11.துறவுச் சருக்கம்
 
1840. மன்னிய புகழி னான்றன்
     மகன்வழிச் சிறுவர் வாயுள்
இன்னகை மழலை கேட்டாங்
     கினிதினி னிருந்த காலைப்
மன்னுமெய்த் துறவிற் புக்கான்
     பயாபதி மன்னர் மன்னன்
அன்னதன் பகுதி தன்னை
     யறியுமா பகர லுற்றேன்.
உரை
   
திவிட்டனும் அவன் மக்களும் பயாபதியை அணுகுதல்
 
1841. திருமகி ழலங்கன் மார்பிற்
     செங்கணான் வணங்கச் செல்வப்
பெருமகிழ் வெய்தி வேந்தன்
     பிரசாபதி பெரிய வாட்கண்
உரிமையோ டிருந்த போழ்தி
     னொலிகல னொலிப்ப வோடி
அருமைகொ டிகிரி யாள்வான்
     சிறுவர்சென்ற ணுகி னாரே.
உரை
   
தவத்தின் பயனைப் பயாபதி உணர்தல்
 
1842. ஆங்கவ ரணைந்த போழ்தி
     னமிழ்துகொப் புளித்த போலும்
தேங்கமழ் பவழச் செவ்வாய்
     முறுவனீர் பருகித் தேங்கி
ஈங்கிவை யனைய தோற்றி்
     யின்பமே பருக நின்ற
வீங்கிய தவத்திற் கின்னும்
     வித்திடற் பால தென்றான்.
உரை
   
நல்வினை
 
1843. அலகுடன் விளங்கு மம்பொற்
     குடைநிழ லரசர் சூழ
உலகுடன் வணங்க வோடை
     யுயர்களிற் றெருத்த மேலால்
பலகுடை பணியச் செல்லும்
     பண்பிது நமக்குத் தந்த
நலனுடைத் தளிய நங்க
     ணல்வினைத் தெய்வ மன்றே.
உரை
   
மேலும் அவன் எண்ணுதல்
 
1844. தன்னையோ ரரச னாக்கித்
     தரங்கநீர் வளாக மாள்வித்
தின்னுயி ராகிச் செல்லு
     நல்வினை யென்னு மின்ன
முன்னுப காரி தன்னை
     முதல்கெட முயலுங் கீழ்மை
நன்னரின் மாந்த ரன்றே
     நரகங்கட் கரச ராவார்.
உரை
   
1845. சென்றநாள் பெயரு மேனுஞ்
     செல்வமுஞ் செருக்கு மாக்கி
நின்றநா ணிலவு மேனு
     நெறிநின்று வருந்த வேண்டா
இன்றுபோல் வாழ்து மன்றே
     யிப்படித் தன்றி யாங்கள்
பொன்றுநாள் வருவ தாயின்
     வாழ்க்கையோர் பொருள தன்றே.
உரை
   
வாழ்வு நிலையற்றது
 
1846. எரிபுரை யெழில தாய
     விளந்தளி ரிரண்டு நாளின்
மரகத வுருவ மெய்தி
     மற்றது பசலை கொண்டு
சருகிலை யாகி வீழ்ந்த
     கரிந்துமண் ணாதல் கண்டும்
வெருவிலர் வாழ்து மென்பார்
     வெளிற்றினை விலக்க லாமோ.
உரை
   
தவம் சிறந்தது எனத் துணிதல்
 
1847. பிறந்தனர் பிறந்து சாலப்
     பெருகினர் பெருகிப் பின்னை
இறந்தன ரென்ப தல்லா
     லியாவரு மின்று காறு
மறைந்துயிர் வாழா நின்றா
     ரில்லையால் வாழி நெஞ்சே
சிறந்தது தவத்தின் மிக்க
     தின்மையே சிந்தி கண்டாய்.
உரை
   
உடலின் இழிவு
 
1848. பிறந்துநாம் புறஞ்செய் கின்ற
     பேதையிவ் வுடலந் தானும்
இறந்தநாள் போல்வ தின்றா
     யிற்றையின் னாளை வேறாய்ப்
பறைந்துநாம் பற்றப் பற்றப்
     பற்றுவிட் டகலு மாகிற்
சிறந்தனர் பிறர்க கள்யாரே
     சிந்தைநீ சிந்தி யென்றான்.
உரை
   
1849. தொகைமல ரலங்கல் சூடித்
     தூநறுஞ் கண்ண மப்பிப்
புகைநனி கமழ வூட்டிப்
     புறஞ்செயப் பட்ட மேனி
சிகையினோர் சிறுமுட் டீண்டச்
     சிதைந்தழுக் கொழுகு மாயி்
நகைபெரி துடைத்து நாணா
     மிதனைநா மகிழ்த னெஞ்சே.
உரை
   
