7.சீயவதைச் சருக்கம்
மருசி சடிவேந்தனது அரண்மனையை அடைதல்
 
573. மற்ற மாநகர் மருசி புக்கபின்
கொற்ற வேலவன் கோயின் மாநெதி்
முற்று வான்கடை மூன்றுஞ் சென்றுகோன்
சுற்று வார்கழ றொழுது துன்னினான்.
உரை
   
சடிவேந்தன் ஆசனம் அளித்தல்
 
574. விலங்கு வார்குழை மிளிர்ந்து வில்லிடக்
கலந்து மாமணிக் கடக மின்செய
அலங்கல் வேலினா னங்கை யாலவற்
கிலங்கு மாநிலத் திருக்கை யேவினான்.
உரை
   
மருசி காரியம் முற்றிவந்ததை வேந்தன் குறிப்பினால் உணர்தல்
 
575. தொகுத்த மாண்புடைத் தூதன் மன்னவன்
வகுத்த மாமணித் தலத்தின் மேன்மனத்
தகத்தி னாலமர்ந் திருப்ப வாங்கவன்
முகத்தி னாற்பொருண் முடிவு கண்ணினான்.
உரை
   
குறிப்பினால் அரசன் உணர்ந்தபின் மருசி கூறுதல்
 
576. தூத னின்முகப் பொலிவி னாற்சுடர்க்
காது வேலினான் கரும முற்றுற
ஓதி ஞானிபோ லுணர்ந்த பின்னது
கோதில் கேள்வியான் றொழுது கூறினான்.
உரை
   
577. வெல்க வாழிநின் வென்றி வார்கழல்
செல்க தீயென சிறக்க நின்புகழ்
மல்க நின்பணி முடித்து வந்தனன்
பில்கு மும்மதப் பிணர்க்கை யானையாய்.
உரை
   
578. இங்கு நின்றுபோ யிழிந்த சூழலும்
அங்கு வேந்தனை யணைந்த வாயிலும்
பொங்கு தானையான் புகன்ற மாற்றமும்
தொங்கன் மார்பினாய் சொல்லு கேனெனா.
உரை
   
579. அள்ளி லைச்செழும் பலவி னார்சுளை
முள்ளு டைக்கனி முறுகி விண்டெனக்
கள்ளு றைத்தொறுங் கழுமி யூற்றறா
வள்ளி லைப்பொழின் மகிழ்ந்து புக்கதும்.
உரை
   
580. முள்ள ரைப்பசு முளரி யந்தடத்
துள்ளி ரைத்தெழு மொலிசெய் வண்டினம்
கள்ளி ரைத்துகக் கண்டு வண்சிறைப்
புள்ளி ரைப்பதோர் பொய்கை சார்ந்ததும்.
உரை
   
581. நித்தி லம்மணி நிரந்து வெள்ளிவேய்
பத்தி சித்திரப் பலகை வேதிகை
சித்தி ரங்களிற் செறிந்து காமனார்
அத்தி ரம்மென அசோகங் கண்டதும்.
உரை
   
582. தண்ணி ழற்சுடர்த் தமனி யத்தினான்
மண்ணி ழற்கொள மருங்கு சுற்றிய
வெண்ணி ழற்சுடர் விளங்கு கற்றலங்
கண்ணி ழற்கொளக் கண்ட காட்சியும்.
உரை
   
583. சுரிந்த குஞ்சியன் சுடரு மேனியன்
எரிந்த பூணின னிலங்கு தாரினன்
வரிந்த கச்சைய னொருவன் வந்துவண்
டிரிந்து பாயவிங் கேறு கென்றதும்.
உரை
   
584. மற்ற வன்றனக் குரைத்த மாற்றமுங்
கொற்ற வன்விடக் கொம்ப னார்சிலர்
உற்ற மங்கலக் கலங்க ளோடுடன்
முற்ற வூண்டொழின் முடிந்த பெற்றியும்.
உரை
   
585. பங்க யத்தலர்ச் செங்கண் மாமுடித்
திங்கள் வண்ணனுஞ் செம்பொ னீள்குழைப்
பொங்கு வெண்டிரைப் புணரி வண்ணனும்
அங்கு வந்தது மவர்கள் சொற்றதும்.
உரை
   
586. நற்பு றத்தன நாற்ப தாம்வய
திப்பு றத்தன விளங்க ருங்கைம்மா
மொய்ப்பு றத்துமேன் முழங்கு தானையோ
டப்பு றத்தர சவைய டைந்ததும்.
உரை
   
587. மன்ன வன்கழல் வணங்கி நின்றதும்
பின்ன வன்றனா லிருக்கை பெற்றதும்
பொன்னி றப்பொறி புகழ்ந்த சாதகந்
துன்னி வாசகந் தொழுது கொண்டதும்.
உரை
   
588. ஓட்டி றானையா னோலை வாசகங்
கேட்ட மன்னவன் கிளர்ந்த சோதியன்
மீட்டொர் சொற்கொடான் விம்மி தத்தனாய்
ஈட்டு மோனியா யிருந்த பெற்றியும்.
உரை
   
589. இருந்த மன்னன்மே லெடுத்த மாற்றமும்
வருந்தி மற்றவன் மறுத்த வண்ணமும்
புரிந்து தொல்குலம் புகன்ற பெற்றியும்
அருந்த கைத்தொடர் பமைந்த வாக்கமும்.
உரை
   
590. பின்னை மன்னவன் பேணி நன்மொழி
சொன்ன வண்ணமுஞ் சுற்ற மாயதும்
பொன்ன கைக்குலம் பொலிந்து கண்கொள
இன்ன கைச்சிறப் பருளி யீந்ததும்.
உரை
   
591. அருங்க லக்குழாத் தரசன் றேவிமார்
பெருங்கு லத்தவர் பெயர்ந்து கண்டதும்
ஒருங்கு மற்றுளோ ருரைத்த வார்த்தையும
சுருங்கில் கேள்வியான் றொழுது சொல்லினான்.
உரை
   
மருசி பயாபதியைப் புகழ்ந்து கூறுதல்
 
592. சொன்ன வார்த்தையிஃ திருக்கச் சொல்லுவ
தின்ன மொன்றுள தடிகள் யான்பல
மன்னர் தங்களை மகிழ்ந்து கண்டனன்
அன்ன நீர்மையா ரரச ரில்லையே.
உரை
   
593. கற்ற நூல்பிறர் கற்ற நூலெலா
முற்ற நோக்கினு முற்ற நோக்கல
உற்ற நூலெலா முற்ற நூல்களாப்
பெற்ற நூலவன் பெற்றி வண்ணமே.
உரை
   
594. எரியு மாணையாற் குளிரு மீகையாற்
பெரியன் மாண்பினாற் சிறிய னன்பினால்
அரியன் வேந்தர்கட் கெளியன் மாந்தர்கட்
குரிய னோங்குதற் கோடை யானையான்.
உரை
   
595. எல்லை நீருல கினிது கண்பட
வெல்லும் வேலவன் விளங்கு தண்ணளி
இல்லை யேலுல கில்லை யாமென
நல்ல னேயவ னாம வேலினாய்.
உரை
   
பயாபதி அமைச்சர் சிறப்பு
 
596. கற்ற நூலினர் கலந்த காதலால்
உற்ற போழ்துயிர் கொடுக்கு மாற்றலார்
கொற்ற வேலவன் குடையி னீழலார்
சுற்ற மாண்பிது சுடரும் வேலினாய்.
உரை
   
குடிமக்களைப் பாராட்டியது
 
597. கோதி லாதவர் மக்கண் மக்கண்மற்
றேதி லாரென வியைந்த தீமையால்
ஆத லாற்றமர் பிறர்க ளாவதங்
கோதி னாலவர்க் குள்ளஃ தில்லையே.
உரை
   
598. வைய மின்புறின் தானு மின்புறும்
வெய்ய தொன்றுறிற் றானும் வெய்துறுஞ்
செய்ய கோலினாய் செப்ப லாவதவன்
றைய தாரினா னருளின் வண்ணமே,
உரை
   
599. வீவில் வீங்குநீர் வேலி வாழ்பவர்க்
காவி யாபவ ரரச ராதலாற்
காவ லோவுங்கொல் லென்று கண்படான்
மாவ றானையம் மன்னர் மன்னனே.
உரை
   
பயாபதியின் புதல்வரைப் பாராட்டியது
 
600. மங்குல் மாமழை மாரி வண்கையான்
பொங்கு காதலம் புதல்வர் தாமவர்
இங்கண் வேந்தர்கட் கேனை மான்கண்முன்
சிங்க வேறெனச் செப்பு நீரரே.
உரை
   
601. கைய வாச்சிலைக் காம னிங்கிரு
மெய்யி னால்வெளிப் பட்ட நீரதால்
வைய மாள்பவன் புதல்வர் வார்கழல்
ஐயன் மார்கடம் மழகின் வண்ணமே.
உரை
   
திவிட்டன் பெருமையைக் கூறியது
 
602. சங்க வண்ணனுக் கிளைய நம்பிதான்
பொங்கு கார்முகில் புரையு மேனியன்
அங்க ணிவ்வுல காள நாட்டிய
மங்க லப்பொறி மன்ன காண்டியால்.
உரை
   
603. செங்கண் மாவலன் தெய்வ மார்பகம்
பங்க யத்"மற் பாவ தன்னுடன்
நங்கு லக்கொடி நங்க "சர்வதற்
சிங்கன் மாதவ மெவன்கொல் செய்த"த.
உரை
   
604. நங்கை மற்றவற் கல்ல தொப்பிலள்
இங்கி வட்கலா லேந்த லில்லவன்
பொங்கு புண்ணியம் புணர்ந்த வாறிது
வெங்கண் யானையாய் வியக்கு நீரதே.
உரை
   
சடிமன்னன் மருசிக்குப் பரிசுபல அளித்தல்
 
605. என்று கூறலு மேந்து நீண்முடி
வென்றி நீள்புகழ் வேக யானையான்
அன்று மற்றவற் கருளி யீந்தனன்
நின்று மின்சுடர் நிதியி னீத்தமே.
உரை
   
சடியரசன் மந்திரத்தவருடன் ஆலோசித்தல்
 
606. மற்ற வன்றனை மனைபு கப்பணித்
துற்ற மந்திரத் தவர்க ளோடிருந்
தெற்று நாமினிச் செய்வ தென்றனன்
வெற்றி நீள்குடை வேந்தர் வேந்தனே.
உரை
   
607. செங்க ணீண்முடிச் செல்வ சென்றொரு
திங்க ணாளினுட் டிவிட்ட னாங்கொரு
சிங்கம் வாய்பகத் தெறுவ னென்பது
தங்கு கேள்வியான் றான்முன் சொன்னதே.
உரை
   
608. ஆத லாலஃ தறியும் வாயிலா
ஓது மாண்பினா னொருவ னொற்றனாய்த்
தீதி றானையாய் செல்ல வைப்பதே
நீதி யாமென நிகழ்த்தி னாரரோ.
உரை
   
மன்னன் ஒற்றாய்தல்
 
609. உய்த்து ணர்ந்தவ ருரைத்த நீதிமேல்
வைத்த வொற்றினன் மன்ன னானபின்
அத்தி றத்தினே யமர்ந்த சிந்தையன்
ஒத்த சுற்றமோ டுவகை யெய்தினான்.
உரை
   
