந் தானை யானும் வெண்மலர் பிடித்த கையால்
ஓங்கிருந் தானங் காட்டி யுவந்தினி திருக்க வென்றான்.
உரை
   
நிமித்தகன் கூறத்தொடங்குதல்
 
105. உற்றதன் னொழுக்கிற் கேற்ப வுலகுப சார நீக்கி்
கொற்றவன் குறிப்பு நோக்கி யிருந்தபின் குணக்குன் றொப்பான்
முற்றிய வுலகின் மூன்று காலமு முழுது நோக்கிக்
கற்றநூற் புலமை தன்னைக் காட்டுதல் கருதிச் சொன்னான்.
உரை
   
அவன்,கனவையும் அதன் பலனையும் கூறுதல்
 
106. கயந்தலைக் களிற்றி னாயோர் கனாக்கண்ட துளது கங்குல்
நயந்தது தெரியி னம்பி நளிகடல் வண்ணன் றன்னை
விசும்பகத் திழிந்து வந்தோர் வேழம்வெண் போது சேர்ந்த
தயங்கொளி மாலை சூட்டித் தன்னிட மடைந்த தன்றே.
உரை
   
107. மன்மலர்ந் தகன்ற மார்ப மற்றதன் பயனுங் கேட்பின்
நன்மலர் நகைகொள் கண்ணி நம்பிதன் னாம மேத்தி
மின்மலர்ந் திலங்கு பைம்பூண் விஞ்சைவேந் தொருவன் வந்து
தன்மக ளொருத்தி தன்னைத் தந்தனன் போகு மென்றான்.
உரை
   
108. கட்பகர் திவலை சிந்துங் கடிகமழ் குவளைக் கண்ணித்
திட்பமாஞ் சிலையி னாய்! நீ தெளிக நாளேழு சென்றால்
ஒட்பமா யுரைக்க வல்லா னொருவனோ ரோலை கொண்டு
புட்மா கரண்ட மென்னும் பொழிலகத் திழியு மென்றான்.
உரை
   
அவையிலிருந்தோர் கூற்று
 
109. என்றவ னுரைப்பக் கேட்டே யிருந்தவர் வியந்து நோக்கிச்
சென்றுயர் திலதக் கண்ணித் திவிட்டனித் திறத்த னேயாம்
ஒன்றிய வுலக மெல்லா மொருகுடை நீழற் காக்கும்
பொன்றிக ழலங்கன் மார்ப போற்றிபொய் யன்றி தென்றார்.
உரை
   
அரசன் மந்திரசாலையடைந்தமை
 
110. உரையமைந் திருப்ப விப்பா லோடுநா ழிகையொன் றோட
முரசமொன் றதிர்ந்த தோங்கி யதிர்தலு முகத்தி னாலே
அரசவை விடுத்த வேந்த னகத்தநூ லவரை நோக்கி
வரையுயர் மாடக் கோயின் மந்திர சாலை சேர்ந்தான்.
உரை
   
வேறு

மந்திராலோசனை
 
111. கங்குல்வாய்க் கனவவன் கருதிச் சொற்றதும்
மங்கலப் பெரும்பயன் வகுத்த வண்ணமும்
கொங்கலர் தெரியலான் கூறிக் கொய்ம்மலர்த்
தொங்கலார் நெடுமுடி சுடரத் தூக்கினான்.
உரை
   
112. சூழுநீ ருலகெலாந் தொழுது தன்னடி
நீழலே நிரந்துகண் படுக்கு நீர்மையான்
ஆழியங் கிழவனா யலரு மென்பது
பாழியந் தோளினாய் பண்டுங் கேட்டுமே.
உரை
   
113. நற்றவ முடையனே நம்பி யென்றுபூண்
விற்றவழ் சுடரொளி விளங்கு மேனியக்
கொற்றவன் குறிப்பினை யறிந்து கூறிய
மற்றவர் தொடங்கினார் மந்தி ரத்துளார்.
உரை
   
வேறு
 
114. சங்க லேகையுஞ் சக்கர லேகையும்
அங்கை யுள்ளன வையற் காதலாற்
சங்க பாணியான் சக்க ராயுதம்
அங்கை யேந்துமென் றறையல் வேண்டுமோ.
உரை
   
வேறு
 
115. விஞ்சைய ருலகுடை வேந்தன் றன்மகள்
வஞ்சியங் கொடியிடை மயிலஞ் சாயலாள்
எஞ்சலின் றியங்கிவந் திழியு மாய்விடில்
அஞ்சிநின் றவ்வுல காட்சி செல்லுமே.
உரை
   
116. நாமினி மற்றவன் மொழிந்த நாளினால்
தேமரு சிலாதலந் திருத்தித் தெய்வமாம்
தூமரு மாலையாய் துரும காந்தனைக்
காமரு பொழிலிடைக் காவல் வைத்துமே.
உரை
   
அரசன் அந்தப்புரம் அடைதல்
 
117. என்றவர் மொழிந்தபி னிலங்கு பூணினான்
நன்றது பெரிதுமென் றருளி நாடொறும்
சென்றவன் காக்கென மொழிந்து தேங்குழல்
இன்றுணை யவர்கடங் கோயி லெய்தினான்.
உரை
   
துருமகாந்தன் காவல் மேற் செல்லல்
 
118. எரிபடு விடுசுட ரிலங்கு பூணினான்
திருவடி தொழுதுபோந் துரும காந்தனும்
வரிபடு மதுகர முரல வார்சினைச்
சொரிபடு மதுமலர்ச் சோலை நண்ணினான்.
உரை