1850. ஒழுகிய முடையு நீரு
     முதலகை யிகப்ப வூறும்
அழுகலிவ் வள்ளல் யாக்கை
     யகம்புற மாயிற் றாயில்
கழுகொடு கவருங் காக்கை
     கைத்தடி கொண்டு காத்தும்
அழகுள சுழலு மன்னோ
     வாயிரச் சாதி மாதோ.
உரை
   
1851. வல்வினை விளைத்த மாந்தர்
     மற்றதன் வித்து மாட்டிப்
புல்வினை கான மண்டிப்
     புலியின்வாய்ப் பட்ட தேபோல்
நல்வினை யினிதி னூட்டு
     நல்வினை முதல்கண் மாறி
இல்வினை யின்பம் வெஃகி
     யிறுபவே யறிவி லாதார்.
உரை
   
பயாபதி தன் அமைச்சருடன் ஆராய்தல்
 
1852. இன்னன பலவுஞ் சிந்தித்
     திருந்தது மிகையென் றெண்ணி
மன்னவ னுழையர் தம்மான்
     மந்திரத் தவரைக் கூவிப்
பொன்னவிர் பவழத் திண்காற்
     புரிமணிக் கூட மெய்திக்
தன்னம ரமைச்ச ரோடு
     தானமர்ந் திருந்து சொன்னான்.
உரை
   
நிலைத்த செல்வத்துக்கு வரும் ஊனங்கள் யாவை? என்று அவன் வினாதல்
 
1853. மலைபயில் களிநல் யானை
     மன்னரால் வவ்வ லின்றாய்க்
கலைபயில் மகளிர் கண்போற்
     கள்வர்கைப் படாது நாளும்
நிலையின செல்வக் கூனம்
     வருவன வுரைமி னென்றான்
இலைபயின் மகரப் பைம்பூ
     ணெரிமணிக் கடகக் கையான்.
உரை
   
அமைச்சர் இறுத்த விடை
 
1854. ஆள்வினை மாட்சி யென்னு
     மிரண்டினு மரசு காத்துத்
தோள்வினைக் களவு காவ
     லுள்வழித் துன்னல் செல்லா
வாள்வினைத் தடக்கை வேந்தே
     வருவது மற்று முண்டோ
கோள்வினை பயின்ற கூற்றங்
     குறுகல தாயி னென்றார்.
உரை
   
கூற்றத்தார் கொள்ளற்பாலன யாவை என்ற வினாவும் அதற்கு விடையும்
 
1855. கோள்வினை பயின்ற கூற்ற
     வரசனாற் கொள்ளற் பால
கேள்வினை பயின்ற நூலிற்
     கிளர்ந்துநீ ருரைமி னென்ன
வாள்வினை புரிந்த தோளான்
     மனத்ததை யுணர்ந்து மாதோ
நாள்வினை புரிந்து நங்க
     ளுயிர்நிறை கொள்ளு மென்றார்.
உரை
   
கூற்றுவனை வெல்லும் உபாயம் யாது? என்று வினவல்
 
1856. சந்தினாற் றவிர்க்க லாமோ சார்பினா லொழிக்க லாமோ
பந்தியா முன்னந் தாமே பகைத்திருந் துய்ய லாமோ
வெந்திறற் காலன் றன்னை மேற்சென்று வெல்ல லாமோ
உய்ந்துயிர் யாங்கள் வாழு முபாயநீ ருரைமி னென்றான்.
உரை
   
அமைச்சர் விடை
 
1857. பீழைமை பலவுஞ் செய்து பிணிப்படை பரப்பி வந்து
வாழுயிர் வாரி வவ்வி வலிந்துயிர் வாங்கி யுண்ணுங்
கூழைமை பயின்ற கூற்ற வரசனைக் குதிக்குஞ் சூழ்ச்சி
பாழியந் தடக்கை வேந்தே பயின்றிலம் யாங்களென்றார்.
உரை
   
அரசன் கூறுதல்
 
1858. ஆயினக் காலன் பாணி யாம்பிற வரச செல்வம்
மேயினங் களித்தி யாங்கள் விழைந்துயிர்வாழும் வாழ்க்கை
பாயிய வெழுந்த வேங்கை பாரிக்கு மளவிற் பைம்புன்
மாயிருஞ் சுருளை மேயு மான்மறி போலு மென்றான்.
உரை
   
குரவர் கூற்று
 
1859. அருங்களி யானை வேந்தே யத்துணைப் பாணியுண்டோ
கருங்களி மதநல்யானை வாய்புகு கவள மேபோல்
பெருங்களி யாளன் காலன் பிறையெயி றணிந்துநின்ற
இருங்களி யாணர் வாழ்விற் கிமைப்பிடை பெரிது கண்டாய்.
உரை
   