வேறு

அச்சுவகண்டன் காமக் கள்ளாட்டு
 
610. இத்தி சைக்கணிவ் வாறிது செல்லுநாள்
அத்தி சைக்கணஞ் சப்படு மாழியா
னெத்தி சைக்கும்வெய் யோனியன் முன்னுற
வைத்தி சைத்தன மற்றது கூறுவாம்.
உரை
   
611. பஞ்சி மேன்மிதிக் கிற்பனிக் குந்தகை
அஞ்சி லோதிய ரம்முலை நாஞ்சிலா
மஞ்சு தோய்வரை மார்ப மடுத்துழத்
துஞ்ச லோவுந் தொழிலின னாயினான்.
உரை
   
612. முத்த வாணகை மொய்பவ ளத்துணி
ஒத்த வாயமு தொண்கடி கைத்திரள்
வைத்த வாயின னாய்மட வார்கடஞ்
சித்த வாரிக ளுட்சென்று தங்கினான்.
உரை
   
613. ஆரந் தங்கிய மார்பனு மந்தளிர்க்
காருண் கொம்பனை யாருங் கலந்துழித்
தாருங் கொங்கைக ளும்பொரத் தாஞ்சில
வாரம் பட்டணி வண்டின மார்த்தவே.
உரை
   
614. வண்டு தோய்மது வாக்கிவள் ளத்தினுட்
கொண்டு கொம்பனை யார்கள் கொடுப்பவஃ
துண்டு மற்றவ ரொண்டுவர் வாயொளித்
தொண்டை யங்கனி யின்சுவை யெய்தினான்.
உரை
   
615. தாம மென்குழ லார்தடங் கண்ணெனுந்
தேம யங்கிய செங்கழு நீரணி
காம மென்பதொர் கள்ளது வுண்டரோ
யாம மும்பக லும்மயர் வெய்தினான்.
உரை
   
616. சுற்று வார்முலை யார்தந் துகிற்றடம்
முற்று மூழ்கும் பொழுது முனிவவர்
உற்ற போழ்துணர்த் தும்பொழு தும்மலான்
மற்றொர் போழ்திலன் மன்னவ னாயினான்.
உரை
   
617. மண்க னிந்த முழவின் மடந்தையர்
கண்க னிந்திடு நாடகக் காட்சியும்
பண்க னிந்தவின் றீங்குரற் பாடலும்
விண்க னிந்திட வேவிழை வெய்தினான்.
உரை
   
618. வாவி யும்மது மண்டபச் சோலையுந்
தூவி மஞ்ஞை துதைந்தசெய் குன்றமும்
பாவும் வெண்மண லும்புனற் பட்டமு
மேவு நீர்மைய னாய்விளை யாடினான்.
உரை
   
619. மின்னுஞ் செங்கதிர் மண்டிலம் வெய்தொளி
துன்னுந் திங்கட் பனிச்சுடர் தண்ணிது
என்னு மித்துணை யும்மறி யான்களித்
தன்ன னாயின னச்சுவ கண்டனே.
உரை
   
620. சீறிற் றேர்ந்துணர் வின்றிச் செகுத்திடு்
மாறுண் டென்பதொர் மாற்றம் பொறான்மனந்
தேறின் யாரையும் தேறுஞ் செருக்கொடிவ்
வாறு சென்றத வற்கர சென்பவே.
உரை
   
621. தோடு மல்கு சுரும்பணி கோதையார்
கோடி மென்றுகிற் குய்யத் தடம்படிந்
தாடித் தன்னணை யாமையிற் பூமகள்
ஊட லுற்றிடம் பார்த்துள ளாயினாள்.
உரை
   
சதவிந்து அச்சுவகண்டனுக்குப் புத்திமதி கூறல்
 
622. ஆங்கொர் நாளிறை பெற்றறி வின்கடல்
தாங்கி னான்சத விந்துவென் பானுளன்
நீங்க லாப்புக ழான்ற னிமித்திகன்
வீங்கு வெல்கழ லாற்கு விளம்பினான்.
உரை
   
623. மன்ன கேள்வளை மேய்திரை மண்டிலந்
தன்னை யாள்பவர்க் கோதின தங்கணே
பன்னி னாறு பகைக்குல மாமவை
முன்னம் வெல்கவென் றான்முகம் நோக்கினான்.
உரை
   
624. தன்னை வென்றதண் டார்வய வேந்தனைப்
பின்னை வென்றி பெறற்கரி தாதலான்
மன்ன மற்றவ னாளும் வரைப்பகம்
பொன்னின் மாரி பொழிந்திடு நன்றரோ நின்றதே.
உரை
   
625. மாசி றண் டன்ன தோண் மன்ன மன்னிய
கோசி றண்டத்த னாய்விடிற் கொற்றவன்
ஏசி றண்டம் பரவவிவ் வையகம்
ஆசி றண்டத்த னாயினி தாளுமே.
உரை
   
626. பெற்ற தன்முத லாப்பின் பெறாததும்
சுற்றி வந்தடை யும்படி சூழ்ந்துசென்
றுற்ற வான்பொருள் காத்துயரீகையுங்
கற்ற வன்பிறர் காவல னாகுவான்.
உரை
   
627. அருக்கன் றன்னறி வாக வலர்ந்தநீர்த்
திருக்க வின்றசெல் வச்செழுந் தாமரை
செருக்கெ னப்படுந் திண்பனி வீழுமேல்
முருக்கு மற்றத னைமுகைத் தாரினாய்.
உரை
   
628. இகழ்ச்சி யிற்கெடு வார்களை யெண்ணுக
மகிழ்ச்சி யுண்மதி மைந்துறும் போதனெப்
புகழ்ச்சி நூலுட் புகன்றனர் பூவினுட்
டிகழ்ச்சி செல் பொன்மணிமுடி மன்னனே.
உரை
   
629. நெறியி னீதிக்க ணேரிவை யொப்பவும்
அறிதி நீயவை நிற்கவ ழன்றுநீ
செறுதி யேனுஞ்செம் பொன்முடி மன்னவோர்
உறுதி யானுரைப் பானுறு கின்றதே.
உரை
   
சதவிந்துவின் சொற்களுக்கு அச்சுவக்கிரீவன் செவிசாய்த்தல்
 
630. என்ற லும்மிணர் வேய்முடி மாலையான்
நன்று சொல்லுக வென்று நகைமணிக்
குன்ற மன்னதிண் டோன்மிசைக் குண்டலஞ்
சென்று மின்சொரி யச்செவி தாழ்த்தினான்.
உரை
   
திவிட்டன் அச்சுவக்கிரீவனுக்குப் பகை என்பதைச் சதவிந்து குறிப்பிடல்
 
631. பூமி மேற்புரி சைம்மதிற் போதன
நாம நன்னக ராளு நகைமலர்த்
தாம நீண்முடி யான்றன் புதல்வர்கள்
காம வேளனை யாருளர் காண்டியால்.
உரை
   
632. ஏந்து தோளவ ருள்ளிளை யானமக்
காய்ந்த தொல்பகை யாகுமென் றேயுறப்
போந்தொர் புன்சொ னிமித்தம் புறப்பட
வேந்த யான்மனத் தின்மெலி கேனரோ.
உரை
   
அச்சுவக்கிரீவன் தன் வலியை மதித்து அலட்சியமாகச் சிலகூறுதல்
 
633. முத்த நீண்முடி யான்முன்ன மற்றதற்
கொத்த வாறுணர்ந் தீயென வென்செயு
மைத்த கைமனத் தான்மனித் தன்னெனக்
கைத்த லங்கதிர் வீச மறித்தனன்.
உரை
   
634. மிகையின் வந்தவிச் சாதர வேந்தர்தந்
தொகையை வென்றவென் றோளுள வாப்பிற
பகையி னிப்படர்ந் தென்செயு மென்றனன்
நகைகொ ணீண்முடி நச்சர வம்மனான்.
உரை
   
635. மாசி லாலவட் டத்தெழு மாருதம்
வீச விண்டொடு மேருத் துளங்குமோ
பேசின் மானிடப் பேதைக ளாற்றலால்
ஆசி றோளிவை தாமசை வெய்துமோ.
உரை
   
636. வேழத் தின்மருப் புத்தடம் வீறுவ
வாழைத் தண்டினு ளூன்ற மழுங்குமோ
ஆழித் தானவர் தானையை யட்டவென்
பாழித் தோள்மனித் தர்க்குப் பணியுமோ.
உரை
   
637. வேக மாருதம் வீசவிண் பாற்சிறு
மேக சாலம் விரிந்தெதிர் செல்லுமோ
ஏக மாயவென் சீற்றமஞ் சாதெதி
ராக மானுடர் தாமசை கிற்பவோ.
உரை
   
638. குலிச மிந்திரன் கொண்டு பணிக்குமேன்
மலையின் மாசிக ரங்களும் வீழ்த்திடு
நிலைய வெஞ்சுட ராழி நினைப்பனேற்
றொலைவில் வானவர் தோளுந் துணிக்குமே.
உரை
   
639. விச்சை மற்றவர் தம்மை விடுப்பதோர்
இச்சை யென்கணுண் டாமெனின் யாவரே
அச்ச மின்றிநிற் பாரந் நிமித்த நூல்
பொச்ச லாங்கொல் புலந்தெழு நீர்மையாய்.
உரை
   
640. புலவர் சொல்வழி போற்றில னென்பதோர்
அலகில் புன்சொலுக் கஞ்சுவ னல்லதேல்
உலக மொப்ப வுடன்றெழு மாயினும்
மலைவன் மற்றதன் கண்மதிப் பில்லையே.
உரை
   
641. ஆத லாலதற் கேற்ற தமைச்சர்கள்
ஓதி யாங்குணர்ந் தீகவென் றெட்டினான்
யாதுந் தன்கணல் லார்செயற் கேன்றதோர்
ஏத முண்டெனு மெண்ணமில் லாதவன்.
உரை
   
மந்திரச் சுற்றத்தாரின் கூற்று
 
642. அலங்க லாழியி னானது கூறலும்
கலங்கு நூற்கரு மத்தொழின் மாக்கடாம்
புலங்கொள் சூழ்ச்சிய ராகிப் புகன்றனர்
உலங்கொள் தோளவ னுக்குணர் வாயினார்.
உரை
   
643. எரியுந் தீத்திர ளெட்டுணைத் தாயினுங்
கரியச் சுட்டிடுங் காந்திக் கனலுமேற்
றெரியிற் றொல்பகை தான்சிறி தாயினும்
விரியப் பெற்றிபின் வென்றடு கிற்குமே.
உரை
   
644. முட்கொ ணச்சு மரமுளை யாகவே
உட்கி நீக்கி னுகிரினுங் கொல்லலாம்
வட்கி நீண்டதற் பின்மழுத் தள்ளினும்
கட்கு டாரமுத் தாங்களை கிற்பவே.
உரை
   
645. சிறிய வென்றிக ழார்பகை சென்றுசென்
றறிய லாவவன் றாலணி மாமலர்
வெறியும் வேரியும் விம்மி விரிந்துதேன்
செறியுந் தொங்கற்செம் பொன்முடி மன்னனே.
உரை
   
அரிமஞ்சுவின் யோசனை
 
646. அஞ்சி நின்றவர் கூறிய பின்னரி
மஞ்சு வென்பவன் சொல்லுமற் றாங்கவன்
செஞ்சே வேபகை யாமெனிற் றேர்ந்துகண்
டெஞ்சி றொல்புக ழாய்பின்னை யெண்ணுவாம்.
உரை
   
647. பகைய லாதவ ரைப்பகை யாக்கலும்
நகையி றீமனத் தாரைநண் பெண்ணலும
முகையின் வேய்ந்த மொய்ம்மலர்க் கண்ணியாய்
மிகையின் மற்றவை பின்னை வெதுப்புமே.
உரை
   
648. அறியத் தேறுந் திறத்தவெவ் வாறெனிற்
றிறையிற் கென்று விடுதும்விட் டாற்றிறை
முறையிற் றந்து முகமன் மொழிந்தெதிர்
குறையிற் கொற்றவ குற்றமங் கில்லையே.
உரை
   
அச்சுவக்கிரீவன் பயாபதியினிடம் தூது போக்கல்
 
649. என்ற லும்மிது நன்றென வேந்தொளி
நின்ற நீண்முடி நீடிணர்க் கண்ணியான
சென்று தூதுவர் தாந்திறை கொள்கென
வென்றி வேலவன் மேல்விடை யேயினான்.
உரை
   
650. ஊட்ட ரக்குண்ட கோலரொண் கோலத்தர்
ஓட்ட ரும்பொறி யொற்றிய வோலையர்
நாட்டி யம்முணர் வாரொரு நால்வர் சேண்
மோட்டே ழின்முகில் சூழ்நெறி முன்னினார்.
உரை
   
வேறு

தூதுவர் பயாபதியை அடைதல்
 
651. தீதறு தென்மலை மாதிர முன்னுபு
தூதுவர் சூழ்சுடர் சூடிய சூளி்கை
ஓதின ரோதி யுலப்பற வோங்கிய
போதன மாநகர் புக்கன ரன்றே.
உரை
   
652. செஞ்சுடர் மின்னொளி சென்று பரந்திட
மஞ்சொடு வைகிய மாமணி மாளிகை
வெஞ்சுடர் வீதி விலக்குவ கண்டுதம்
விஞ்சையர் செல்வம் வெறுத்தன ரன்றே.
உரை
   
653. மூரிமு ழாவொலி விம்மி முரன்றெழு
காரிமி ழார்ஒலி யான்மயி லாலுவ
சோரிமு ழாவிழ விற்றெரு துற்றபின்
சீரிமி ழாற்பொலி வெய்தினர் சென்றே.
உரை
   
654. சூளிகை சூடிய சூல விலைத்தலை
மாளிகை மேன்மழை மாமுகில் போழ்தலின்
நீளிய நீரரு வித்திரள் வீழ்வன
காளைக டாதை நகர்ப்பல கண்டார்.
உரை
   
655. கூடுநர் கோவை மணிக்கலை யுக்கவும்
ஊடினர் சிந்திய வொண்சுடர் மாலையு
மூடிய மூரி நெடுந்தெரு வொப்பவும்
ஊடுசெ லற்கரி தாயிட ருற்றார்.
உரை
   
656. மூரி நடைக்களி யானை மதத்தினொ
டேரி னடைக்கலி மாதம் விலாழியு
மோரி நுரைப்ப வுகுத்த பெருங்கடை
வேரி வெறிக்கள மொப்பது கண்டார்.
உரை
   
657. வண்டு படக்குவ ளைப்பிணை நக்கலர்
விண்ட மதுப்பரு கிக்களி யின்மதர்
கொண்டு நடைக்களி யன்ன மிரைப்பதொர்
மண்டு புனற்புரி சைப்பதி சார்ந்தார்.
உரை
   
658. கோயின் முகத்தது கோடுயர் சூளிகை
வேயின் முகத்ததின் மாமழை வீழ்வது
ஞாயின் முகத்த நகைத்திரண் முத்தணி
வாயின் முகத்து மடுத்திது சொன்னார்.
உரை
   
659. வேய்தலை நீடிய வெள்ளி விலங்கலின்
ஓய்தலி லொண்சுட ராழியி னான்றமர்
வாய்தலி னின்றனர் வந்தனெ மன்னன்முன்
நீதலை சென்றுரை நீள்கடை காப்போய்.
உரை
   
660. என்றவர் கூற விருங்கடை காவலன்
நன்றென நாறொளி நீண்முடி யானடி
மன்ற வணங்கி மொழிந்தனன் மன்னனும்
ஒன்றிய போதக வென்ப துரைத்தான்.
உரை
   
தூதுவர் தாம் கொணர்ந்த ஓலையைப் பயாபதியிடம் கொடுத்தல்
 
661. பொன்னவிர் நீள்கடை காவலன் போதக
வென்னலி னெய்தி யிலங்கொளி நீண்முடி
மன்னவன் வார்கழல் வாழ்த்தி மடக்கிய
சொன்னவி லோலைகை தொழுதனரீந்தார்.
உரை
   
தூதுவரின் கூற்று
 
662. வாசகன் மற்றது வாசினை செய்தபின்
மாசக னீதமுடி மன்னவன் முன்னிவை
தேசக மூசிய வாழியி னான்தமர்
ஓசைக ளோலைகொ டொப்ப வுரைத்தார்.
உரை
   
663. ஊடக மோடி யெரிந்தொளி முந்துறும்
ஆடக மாயிர கோடியு மல்லது
சூடக முன்கையர் தோடக மெல்லடி
நாடக ராயிர நாரியர் தம்மையும்.
உரை
   
664. தெண்டிரை சிந்திய சங்கொடு செங்கதிர்
எண்டர ளம்பவ ழக்கொடி யீட்டமும்
கண்டிரள் முத்தொடு காழகி லந்துகில்
பண்டரு நீரன வும்பல பண்டமும்.
உரை
   
665. வெண்கதிர் முத்தகில் வேழ மருப்பொடு்
கண்கவர் சாமரை வெண்மயி ரின்கணம்
தண்கதிர் வெண்குடை யாய்தரல் வேண்டுமிஃ
தொண்சுட ராழியி னானுரை யென்றார்.
உரை
   
வேறு

பயாபதியின் சிந்தனை
 
666. வேந்தன்மற் றதனைக் கேட்டே வேற்றுவ னெறிந்த கல்லைக்
காந்திய கந்த தாகக் கவுட்கொண்ட களிறு போலச்
சேந்தவ ருரைத்த மாற்றஞ் சிந்தையு ளடக்கி வைத்து
நாந்தகக் கிழவர் கோமா னயந்தெரி மனத்த னானான்.
உரை
   
667. கருத்துமாண் குலனுந் தேசுங் கல்வியும் வடிவுந் தம்மில்
பொருத்தினாற் பழிக்க லாகாப் புலமைமிக் குடைய ரேனும்
ஒருத்தனுக் கொருத்தன் கூறக்கேட் டுற்றதுச் செய்து வாழத்
திருத்தினா னிறைவ னேகாண் செய்வினைக்கிழவ னென்பான்.
உரை
   
668. மதியினை மலரச் சூழ்ந்து வருந்தித்தாம் படைக்கப் பட்ட
நிதியினை நுகர்து மன்று நினைத்தினி திருந்த போழ்திற்
பதியினைக் கலக்கிச் சென்று பறித்துத்தாம் பிறர்க்கு நீட்டும்
விதியினை விலக்க மாட்டா மெலிபவால் வெளிய நீரார்.
உரை
   
669. ஒளியினாற் பெரிய னாய வொருவனுக் குவப்பச் செய்தோர்
அளியினால் வாழ்து மென்னும் மவாவினு ளழுந்து கின்றாம்
தெளியநா மிதனைக் கண்டும் செய்வினைத் திறங்க ளோராம்
அளியமோ வளியஞ் சால வறிவினாற் பெரிய மேகாண்.
உரை
   
670. அன்றுநா முயலப் பட்ட விணைகள்மற் றனைய வானால்
இன்றுநா மவலித் தென்னை யினிச்செய்வ தெண்ணினல்ல
வென்றியான் விளங்கு மாழி யவர்கட்கு மேலை வேந்தர்
ஒன்றியாங் குவப்பித் தாண்ட துரைப்பக்கேட் டுணர்ந்தா மன்றே.
உரை
   
பயாபதி திறை கொடுக்க உடன்படல்
 
671. என்றுதன் மனத்தி னெண்ணி யிலங்குகோற் கைய ராகி
நின்றகே சரரை நோக்கி நிலமன்ன னென்னை சொன்னான
ஒன்றியா மிங்க ணுள்ள தொருப்படுத் துய்ப்பக் கொண்டு
சென்றுறு மிறைவர்க் கெம்வா யின்னுரை தெரிமி னென்றான்.
உரை
   
திறை கொடுக்க நினைத்த பயாபதியின் செயல்
 
672. ஆளிகட் கரச னன்ன வரசர்கோ னதனைக் கூறி
வாளிவிற் றடக்கை வெம்போர் மணிவரை யனைய மார்பிற்
காளைக ளிதனைக் கேட்பிற் கனல்பவா லவரை யின்னே
மீளுமா றமைப்ப னென்று வேண்டுவ விதியி னீந்தான்.
உரை
   
நாடக மகளிரை அழைப்பித்தல்
 
673. செய்யவாய்ப் பசும்பொ னோலைச் சீறடிப் பரவை யல்குல்
ஐயநுண் மருங்கு நோவ வடிக்கொண்ட குவவுக் கொங்கை
வெய்யவாய்த் தண்ணெ னீலம் விரிந்தனெ விலங்கி நீண்ட
மையவா மழைக்கட் கூந்தன் மகளிரை வருக வென்றான்.
உரை
   
674. அணிமுழா வனைய தோளா னருளிய தறிந்த போழ்தின்
மணிமுழாச் சிலம்பக் கொண்ட மண்டப வரங்கி னங்கண்
குணிமுழாப் பெயர்த்த பாணி பயிற்றுத லிலயங் கொண்ட
கணிமுழா மருங்குற் பாடற் கலிப்பிவை தவிர்த்துச் சென்றார்.
உரை
   
675. மஞ்சிடை மதர்த்த மஞ்ஞை வான்குழா மென்ன வாங்கண்
வெஞ்சுடர் விளங்கு மாடத் திடைநிலை விரவித் தோன்றி
வஞ்சிநுண் மருங்கு னோவ மணிநகைக் கலாவ மின்னச்
செஞ்சுடர்ச் சிலம்பு பாடத் தேன்றிசை பரவச் சேர்ந்தார்.
உரை
   
அழைப்பித்த மகளிரைத் திறையாக ஈதல்
 
676. மாடெலா மெரிந்து மின்னும் வயிரக்குண் டலத்தோ டம்பொற்
றோடுலாந் துளங்கித் தோன்றுஞ் சுடிகைவாண் முகத்து நல்லார்
பாடலா னரம்பின் தெய்வப் படிவங்கொண் டனைய நீரார்
ஆடலா லரம்பை யொப்பா ராயிர ரவரை யீந்தான்.
உரை
   