காலனைக் கடப்பதற்கு மார்க்கம் கூறுகழு என்று அரசன் அமைச்சரை வினாதல்
 
1860. இன்னுயி ரழியும் போழ்து மிறைவனுக் குறுதியல்லான்
முன்னிய முகமன் மாட்டா முற்றிய வறிவி னாரை
மன்னவன் மகிழ்ந்து நோக்கி வாழுயிர் வவ்வுங் காலன்
தன்னைநா மிகந்து சேருஞ் சரண்பிறி துரைமி னென்றான்.
உரை
   
முனிவரைக் கேட்குமாறு அமைச்சர் கூறல்
 
1861. இனியன போன்று தோன்றி நுகர்ந்தவற் கிறுதி செய்யும்
கனிபுரை கிளவி நீக்கிக் கண்ணனார் கருத்துட் கொண்டு
துனிவன நினையுங் காலன் றுணிவன துணியுஞ் சூட்சி
முனிவரை வணங்கிக் கேட்டு முயறுமோ வடிக ளென்றார்.
உரை
   
1862. குருகயா வுயிர்க்குஞ் சோலைக் குளிரணிப் பழன நாட
முருகயா வுயிர்க்கும் பூவார் முறிமிடை படலை மாலைத்
திருவயா வுயிர்க்கு மார்பற் செறிதவர் சரண மூலத்
தருகயா வுயிர்ப்பி னல்லா லரண்பிறி தாவ துண்டோ.
உரை
   
பயாபதி துயர்நீங்கிய மனத்தனாதல்
 
1863. எரிகின்ற சுடரி னெய்பெய் திடுதிரி தூண்டி யாங்கு
விரிகின்ற புலமை வீரர் மொழிதலும் விசோதி யன்னாற்
பரிகின்ற வுரிமை வல்ல படரொழி மனத்த னானான்
சொரிகின்ற மதுவின் மாரித் துவலையி னனைந்த தாரான்.
உரை
   
1864. கரும்பணி மொழியி னார்தங்
     கருந்தடங் கண்ணும் வண்டும்
சுரும்பணை முலையி னாருந்
     தொடையலுந் துதைந்த மார்பன்
அரும்பணி யசோக நீழ
     லடிகள தணிபொற் கோயில்
விரும்பணி விழவு சாற்றி
     வியன்முர சறைக வென்றான்.
உரை
   
அருகன் விழா
 
1865. ஒளியவ னுலகம் தன்னுட்
     கரந்தவ னுயிர்க ளுய்யும்
அளியவ னருள்செய் யாழி
     யுடையவ னடிமை செய்வார்க்
கெளியவ னெந்தை பெம்மாற்
     கியற்றிய விழவின் மிக்க
களியவ ரென்ப செம்பொற்
     கதிர்முடி சூடு வாரே.
உரை
   
1866. அருள்புரி யழலஞ் சோதி
     யாழியா னாதி யில்லான்
மருள்புரி வினைகட் கென்று
     மறுதலை யாய வாமன்
இருள்புரி யுலகஞ் சேரா
     வியனெறி பயந்த பெம்மான்
பொருள்புரி விழவு காண்பார்
     புண்ணிய வுலகங் காண்பார்.
உரை
   
1867. கண்ணிய வறிவன் செல்வ
     விழவினுட் களித்த மாந்தர்
புண்ணியத் துகள்க ளென்னும்
     பொற்சுண்ணம் புதைய வாடிப்
பண்ணியன் மொழியி னார்தங்
     கருங்கண்ணாற் பருகு நீர்மை
விண்ணிய லுருவ மெய்தி
     விளங்கிவீற் றிருப்ப ரன்றே.
உரை
   
நகரம் விழவணி காண்டல்
 
1868. எல்லைசான் முரசிற் சாற்றி
     யின்னன வறைத லோடும்
மல்லன்மா நகரங் கேட்டே
     வானுல கிழிந்த தேபோன்
முல்லைவான் கண்ணி சூடி
     முகிழ்நகைக் கலங்க டாங்கிச்
செல்லும்வாய் தோறுஞ் செல்வ
     விழவணி தேர்த்த தன்றே.
உரை
   
1869. இன்னிசை முரசங் கேட்டே
     மெய்பெரி தினிய கேட்டா
மன்னிய நங்கள் வாணாள்
     வாழ்கநம் மிறைவ னென்னாப்
பொன்னியன் மலருஞ் சாந்துஞ்
     சுண்ணமும் புகையும் பொங்கத்
துன்னிய நகர மாந்தர்
     துறக்கம்பெற் றவர்க ளொத்தார்.
உரை
   