பிற அருங்கலங்களை ஈதல்
 
677. காய்ந்தொளிர் பவழச் சாதிக் கடிகைகள் காண மின்னுப்
பாய்ந்தெழு சுடர்ச்சங் கீன்ற பருமணித் தரளக் கோவை
ஏந்தெழிற் காக துண்ட மருப்பிணை கவரிக் கற்றை
ஆய்ந்தெழின் மகரப் பூணா னுவப்பன வனைத்து மீந்தான்.
உரை
   
தூதுவர் புறப்படும் சமயம் விசயதிவிட்டர் அச்செய்தியை அறிந்தமை
 
678. அஞ்சுடர் வயிரப் பூணா னருளினன் விடுப்ப வாங்கண்
விஞ்சையர் விமானந் தோற்ற மேலருங் கலங்க லேற்றிச்
செஞ்சுடர்த் திலகச் செவ்வாய் மகளிரை விமானஞ் சேர்த்திக்
கஞ்சிகை மறைக்கும் போழ்திற் காளைக ளதனைக் கண்டார்.
உரை
   
மைந்தர் ஒரு குள்ளனால் நிகழ்ந்தவற்றை அறிதல்
 
679. என்னிது விளைந்த வாறித் தூதுவர் யாவ ரென்று
கன்னவில் வயிரத் திண்டோட் கடல்வண்ணன் வினவ யாரும்
சொன்னவின் றுரைக்க மாட்டார் துட்கென்று துளங்க வாங்கோர்
கொன்னவில் பூதம் போலுங் குறண்மக னிதனைச் சொன்னான்.
உரை
   
680. அறைகழ லரவத் தானை யச்சுவக் கிரீவ னென்பா
னிறைபுக ழாழி தாங்கி நிலமெலாம் பணிய நின்றான்
திறைதர வேண்டு மென்று விடுதரச் செருவந் தானை
இறைவனு மருளிச் செய்தா னிதுவிங்கு விளைந்த தென்றான்.
உரை
   
வேறு

திவிட்டன் சினங்கொண்டமை
 
681. திறைக்கட னென்னுமத் தீச்சொற் கேட்டலு
நிறைக்கட னிரம்பிய நெஞ்சத் தீங்கலுண்
முறைக்கட முளைப்பதோர் முனிவி னொள்ளெரி
கறைப்படு படையவன் கனல மூட்டினான்.
உரை
   
682. முடித்தலை முத்துதிர்த் தாங்கு நெற்றிமேற்
பொடித்தன சிறுவியர்ப் புள்ளி யொள்ளெரி
அடுத்தெழு சுடரகத் துக்க நெய்த்துளி
கடுத்தவாட் கண்ணுநீர்த் திவலை கான்றவே.
உரை
   
683. படத்திடைச் சுடர்மணி தீண்டப் பட்டெரி
கடுத்திடு மரவெனக் கனன்ற நோக்கமோ
டடுத்தெரிந் தழல்நகை நக்கு நக்கிவை
எடுத்துரை கொடுத்தன னிளைய காளையே.
உரை
   
திவிட்டன் தூதுவருக் குரைத்த மாற்றம்
 
684. உழுதுதங் கடன்கழித் துண்டுவேந்தரை
வழிமொழிந் தின்னணம் வாழு மாந்தர்போல்
எழுதிய திறையிறுத் திருந்து வாழ்வதே
அழகிது பெரிதுநம் மரச வாழ்க்கையே.
உரை
   
685. நாளினுந் திறைநுமக் குவப்பத் தந்துநா
டாளுது மன்றெனி லொழிது மேலெம
தோளினுந் தொடுகழல் வலியி னானுமிவ்
வாளினும் பயனெனை மயரி மாந்தர்காள்.
உரை
   
686. விடமுடை யெரிக்கொடி விலங்கு நோக்குடை
அடலுடைக் கடுந்தொழி லரவி னாரழற்
படமுடை மணிகொளக் கருதிப் பார்ப்பதோர்
மடமுடை மனத்தனும் மயரி மன்னனெ.
உரை
   
687. இருங்கலிப் படையினு மிகலி னாலுமெம்
அருங்கல மிவைபெறற் கரிய வாவதோர்
மருங்குள தெனினது மகளி ராற்சில
பெருங்கலந் தாங்கினாற் பெறலு மாகுமே.
உரை
   
688. பாழியான் மெலிந்தவர் திறத்துப் பண்டெலாம்
ஆழியால் வெருட்டிநின் றடர்த்திர் போலுமஃது
ஏழைகா ளினியொழிந் திட்டுச் செவ்வனே
வாழுமா றறிந்துயிர் காத்து வாழ்மினே.
உரை
   
689. அன்றெனிற் றிறைகொளக் கருதி னாங்கொரு
குன்றின்மேற் பெறுவதென் வந்து கொள்கயான்
நின்றுதன் னெஞ்சக நிறைய வீழ்வன
வென்றியம் பகழியும் விசும்பு மீவனே.
உரை
   
690. இறைவளை மகளிர்போற் கழறி யென்னையெங்
குறையிது கூறுமின் சென்று தூதிர்காள்
திறையினை மறுத்தவர் திறத்துச் செய்வதோர்
முறையுள தெனினது முயன்று கொள்கவே.
உரை
   
தூதரின் புறப்பாடு
 
691. உட்கவாங் குரைத்தலு மொளிர்பொன் மாழையுங்
கட்கமழ் கோதையர் கணமு மீண்டது
வட்கிநம் மிறைவற்கு வலிது தெவ்வெனத்
துட்கெனு மனத்தினர் தூத ரேகினார்.
உரை
   
வேறு

தூதர் நிகழ்ந்தவற்றை அரிமஞ்சுவினிடம் கூறுதல்
 
692. போகிய தூதர் தங்கோன் பொலங்கழ றொழுத லஞ்சி
ஆகிய தறிந்து சூழு மரிமஞ்சு வவனைக் கண்டே
ஏகிய புகழி னானைக் கண்டது மீயப் பட்ட
தோகையஞ் சாய லார்தங் குழாங்களு நெதியுஞ் சொல்லி.
உரை
   
693. மீட்டிளங் குமரன் கண்டு விடுசுட ரிலங்கு நக்கு
மோட்டிளங் கண்ணி தீய முனிந்தழன் முழங்க நோக்கி
ஊட்டிலங் குருவக் கோலோர் தங்களுக் குரைத்த வெல்லாம்
தோட்டிலங் குருவத் தொங்க லமைச்சற்குச் சொல்லி யிட்டார்.
உரை
   
திவிட்டனை அழிக்க அரிமஞ்சு தானே உபாயந் தேடுதல்
 
694. அரும்பெற லறிவின் செல்வ னரிமஞ்சு வதனைக் கேட்டே
பெரும்பகை யதனைக் கேட்பிற் பெரியவன் சிறிது நோனான்
இரும்பகை யிதனை யென்கொல் விலக்குமா றென்று தானே
சுரும்பிவர் தொடையன் மார்பன் சூட்சிகொண் மனத்தனானான்.
உரை
   
சீயமாகச் சென்று திவிட்டனை மாய்க்கும்படி அரிகேதுவை ஏவுதல்
 
695. மின்றொடர்ந் திலங்கு பூணான் விளைவுறா விளைமை தன்னால்
நன்றுதீ தென்னுந் தேர்ச்சி நவின்றில னாத லால்யான்
ஒன்றவோர் மாயங் காட்டி வுளைவித்துக் குறுக வோடிக்
குன்றிடைச் சீயம் தன்மேற் கொளப்புணர்த் திடுவ னென்றான்.
உரை
   
696. அன்னண மனத்தி னாலே யழைத்தரி கேது வென்னு
மின்னணங் குருவப் பைம்பூண் விஞ்சைய னவனைக் கூவிக்
கன்னவி றோளி னாற்குக் கருமமீ தென்று காட்டி
மன்னுமோர் மாயச் சீய மாகென வகுத்து விட்டான்.
உரை
   
697. ஒள்ளெரி நெறிப்பட் டன்ன சுரியுளை மலைகண் போழும்
வள்ளுகிர் மதர்வைத் திங்கட் குழவிவா ளெயிற்றுப் பைங்கண்
உள்ளெரி யுமிழ நோக்கி யுருமென வதிரும் பேழ்வாய்க்
கொள்ளரி யுருவு கொண்டான் கொடியவன் கடிய சூழ்ந்தான்.
உரை
   
சீயத்தின் செயல்
 
698. இலைத்தடஞ் சோலை வேலி யிமவந்த மடைந்து நீண்ட
சிலைத்தடந் தோளி னார்தஞ் சிந்துநா டதனைச் சேர்ந்து
மலைத்தடம் பிளந்து சிந்த மண்புடை பெயர முந்நீர்
அலைத்துடன் கலங்கி விண்பா லதிரநின் றுரறி யிட்டான்.
உரை
   
விலங்கினமும் மனிதரும் அஞ்சிச் சோருதல்
 
699. பொடித்தலை புலம்பிக் கானம் போழ்ந்துமா நெரிந்து வீழ
அடித்தலை கலங்கி வேழம் பிடிகேளா டலறி யாழப்
புடைத்துழிப் பதடி போலத் துறுகற்கள் புரண்டு பொங்க
இடித்தலின் மனித்த ரெல்லா மெயிறுற விறுகிச் சோர்ந்தார்.
உரை
   
பழைய தூதுவரை மீட்டும் திவிட்டன்பால் அரிமஞ்சு போக்குதல்
 
700. அப்படி யவனை யவ்வா றமைத்தபி னமைச்ச னாங்கண்
மெய்ப்புடை தெரிந்து சொன்ன தூதுவ ரவரை மீட்டே
இப்படி யிவைகள் சொல்லிப் பெயர்மினீ ரென்று வென்றிக்
கைப்படை நவின்ற வெம்போர்க் காளையைக் கனற்ற விட்டான்.
உரை
   
வேறு

தூதுவர் திவிட்டனை யடைந்து கூறினமை
 
701. ஆங்குத் தூதுவ ரதிர்முகி லாறுசென் றிழிந்து
பூங்கட் டேம்மொழிப் போதனக் திறைவன்றன் புதல்வரி
வீங்கு பைங்குழல் விடுசுடர் மிடைமணிப் பூணோர்
ஓங்கு தானையோ டுலாப்போந்த விடஞ்சென்றீ துரைத்தார்.
உரை
   
702. திறையின் மாற்றமுந் திறையினை விலக்கிய திறமும்
குறையென் றெங்களைக் குமரநீ பணித்ததுங் கூற
வறையும் பைங்கழ லாழியந் தடக்கையெமரைச
னறையுங் குஞ்சியா னன்றுநன்றெனச் சொல்லி நக்கான்.
உரை
   
703. தளையின் விண்டுதேன் றயங்கிய தடங்கொடார் மார்ப
இளையையென்பது மெங்கள்வாய்க் கேட்டபினிறைவன்
ஒளியு மாற்றலுந் தன்கணொன் றுள்ளது நினையான்
அளியன் பிள்ளைதா னுரைத்தவென் றழன்றில னமர்ந்தான்.
உரை
   
704. அறியு மாயிற்ற னரும்பெற னாட்டினை யரிய
வெறியு மின்னுரு மெனவிடித் திறுவரை முழையு
ளுறையுங் கோளரி யொழிக்கலா னமக்குவந் தீயுநீ
திறையு மீட்கிய வலித்தவச் செருக்குடைச் சிறியோன்.
உரை
   
திவிட்டன் வினா
 
705. என்று மற்றது மொழிமினென் றுரைத்தெமை விடுத்தான்
என்ற மாற்றமஃ திசைத்தலு மிளையவ னென்னே
சென்ற நாட்டகஞ் சிலம்பநின் றிடித்துயி ரலறக்
கொன்றொர் கோளரி கொடுமுடி யுறைகின்ற துளதோ.
உரை
   
தூதுவன் மறுமொழி
 
706. உளது வாழிநின் னொளிபுனற் சிந்துநன் னாட்டிற்
களைதல் யாவர்க்கு மரியது கனமணிக் குன்றின்
உளது கோளரி யுருமென விடித்துயிர் பருகி
அளவி னீண்முழை யுறைகின்ற தடிகளென் றுரைத்தார்.
உரை
   
திவிட்டன் வஞ்சினங் கூறுதல்
 
707. ஆயின் மற்றத னருவரைப் பிலமென வகன்ற
வாயைப் போழ்ந்துட லிருபிளப் பாவகுத் திடுவன்
ஏயிப் பெற்றியே விளைத்தில னாயினும் வேந்தன்
பேயிற் பேசிய பிள்ளையே யாகென்று பெயர்ந்தான்.
உரை
   
பரிவாரங்களை அவன் அவ்விடத்தினின்றும் நீக்குதல்
 
708. புழற்கைத் திண்ணுதி மருப்பின பொருகளி றிவைதா
நிழற்க ணோக்கிநின் றழன்றன நிலையிடம் புகுக
அழற்க ணாறுப வடுபடை தொடுதலை மடியாத்
தொழிற்க ணாளருந் தவிர்கெனச் சூளுற்று மொழிந்தாள்.
உரை
   
709. இவரு மாமணிக் கொடுஞ்சிய விவுளித்தேர் காலாட்
கவரி நெற்றிய புரவிதங் காவிடம் புகுக
வரு மென்னொடு வரப்பெறார் தவிர்கென வெழில்சேர்
வரி நீர்வண்ண னுழையவ ரொழியுமா றுரைத்தான்.
உரை
   
விசயன் உடன் செல்லத்துணிதல்
 
710. நகர மாசன மிரைப்பது தவிர்த்தபி னளிநீர்ப்
பகரு மாகடல் படிவங்கொண் டனையவன் படரச்
சிகர மால்வரை தெளிந்தனன் திருவமார் மார்பினன்பின்
மகர மாகடல் வளைவண்ண னுடன்செல வலித்தான்.
உரை
   
இருவரும் கால்நடையாகச் செல்லல்
 
711. புழற்கை மால்களிற் றெருத்திடைப் புரோசையிற் பயின்ற
கழற்கொள் சேவடி கருவரை யிடை நெறி கலந்த
அழற்கொள் வெம்பொடி யவைமிசை புதையவவ் வரிமான்
றொழிற்கொண் டாருயிர் செகுக்கின்ற சூழல்சென் றடைந்தார்.
உரை
   
மாயச் சீயத்தின் கர்ச்சினை
 
712. அடைந்த வீரரைக் காண்டலு மழலுளை யரிமா
உடைந்து போகவோ ரிடியிடித் தனெவுடன் றிடிப்ப
இடிந்து போயின விறுவரைத் துறுகலங் குடனே
பொடிந்து போயின பொரியென நெரிவொடு புரளா.
உரை
   
திவிட்டன் கர்ச்சித்து அதனைத் தொடருதல்
 
713. காளை காளொளி முகில்வண்ணன் கழல்கள் விசியாத்
தோளின் மேற்செலச் சுடர்விடு கடகங்கள் செறியாச்
சூளி மாமணித் தொடர்கொண்டு சுரிகுஞ்சி பிணியா
ஆளி மொய்ம்பனங் கார்த்தன னுடைந்ததவ் வரியே.
உரை
   
714. எங்குப் போவதென் றுடைநெறி யிறுவரை நெரியப்
பைங்கட் கோளரி யுருவுகொண் டவன்மிசைப் படர்ந்து
வெங்கட் கூற்றமுந் திசைகளும் விசும்பொடு நடுங்கச்
செங்கட் காரொளி நெடியவன் விசையினாற் சிறந்தான்.
உரை
   
715. கழலங் கார்த்தில கால்களு நிலமுறா முடங்கா
அழலுஞ் செஞ்சுடர்க் கடகக்கை யவைபுடை பெயரா
குழலுங் குஞ்சியு மாலையுங் கொளுவிய தொடரும்
எழிலுந் தோளிலு மெருத்திலுங் கிடந்தில வெழுந்தே.
உரை
   
716. மரங்கள் வேரொடுங் கீழ்ந்தனெ வழிதொடர்ந் தெழுந்த
நிரந்த மான்களும் பறவையும் நிலங்கொண்டு பதைத்த
வரங்கொள் வெம்பர லணிவரைக் கொடுமுடி யவைதாம்
உரங்கொ டோளவன் விரனுதி யுறவுடைந் தெழுந்த.
உரை
   
அரிகேது ஒருமலைக் குகையில் ஒளிந்து கொள்ளுதல்
 
717. மூடி யிட்டன முகிற்கண முரன்றிடை நொறுங்காய்க்
கூடி யிட்டன கொடுமுடித் துறுகற்கள் குளிர்ந்தாங்
காடி யிட்டன வனதெய்வ மரியுரு வுடையான்
ஓடி யிட்டன னொளிவரை முழையகத் தொளித்தான்.
உரை
   
அக்குகையில் துயில் கொண்டிருந்த ஒரு சிங்கம் விழித்தெழுதல்
 
718. உலகத்தின் வீங்கிய வொளிமணிச் சுடரணி திணிதோ
ணலத்தின் வீங்கிய நளிர்புக ழிளையவன் விசையி
னிலத்தின் கம்பமும் நெடுவரை யதிர்ச்சியு மெழுவப்
பிலத்தின் வாழரி யரசுதன் றுயில்பெயர்ந் ததுவே.
உரை
   
திவிட்டன் உரப்புதல்
 
719. ஈங்கு வாழிய விருள்கெழு முழையகத் தொளித்தாய்
ஓங்கு மால்வரை பிளந்திடு கெனவுளைத் துரவோன்
ஆங்க மாமுழை முகத்துல கதிரநின் றார்த்தான்
வீங்கு வாய்திறந் தொலித்தது விலங்கலிற் சிலம்பே.
உரை
   
அச்சிங்கத்தின் எதிர்முழுக்கம்
 
720. அதிர வார்த்தலு மழன்றுதன் னெயிற்றிடை யலர்ந்த
கதிருங் கண்களிற் கனலெரிச் சுடர்களுங் கனல
முதிர்வில் கோளரி முனிந்தெதிர் முழங்கலி னெரிந்து
பிதிர்வு சென்றது பெருவரை பிளந்ததப் பிலமே.
உரை
   
அது வெளியே வருதல்
 
721. எரிந்த கண்ணிணை யிறுவரை முழைநின்ற வனைத்தும்
விரிந்த வாயொடு பணைத்தன வெளியுகிர் பரூஉத்தாள்
சுரிந்த கேசரஞ் சுடரணி வளையெயிற் றொளியால்
இரிந்த தாயிடை யிருணின்றங் கெழுந்ததவ் வரியே.
உரை
   
722. தாரித் திட்டதன் றறுகண்மைக் குணங்களி னுலகை
வாரித் திட்டிவண் வந்ததோ ரரியென மதியாப்
பூரித் திட்டதன் பெருவலி யொடுபுக ழரிமாப்
பாரித் திட்டது பனிவிசும் பிடையவர் பனித்தார்.
உரை
   
திவிட்டன் அச்சிங்கத்தின் வாயைப் பிளந்தது
 
723. அளைந்து மார்பினு ளிழிதரு குருதியைக் குடிப்பான்
உளைந்து கோளரி யெழுதலு முளைமிசை மிதியா
வளைந்த வாளெயிற் றிடைவலித் தடக்கையிற் பிடித்தான்
பிளந்து போழ்களாய்க் கிடந்ததப் பெருவலி யரியே.
உரை
   
அமரரின் வியப்பு
 
724. சீய மாயிரஞ் செகுத்திடுந் திறலது வயமா
ஆய வாயிர மாயிர மடுதிற லரிமா
ஏயெ ணாமையிங் கழித்தன னிதுவெனத் தத்தம்
வாயின் மேல்விரல் வைத்துநின் றமரர்கண் மருண்டார்.
உரை
   
கோளரி கிடந்த வருணனை
 
725. அழிந்த கோளரிக் குருதிய தடுங்கடங் களிற்றோ
டொழிந்த வெண்மருப் புடைந்தவு மொளிமுத்த மணியும்
பொழிந்து கல்லறைப் பொலிவது குலிகச்சே றலம்பி
இழிந்த கங்கையி னருவியொத் திழிந்ததவ் விடத்தே.
உரை
   
திவிட்டன் செயல்
 
726. யாது மற்றதற் குவந்திலன் வியந்தில னிகலோன்
ஓத நித்திலம் புரிவளை யொளியவற் குறுகி
ஏத மற்றிது கடிந்தன னின்னினி யடிகள்
போதும் போதன புரத்துக்கென் றுரைத்தனன் புகழோன்.
உரை
   
விசயன் `தாழ்வரையைக் கண்டு செல்வோம்` எனல்
 
727. தம்பி யாற்றல்கண் டுவந்துதன் மனந்தளிர்த் தொளியால்
வம்பு கொண்டவன் போனின்று வளைவண்ணன் மொழிந்தான்
நம்பி நாமினி நளிவரைத் தாழ்வர்கண் டல்லால்
இம்பர் போம்படித் தன்றுசெங் குருதிய திழிவே.
உரை
   
விசயன் தாழ்வரைச் சோலை முதலியவற்றின் அழகைத் திவிட்டனுக்குக் காட்டுதல்
 
728. ஆங்கண் மால்வரை யழகுகண் டரசர்கள் பரவும்
வீங்கு பைங்கழ லிளையவன் வியந்துகண் மலர
விங்கி மாண்பின வினையன விவையென வினிதின்
வாங்கு நீரணி வளைவண்ண னுரைக்கிய வலித்தான்.
உரை
   
729. புள்ளுங் கொல்லென வொலிசெயும் பொழில்புடை யுடைய
கள்ளி ணுண்டுளி கலந்துகா லசைத்தொறுங் கமழ
உள்ளுந் தாதுகொண் டூதுவண் டறாதன வொளிசேர்
வெள்ளென் றோன்றுவ கயமல்ல பளிக்கறை விறலோய்.
உரை
   
730. காள வண்ணத்த களிவண்டு கதுவிய துகளால்
தாளை மூசிய தாமரைத் தடம்பல வவற்றுள்
ஆளி மொய்ம்பவங் ககலிலை யலரொடுங் கிழிய
வாளை பாய்வன கயமல்ல வனத்திடர் மறவோய்.
உரை
   
731. மன்னு வார்துளித் திவலைய மலைமருங் கிருண்டு
துன்னு மாந்தர்கள் பனிப்புறத் துணைமையோ டதிர்வ
இன்ன வாம்பல வுருவுக ளிவற்றினு ளிடையே
மின்னு வார்ந்தன முகிலல்ல களிறுகள் விறலோய்.
உரை
   
732. உவரி மாக்கட னுரையென வொளிர்தரு மயிர
அவரை வார்புனத் தருந்திமேய்ந் தருவிநீர் பருகி
இவரு மால்வரை யிளமழை தவழ்ந்தனெ விவையே
கவரி மாப்புடை பெயர்வன கடல்வண்ண காணாய்.
உரை
   
வேறு
 
733. துள்ளிவா ரும்புனற் றுளங்குபா றைக்கலத்
துள்ளுரா விக்கிடந் தொளிருமொண் கேழ்மணி
நள்ளிரா வின்றலை நகுபவா னத்திடைப்
பிள்ளைநா ளம்பிறை பிறழ்தல்போ லுங்களே.
உரை
   
734. வாழையும்வா ழைத்தடங் காடுமூ டிப்புடங்
கழையும்வே யுங்கலந் திருண்டுகாண் டற்கரு
முழையுமூ ரிம்மணிக் கல்லுமெல் லாநின
திழையினம் பொன்னொளி யெறிப்பத்தோன் றுங்களே.
உரை
   
735. பருவமோ வாமுகிற் படலமூ டிக்கிடந்
திரவுண்டே னைப்பக லில்லையொல் லென்றிழிந்
தருவியோ வாபுரண் டசும்புபற் றித்தட
வரையின்றாழ் வர்நிலம் வழங்கலா கார்களே.
உரை
   
736. சூரலப் பித்தொடர்ந் தடர்ந்துளங் கும்மரில்
வேரலோ டும்மிடைந் திருண்டுவிண் டுவ்விடார்
ஊரலோ வாதன னுயிரையுண் டிடுதலாற்
சாரலா காதன சாதிசா லப்பல.
உரை
   
737. பரியபா றைத்திரள் படர்ந்தபோ லக்கிடந்
திரியவே ழங்களை விழுங்கியெங் குந்தமக்
குரியதா னம்பெறா வுறங்கியூ றுங்கொளாப்
பெரியபாம் பும்முள பிலங்கொள்பேழ் வாயவே.
உரை
   
738. அவைகள்கண் டாய்சில வரவமா லிப்பன
உவைகள்கண் டாய்சில வுளியமொல் லென்பன
இவைகள்கண் டாய்சில வேழவீட் டம்பல
நவைகள்கண் டாயிவை நம்மலா தார்க்கெலாம்.
உரை
   
739. குழல்கொடும் பிக்கணங் கூடியா டத்தகும்
எழில்கொடா ரோய்விரைந் தியங்கலிங் குள்ளநின்
கழல்களார்க் குங்களே கலங்கிமே கக்குழாம்
பொழில்கள்வெள் ளத்திடைப் புரள நாறுங்களே.
உரை
   
740. ஆக்கலா காவசும் பிருந்துகண் ணிற்கொரு
நீக்கநீங் காநிலம் போலத்தோன் றிப்புகிற்
காக்கலா காகளி றாழவா ழும்புறந்
தூக்கந்தூங் குந்தொளி தொடர்ந்து பொன்றுங்களே.
உரை
   
741. இதுவித்தாழ் வார்நிலத் தியற்கைமே லாற்பல
மதியம்பா ரித்தன மணிக்கற்பா றையின்மிசை
நிதியம்பா ரித்தொளி நிழன்றுதுஞ் சுந்நிலைக்
கதியின்வாழ் வாரையுங் கண்கள்வாங் குங்களே.
உரை
   
வேறு
 
742. இருது வேற்றுமை யின்மையாற்
சுருதி மேற்றுறக் கத்தினோ
டரிது வேற்றுமை யாகவே
கருது வேற்றடங் கையினாய்.
உரை
   
வேறு
 
743. தொல்லுறு சுடர்போலுஞ் சூழொளி மணிப்பாறை
கல்லறை யவைகோங்கின் கடிமலர் கலந்துராய்
மல்லுறு வரைமார்ப வளரொளி யின்முளைக்கும்
எல்லுறு சுடர்வானத் தெழிலவா யினியவ்வே.
உரை
   
வேறு
 
744. திரைத்த சாலிகை
நிரைத்த போனிரந்
திரைப்ப தேன்களே
விரைக்கொண் மாலையாய்.
உரை
   
வேறு
 
745. வரைவாய் நிவந்த வடுமா வடுமா
விரைவாய் நிவந்து விரியா விரியா
புரைவா யசும்பு புலரா புலரா
இரவா யிருள்செ யிடமே யிடமே.
உரை
   
வேறு
 
746. இளையா ரிளையா ருடனாய் முலையின்
வளையார் வளையார் மனம்வேண் டுருவம்
விளையார் விளையாட் டயருந் தொழிறான்
றளையார் தளையார் பொழிலின் றடமே.
உரை
   
வேறு
 
747. அளியாடு மமரங்க ளமரங்கள் மகிழ்ந்தானா
விளையாடும் விதமலர்ந்த விதமலர்ந்த மணிதூவும்
வளையார்கண் மகிழ்பவான் மகிழ்பவான் மலர்சோர்வ
இளையாரை யினையவே யினையவே யிடமெல்லாம்.
உரை
   
வேறு
 
748. தாமரைத் தடத்திடை மலர்ந்த சாரல்வாய்த்.
தாமரைத் துளையொடு மறலித் தாவில்சீர்த்
தாமரைத் தகுகுணச் செல்வன் சண்பகம்
தாமரைத் தடித்தலர் ததைந்து தோன்றுமே.
உரை
   
வேறு
 
749. நாகஞ் சந்தனத் தழைகொண்டு நளிர்வண்டு கடிவ
நாகஞ் சந்தனப் பொதும்பிடை நளிர்ந்துதா துமிழ்வ
நாகஞ் செஞ்சுடர் நகுமணி யுமிழ்ந்திருள் கடிவ
நாக மற்றிது நாகர்தம் முலகினை நகுமே.
உரை
   
வேறு
 
750. நகுமலரன நறவம் மவைசொரிவன நறவந்
தொகுமலரன துருக்கம் மவைதருவன துருக்கம்
அகமலரன வசோகம் மவைதருவவ சோகம்
பகுமலரன பாங்கர் பலமலையன பாங்கர்.
உரை
   
751. அணங்கமர்வன கோட லரிதவைபிறர் கோடல்
வணங்கிளர்வன தோன்றி வகைசுடர்வன தோன்றி
இணங்கிணர்வன விஞ்சி யெரிபொன்புடை யிஞ்சி
மணங்கமழ்வன மருதம் வரையயல்வன மருதம்.
உரை
   
வேறு
 
752. சாந்துந் தண்டழை யுஞ்சுர மங்கையர்க்
கேந்தி நின்றன விம்மலை யாரமே
வாய்ந்த பூம்படை யும்மலர்க் கண்ணியும்
ஈந்த சாகைய விம்மலை யாரமே.
உரை
   
753. இயங்கு கின்னர ரின்புறு நீரவே
தயங்கு கின்றன தானமந் தாரமே
பயங்கொள் வார்பயங் கொள்பவ னைத்தையும்
தயங்கு கின்றன தானமந் தாரமே.
உரை
   
வேறு
 
754. பொன்விரிந் தனையபூங் கோங்கும் வேங்கையு
முன்விரிந் துக்கன மொய்த்த கற்றல
மின்விரிந் திடையிடை விளங்கி யிந்திரன்
வின்முரிந் திருண்முகில் வீழ்ந்த போலுமே.
உரை
   
755. நிழற்பொதி நீலமா மணிக்க லந்திரள்
பொழிற்பொதி யவிழ்ந்தபூப் புதைந்து தோன்றுவ
தழற்பொதிந் தனெத்துகி றரித்த காஞ்சியர்
குழற்பொதி துறுமலர்க் கொண்டை போலுமே.
உரை
   
756. மேவுவெஞ் சுடரொளி விளங்கு கற்றலம்
தாவில்பூந் துகெளாடு ததைந்து தோன்றுவ
பூவுக விளையவர் திளைத்த பொங்கணைப்
பாவுசெந் துகிலிடைப் பள்ளி போலுமே.
உரை
   
வேறு
 
757. அழலணி யசோகஞ் செந்தா தணிந்துதே னரற்ற நின்று
நிழலணி மணிக்கன் னீல நிறத்தொடு நிமிர்ந்த தோற்றம்
குழலணி குஞ்சி மைந்தர் குங்குமக் குழம்பு பூசி
எழிலணி திகழ நின்றா லெனையநீ ரனைய தொன்றே.
உரை
   
758. இணைந்துதேன் முழங்க விண்ட வேழிலம் பாலை வெண்பூ
மணந்துதா தணிந்து தோன்று மரகத மணிக்கற் பாறை
கணங்கெழு களிவண் டாலப் பாசடை கலந்த பொய்கை
தணந்தொளி விடாத வெண்டா மரைததைந் தனைய தொன்றே.
உரை
   
759. காரிருட் குவளைக் கண்ணிக் கதிர்நகைக் கனபொற் றோட்டுக்
கூரிருள் சுரிபட் டன்ன குழலணி கொடிறுண் கூந்தற்
பேரிருள் கிழியத் தோன்றும் பிறையெபிறரே நோக்கிற்
சூரர மகளிர் வாழு மிடமிவை சுடர்ப வெல்லாம்.
உரை
   
760. வாரிரு புடையும் வீக்கி வடஞ்சுமந் தெழுந்து வேங்கை
ஏரிருஞ் சுணங்கு சிந்தி யெழுகின்ற விளமென் கொங்கைக்
காரிருங் குழலங் கொண்டைக் கதிர்நகைக் கனகப் பைம்பூண்
நீரர மகளிர் கண்டாய் நிறைபுனற் றடத்து வாழ்வார்.
உரை
   
761. மேகமேற் றவழ்ந்து வேய்கண் மிடைந்துகீ ழிருண்ட தாழ்வர்
ஏகமா மலையி னெற்றி யிருஞ்சுனைத் தடங்க ளெல்லாம்
நாகமா மகளி ரென்னு நங்கையர் குடையப் பொங்கி
மாகமேற் றரங்கஞ் சிந்தி மணியறை கழுவு மன்றே.
உரை
   
762. ஆவிவீற் றிருந்த காத லவரொடு கவரி வேய்ந்து
நாவிவீற் றிருந்து நாறு நளிர்வரைச் சிலம்பின் மேயார்
காவிவீற் றிருந்த கண்ணார் கந்தருவ மகளிர் கண்டாய்
பாவின்வீற் றிருந்த பண்ணி னமிழ்தினாற் படைக்கப் பட்டார்.
உரை
   
763. அலங்கிண ரணிந்த விஞ்சை யரிவைய ரிடங்கள் கண்டாய்
விலங்கலின் விளங்கு கின்ற வெள்ளிவெண் கபாட மாடம்
இலங்கொளி மகரப் பைம்பூ ணியக்கிய ரிதங்கள் கண்டாய்
நலங்கிளர் பசும்பொற் கோயில் நகுகின்ற நகர மெல்லாம்.
உரை
   
764. போய்நிழற் றுளும்பு மேனிப் புணர்முலை யமிழ்த னாரோ
டாய்நிழற் றுளும்ப வானோ ரசதியா டிடங்கள் கண்டாய்
சேய்நிழற் றிகழுஞ் செம்பொற் றிலதவே திகைய வாய
பாய்நிழற் பவழச் செங்காற் பளிக்குமண் டபங்க ளெல்லாம்.
உரை
   
765. எழின்மணிச் சுடர்கொண் மேனி யிமையவ ரிடங்கள் கண்டாய்
முழுமணிப் புரிசை வேலி முத்தமண் டபத்த வாய
கழுமணிக் கபாட வாயிற் கதிர்நகைக் கனக ஞாயிற்
செழுமணிச் சிகர கோடிச் சித்திர கூட மெல்லாம்.
உரை
   
766. தும்பிவாய் துளைக்கப் பட்ட கீசகம் வாயுத் தன்னால்
வம்பவாங் குழலி னேங்க மணியறை யரங்க மாக
உம்பர்வான் மேக சால மொலிமுழாக் கருவி யாக
நம்பதேன் பாட மஞ்ஞை நாடக நவில்வ காணாய்.
உரை
   
767. பொன்னவிர் மகரப் பைம்பூட் பொலன்குழை யிலங்கு சோதிக்
கன்னவில் வயிரத் திண்டோட் கடல்வண்ண னுவப்பக் காட்டி
மன்னவின் றிறைஞ்சுஞ் செய்கை வளைவண்ணன் மலையின் மேலால்
இன்னன பகர்ந்து சொல்லு மெல்லையு ணீங்க லுற்றார்.
உரை
   
768. பாசிலைப் பாரி சாதம் பரந்துபூ நிரந்த பாங்கர்
மூசின மணிவண் டார்க்கு முருகறா மூரிக் குன்றம்
காய்சின வேலி னான்றன் கண்களி கொள்ளக் காட்டி
ஓசனை யெல்லை சார்ந்து பின்னையிஃ துரைக்க லுற்றான்.
உரை
   
769. வலிகற்ற மதர்வைப் பைங்கண் வாளெயிற் றரசச் சீயங்
கலிகற்ற களிறுண் பேழ்வாய்க் கலிங்கினா னிழிந்து போந்து
குலகச்சே றலம்பிக் குன்றங் கொப்புளித் திட்ட தொப்ப
ஒலிகற்ற வுதிர நீத்த மொழுகுவ தின்ன நோக்காய்.
உரை
   
770. வெம்பவேங் குயிரை யெல்லாம் விழுங்கிய வெகுண்டு நோக்கிக்
கம்பமா வுலகத் தன்னைக் கண்டிடுங் களிகொள் சீயம்
நம்பநீ யழித்த தல்லா னகையெயிற் றதனை நண்ணல்
வம்பறா மகரப் பைம்பூண் வானவர் தமக்கு மாமோ.
உரை
   
771. ஆங்குநீ முனிந்த போழ்தி னரியது வகல நோக்கி
வாங்குநீர் வண்ண கேளாய் மாயமா மதித்து நின்றேன்
ஓங்குநீண் மலையின் றாழ்வ ரொலிபுன லுதிர யாறு
வீங்கிவந் திழிந்த போழ்து மெய்யென வியப்புச் சென்றேன்.
உரை
   
772. குன்றிற்கு மருங்கு வாழுங் குழூஉக்களிற் றினங்க ளெல்லாம்
அன்றைக்கன் றலறக் கொன்றுண் டகலிடம் பிளப்பச் சீறி
வென்றிக்கண் விருப்பு நீங்கா வெங்கண்மா விதனைக் கொன்றாய்
இன்றைக்கொண் டுலகமெல்லா மினிதுகண் படுக்கு மன்றே.
உரை
   
773. உரைசெய்நீ ளுலகின் வாழு முயிர்களுக் குறுகண் கண்டால்
வரைசெய்தோண் மைந்தர் வாழ்க்கை மதிக்கிலார் வனப்பின் மிக்கார்
திரைசெய்நீ ருலகங் காக்குஞ் செய்கைமேற் படைக்கப் பட்ட
அரைசர்தம் புதல்வர்க் கையா வறம்பிறி ததனி னுண்டோ.
உரை
   
774. கற்றவர் கடவுட் டானஞ் சேர்ந்தவர் களைக ணில்லார்
அற்றவ ரந்த ணாள ரன்றியு மனைய நீரார்க்
குற்றதோ ரிடுக்கண் வந்தா லுதவுதற் குரித்தன் றாயிற்
பெற்றவிவ் வுடம்பு தன்னாற் பெறுபய னில்லை மன்னோ.
உரை
   
775. மன்னுயிர் வருத்தங் கண்டும் வாழ்வதே வலிக்கு மாயின்
அன்னவ னாண்மை யாவ தலிபெற்ற வழகு போலாம்
என்னையான் கொடுத்தும் வையத் திடுக்கிணோய் கெடுப்ப னென்னும்
நின்னையே போலு நீரார் நிலமிசை நிலவி நின்றார்.
உரை
   
776. ஒருவன திரண்டி யாக்கை யூன்பயி னரம்பு யார்த்த
உருவமும் புகழு மென்றாங் கவற்றி னூழ்காத்து வந்து
மருவிய வுருவமி யீங்கே மறைந்துபோ மற்றை யாக்கை
திருவமர்ந் துலக மேத்தச் சிறந்துபின் னிற்கு மன்றே.
உரை
   
வேறு

பாலை வருணனை
 
777. என்று தங்கதை யோடிரு நீண்முகிற்
குன்று சூழ்ந்த குழுமலர்க் கானகம்
சென்றொர் வேங்கடஞ் சேர்ந்தன ருச்சிமே
னின்று வெய்யவ னுந்நிலங் காய்த்தினான்.
உரை
   
778. ஆங்கவ் வேங்கடஞ் சேர்ந்தபி னையகாண்
ஈங்கிவ் வெங்கடுங் கானகத் தீடென
ஏங்கு நீர்க்கடல் வண்ணனுக் கின்னணம்
வீங்கு வெண்டிரை வண்ணன் விளம்பினான்.
உரை
   
779. முழையு டைந்தழல் காலு முரம்பயற்
கழையு டைந்துகு கண்கவர் நித்திலம்
மழையு டைந்துகு நீரென வாய்மடுத்
துழையு டைந்துகு கின்றன வூங்கெலாம்.
உரை
   
780. மிக்க நீள்கழை மேல்விளை வுற்றழல்
ஒக்க வோடி யுறைத்தலிற் றான்மிசை
உக்க நெல்பொரி யுற்றொரு சாரெலாம்
தொக்க கற்றல மேற்றுடிக் கின்றவே.
உரை
   
781. ஈங்கு வெங்கதி ரோனெறிப் பன்னிழல்
வேங்கோ லென்றொளித் திட்டிபம் வீழ்ந்துசேர்
பாங்க லார்மனை போலப் பறைந்தரோ
ஓங்கி நின்றுல வுற்றன வோமையே.
உரை
   
782. அற்ற நீரழு வத்திடை நெல்லியின்
வற்ற லஞ்சினை யூடு வலித்தரோ
மற்ற வெவ்வெயி லுந்நிழல் வாயழல்
உற்று வீழ்ந்தது போன்றுள வாங்கெலாம்.
உரை
   
783. பைத்த லைப்பட நாக மழன்றுதம்
பொய்த்த ளைத்தலை போதரத் தார்செய்வான்
கைத்த லம்முகிழ்க் கின்றன காந்தளென்
றத்த லைச்சில மானயர் வெய்துமே.
உரை
   
784. விசையி னோடுவெண் டேர்செலக் கண்டுநீர்
தசையி னோடிய நவ்வி யிருங்குழாம்
இசையில் கீழ்மகன் கண்ணிரந் தெய்திய
வசையின் மேன்மகன் போல வருந்துமே.
உரை
   
785. துடியர் தொண்டகப் பாணியர் வாளியர்
கொடிய செய்து முனைப்புலங் கூட்டுணுங்
கடிய நீர்மையர் கானகங் காக்குநின்
அடிய ரல்லதல் லாரவ ணில்லையே.
உரை
   
வேறு

விசயன் நாட்டைச் சார்ந்த பலவளங்களைக் கூறுதல்
 
786. அங்க வெங்க டங்க டந்த லங்கு தாரி லங்குபூண்
சிங்கம் வென்ற செங்கண் மாலோ டம்பொன் மாலை வெண்கடாத்
திங்கள் வண்ணன் வெங்கண் யானை வேந்து சேர்ந்த நாடுசார்ந்
திங்க ணின்ன வின்ன காணெ னப்பு கழ்ந்தி யம்பினான்.
உரை
   
முல்லைநில வருணனை
 
787. மாலும் வாரி திங்கண் மூன்றும் வந்த றாத மாண்பினால்
ஆலு மாவ றானையெம் மடிக ளாளு நாட்டகம்
கால மாண்பி னன்றியுங் கார்க வின்ற நீரவே
போலு மாண்பி னேர்க லந்து பொங்கு நீர புறணியே.
உரை
   
788. கொண்டல் வாடை யென்னுங் கூத்தன் யாத்த கூத்தின் மாட்சியால்
விண்ட மாம லர்ப்பொ தும்ப ரங்க மாவி ரும்புநீர்
வண்டு பாட வல்லி யென்னு மாத ராடு நாடகங்
கண்டு கொன்றை பொன்சொ ரிந்த காந்தள் கைம றித்தவே.
உரை
   
789. கைம லர்த்த காந்தளுங் கரிய நீர்க்க ருவிளை
மைம லர்த்த டக்கணேர் வகுத்த லர்ந்த வட்டமு
மொய்ம லர்ப்பொ தும்பின்மேன் முறுவ லித்த முல்லையும்
கொய்மலர்க் குழற்றி ரட்சி கொண்டு காய்த்த கொன்றையும்.
உரை
   
790. தொண்டை வாய்நி றங்கொளக் கனிந்து தூங்கு கின்றவும்
வண்டு பாய வார்கொடி மருங்கு லாய்வ ளர்த்தவு
கண்ட பாலெ லாங்க லந்து கண்க வற்று மாதலால்
விண்டு மாலை மாத ராரின் மேவு நீர கானமே.
உரை
   
791. தண்ணி லாவி ரிந்த முல்லை தாது சோர்த ளிர்மிடைந்
தெண்ணி லாய சாய லம்மி டாம ணற்பி றங்கன்மேற்
பண்ணி லாய வண்டு பாடு பாங்க ரோடு பாங்கணிந்து
வெண்ணி லாவி ரிந்த வெல்லை போலு மிங்கொர் பாலெலாம்.
உரை
   
792. தேன வாவி மூசு கின்ற தேம்பி றழ்பூ தாங்கலந்து
கான நாவல் கொம்பி னிற்க னிந்து கால சைந்தவற்
றேனை மாடு வண்டி ருந்தி ருண்ட கான மிங்கிதற்
கூன மாயி ருட்பி ழம்பு றங்கு கின்ற தொக்குமே.
உரை
   
793. வாயி தழ்த்தி றங்கொ ளக்க னிந்த தொண்டை வந்தொசிந்து
தூயி தழ்த்து ணர்து தைந்து தோன்று கின்ற தோன்றியின்
பாயி தழ்ப்ப ரப்பின் மேல ரத்த கோப மூர்ந்தயற்
சேயி தழ்ப்பொ லிந்த காடு செக்கர் வான மொக்குமே.
உரை
   
794. ஆடி ணர்க்கொ டிப்பட ரகிற்பொதும் பயற்பொ லிந்த
கூடி ணர்க்கு ழாநிலைக் கொழும லர்க்கு மிழ்மிசைக்
கோடி ணர்க்கு லைக்கொ சிந்த கொன்றை விண்ட தாதுசோர்ந்
தோடி ணர்ச்சு டர்ப்பொ னுக்க கான மொக்கு மூங்கெலாம்.
உரை
   
795. பார்ம கிழ்ந்த பைஞ்சுருட் பயிர்மி சைப்ப யின்றெழுந்
தேர்க லந்து பாசிலைப் பரப்பி னூடி ரைத்தரோ
கார்ம கிழ்ந்த கார்மயிற் கலாப மொய்த்த கானக
நீர்ம கிழ்ந்த நீர்க்கட னிரந்த தொக்கு நீரதே.
உரை
   
796. ஏறு கொண்ட கோவல ரேந்து தண்ண வக்குரன்
மாறு கொண்ட கோடியர் மணிமு ழாமு ழங்கலிற்
றூறு கொண்ட தோகைமஞ்ஞை யாடல் கண்டு கண்மகிழ்ந்து
சாறு கொண்டு மான்க ணந்த யங்கு நீர சாரெலாம்.
உரை
   
797. கார்ம ணந்த கானயாறு கல்ல லைத்தி ழிந் தொலிக்கு
நீர்ம ணந்த நீள்கரை நிரைத்தெ ழுந்த நாணல் சூழ்
வார்ம ணற்பி றங்கன்மாலை வல்லி விண்ட தாதணிந்து
தார்ம ணந்த வாரமார்ப வேள்விச் சாலை போலுமே.
உரை
   
798. கறவை கன்று வாய்மிகுத்த வமிழ்தி னோடு கண்ணகன்
புறவின் மாம ரைம்முலைப் பொழிந்த பாறெ கிழ்ந்தழெப்
பறவை யுண்டு பாடவும் பருகி மந்தி யாடவும்
நறவு விண்ட நாகுமுல்லை வாய்தி றந்து நக்கவே.
உரை
   
799. வேரல் வேலி மால்வரைக் கவானின் வேய்வி லங்கலின்
சாரன் மேக நீர்முதிர்ந்து தண்டு ளித ளித்தலான்
மூரல் வாய சும்ப றாத முல்லை விள்ளு மெல்லைபோய்
நீர வாளை பூவின்வைகு நீள்ப ரப்பு நண்ணினார்.
உரை
   
வேறு

மருத நில வருணனை
 
800. புதுநாண் மலர்விண் டுபொழிந் திழியும்
மதுநா றுபுனன் மருதத் தினைமற்
றிதுகா ணெனவின் னனசொல் லினனே
விதிமாண் மிகுசோ திவிளங் கொளியான்.
உரை
   
801. அயலோ தமிரட் டவலம் பொலிநீர்
வயலோ தமயங் கமயங் கவதிர்ந்
தியலோ தையிளஞ் சிறையன் னமெழக்
கயலோ டியொளிப் பனகாண் கழலோய்.
உரை
   
802. வளவா சநிலப் பலவின் சுளையும்
இளவா ழையினின் னெழிலங் கனியும்
களமாங் கனியின் றிரளுங் கலவிக்
குளமா யினயோ சனைகொண் டனவே.
உரை
   
803. வனமா வினிருங் கனியுண் டுமதர்த்
தினவா ளையிரைத் தெழுகின் றனகாண்
கனவா ழைமடற் கடுவன் மறையப்
புனவா னரமந் திபுலம் புவகாண்.
உரை
   
804. வளமா நிலைமே திமருப் பினிட
விளவா ழைநுதிக் கமழ்தே னொழுகிக்
குளமார் குளிர்தா மரைகொண் டநகைத்
தளவா யுகுகின் றனகாண் டகவோய்.
உரை
   
805. இவைசெந் நெலிடைக் கருநீ லவன
மவையந் நெலிடைக் கழுநீ ரழுவம்
உவையொண் டுறைவிண் டொளிவிம் முநகு
நவைவென் றனதா மரைநாண் மலரே.
உரை
   
806. கழையா டுகரும் பினறைக் கடிகைப்
பொழிசா றடுவெம் புகைபொங் கியயற்
றழையோ டுயர்சோ லைகடாம் விரவி
மழையா டுமலைத் தடமொத் துளவே.
உரை
   
807. கருநீ லமணிந் தகதுப் பினயற்
கருநீ லமணிந் தனகண் ணிணைகள்
கருநீ லமணிக் கதிர்க்கட் டியெனக்
கருநீ லமணிந் தகருங் குழலே.
உரை
   
808. வளர்செங் கிடையின் னெழில்வைத் தநுதல்
வளர்செங் கிடையின் னொளிவவ் வியவாய்
வளர்செங் கிடையின் விளையா டும்வயல்
வளர்செங் கிடைமா மலர்மல் குசிகை.
உரை
   
809. வயலாம் பன்னெறித் தவகைத் தழையள்
வயலாம் பன்மலைத் தவடிச் சவியள்
வயலாம் பன்மலிந் தபரப் பிடையள்
வயலாம் பன்மலர்த் தொகைமா லையினள்.
உரை
   
810. வளர்தா மரையல் லிமர்த் தியகை
வளர்தா மரையல் லிமயக் குமொளி
வளர்தா மரையல் லிமகிழ்ந் தனள்போல்
வளர்தா மரையல் லிவனத் திடையாள்.
உரை
   
811. நளிர்வார் கழலாய் புகழ்நா டிநயந்
தொளிர்வார் குழலா ளொருமா தவருள்
உளர்வார் கனியும் மதுவுந் தெகிழக்
கிளர்பார் வையுறக் கிளர்கின் றதுகேள்.
உரை
   
812. மதிகா ணநிமிர்ந் தமதிற் கிகர
நுதிமா ளிகைமே லநுடங் குகொடி
கதிரோ னொளிமாழ் கவெழுந் துகலந்
ததுகா ணமதா ரொளிமா நகரே.
உரை
   
813. அறவே தியரா வுதியம் புகையார்
உறவே திகைவிம் மியவொண் புறவ
நிறவே திகைமீ துநிமிர்ந் தபொழிற்
புறவே திகையே றுவகாண் புகழோய்.
உரை
   
வேறு

அரசகுமரர் நகரை அடைதல்
 
814. இன்னன விளையவற் கியம்பு மெல்லையுட்
பொன்னக ரடைந்தனர் பொழுதுஞ் சென்றது
நன்னக ரிரைத்தது நரன்ற வின்னிய
மன்னவ குமரரும் வறுமை நீங்கினார்.
உரை
   
815. இளங்களிக் குஞ்சர மிரட்டித் தாயிரம்
துளங்கொளிக் கலினமாத் தூளி யெல்லைய
வளஞ்கெழு குமரரை வலங்கொண் டெய்தின
அளந்தறிந் திலமகன் படையி னெல்லையே.
உரை
   
816. துன்னிய துணரிளந் தோன்றி மென்கொடி
மன்னிய வனத்திடை மலர்ந்து நீண்டபோற்
கன்னியர் கைவிளக் கேந்தக் காவலன்
பொன்னியல் வளநகர் பொலியத் தோன்றினார்.
உரை
   
817. காவியங் கருங்கணார் கமழ வூட்டிய
ஆவியங் கொழும்புகை தழுவி யாய்மலர்க்
கோவையங் குழுநிலை மாடம் யாவையும்
பாவிய பனிவரைப் படிவங் கொண்டவே.
உரை
   
818. மல்லிகை மணங்கமழ் மதுப்பெய் மாலையு
முல்லையம் பிணையலு மொய்த்த முன்கடை
எல்லியங் கிளம்பிறைக் கதிர்கள் வீழ்ந்தன
தொல்லையங் கடிநகர் துயில்வ போன்றவே.
உரை
   
பயாபதி தன் மக்களை வரவேற்றல்
 
819. செம்பொன்மா மணிநகர்ச் செல்வ வீதியுட்
கொம்பனா ரடிதொழக் கோயி லெய்தலும்
நம்பிமார் வருகென நாறு நீரொளி
அம்பொன்மா மணிமுடி யரசு னேயினான்.
உரை
   
820. அருளுவ தென்கொலென் றஞ்சி வெஞ்சுடர்
இருளுக வெழுந்ததொத் திருந்த கோனடிச்
சுருளுறு குஞ்சிக டுதையத் தாழ்ந்தனர்
மருளுறு மனத்தினன் மன்ன னாயினான்.
உரை
   
மன்னவன் குமரரைத் தழுவிக் கொள்ளுதல்
 
821. திருவரை யனையதோட் சிறுவர் தம்மையக்
கருவரை யனையவெங் களிநல் யானையான்
இருவரும் வருகென விரண்டு தோளினும்
ஒருவரை யகலத்தி னொடுங்கப் புல்லினான்.
உரை
   
குமரர் தலையில் கான மலர்த்துகளை மன்னன் காணுதல்
 
822. மானவா மதகளிற் றுழவன் மக்கடந்
தேனவாஞ் செழுமலர் செறிந்த குஞ்சியுட்
கானமா மலர்த்துகள் கழுமி வீழ்ந்தன
வானவாந் தடக்கையான் மகிழ்ந்து நோக்கினான்.
உரை
   
மன்னவனது வினாவுக்கு விசயன் உத்தரங் கூறுதல்
 
823. என்னைநும் மீரமலர்க் குஞ்சி தம்முளித்
துன்னிய வனத்துக டுதைந்த வாறென
மன்னவ னருளலு மகர வார்குழை
மின்னிவர் மணிக்கழல் விசயன் செப்பினான்.
உரை
   
824. போற்றிநம் புறணிசூழ் காடு பாழ்செய்வான்
சீற்றமிக் குடையதோர் சீயஞ் சேர்ந்தனெ
வேற்றுவன் றமர்கள்வந் துரைப்ப வெம்பியிவ்
வாற்றல்சா லடியன்சென் றதனை நீக்கினான்.
உரை
   
பயாபதியின் மகிழ்ச்சி
 
825. யானுமங் கிவனொடு மடிக ளேகினன்
வானுய ரிமகிரி மருங்கி னென்றுபூந்
தேனுய ரலங்கலான் சிறுவன் சொல்லலும்
தானுயிர் தளிர்ப்பதோர் சவிய னாயினான்.
உரை
   
வேறு

விசய திவிட்டர் பள்ளிகளைச் சேர்தல்
 
826. சுடரொளி மிகுசோதி சூழ்கழற் காளை மார்தம்
அடரொளி முடிமன்ன னேவலா னாய்பொன் னாகத்
தொடரொளி சுடர்ஞாயிற் சூளிகை சூழு நெற்றிப்
படரொளி நெடுவாயிற் பள்ளியம் பலங்கள் சேர்ந்தார்.
உரை