திருவிழா நடைபெறல்

வேறு
 
1870. பூரண மணிக்குட நிரைத்த பொன்னணி
தோரண மெடுத்தன துதைந்த வெண்கொடி
வாரணி முரசொடு வளைக ளார்த்தரோ
காரணி கடலொலி கைத விர்த்ததே.
உரை
   
1871. விரையினான் மெழுகிய வீதி வாயெலாம்
திரையினார் செழுமணி முத்தஞ் சிந்தினார்
உரையினா லென்னையவ் வொளிகொண் மாநகர்
புரையினாற் பொன்னுல கிழிந்த தொத்ததே.
உரை
   
அகிற்புகை மாளிகைகளைச் சூழ்தல்
 
1872. கழுமிய காழகி லாவி காமரு
செழுமணி மாளிகைச் சென்னி சூழ்வது
விழுமணி விளங்கிய விலங்கன் மீமிசைத்
தழுவிய விளமழை தவழ்வ தொத்ததே.
உரை
   
அந்தணர்
 
1873. வெண்டுகி லுடுத்துவெண் சாந்து மெய்வழித்
தொண்டிரண் மல்லிகை யொலியல் சூடினார்
வண்டிரண் மணிமுத்தும் வயிரச் சாதியும்
கொண்டிய லணியொடு கோலந் தாங்கினார்.
உரை
   
1874. வெண்மருப்பி ரட்டைய வேழ மீமிசைக்
கண்மருட்டு றுப்பன கமலப் பூப்பலி்
விண்மருட்டு றுப்பன வேந்தி வேதியர்
மண்மருட்டு றுப்பதோர் வகையின் மன்னினார்.
உரை
   
வேந்தர்
 
1875. செம்மலர்க் கண்ணியர் செம்பொற் றாரினர்
கொய்ம்மலர்க் குங்குமங் குழைந்த சாந்தினர்
கைம்மலர் மணிநகைக் கடகம் வில்லிட
மெய்ம்மல ரணியினர் வேந்த ராயினார்.
உரை
   
1876. செய்ந்நிறக் குவளைகை செய்த சூட்டினர்
அந்நிறந் தழுவிய வரத்த வாடையர்
மெய்ந்நிறஞ் செய்யன வேழ மீமிசைக்
கைந்நிற மலரொடு கலந்து தோன்றினார்.
உரை
   
வணிகர்
 
1877. பொன்மலர்க் கண்ணியர் பொன்செய் சுண்ணமொய்
மின்மலர் மேனிமேல் விளங்க வப்பினார்
மென்மல ரணிநகை மிளிருங் கோலமோ
டின்மல ரிருநிதிக் கிழவரீண்டினார்.
உரை
   
1878. போரொளிப் பீதக வுடையர் பைம்பொனால்
ஆரொளி தழுவிய வலர்செய் பூப்பலி
போரொளி யானைமே னிரைத்துப் போந்தனர்
வாரணி வனமுலை யவரொ டென்பவே.
உரை
   
அரசன் விழாவிற்கெழுதல்
 
1879. நகரமாங் கெழுந்தபி னரலுஞ் சங்கொடு்
முகுரவாய் மணிமுர சதிரு மூரிநீர்
மகரமால் கருங்கடன் மருளுந் தானையான்
சிகரமால் யானைமேற் செல்வன் றோன்றினான்.
உரை
   
குதிரைகள் பல
 
1880. வேல்புரை கண்ணியர் கவரி வீசவெண்
பால்புரை பவழக்காற் குடையி னீழலான்
மால்புரை கருங்கடல் வளாகங் காவலன்
கால்புரை புரவியங் கடலுட் தோன்றினான்.
உரை
   
களிறு ஈட்டம்
 
1881. புதமெழு புரவிகள் புடைப ரந்திடை
மதமழை பொழிவன வயிரக் கோட்டன
கதமழ லெழவுமிழ் தகைய காணில
விதமெழு களிறுகள் பலமி டைந்தவே.
உரை
   
பிற விழாச் செய்திகள்
 
1882. ஆர்த்தன பல்லிய மதிர்ந்த குஞ்சரம்
தேர்த்தன தேர்க்குழாந் திசைத்த பல்லுயி்ர்
போர்த்தன கொடிமிடை பொழிந்த பூமழை
வேர்த்தன விளிந்தன வினைக ளென்பவே.
உரை
   
1883. விரிந்துயர் வெள்ளிவெண் குடையின் மாடெலாம்
திருந்திய சாமரை திசைக டேர்த்தன
பரந்தெழு பாற்கடற் பரவை வெண்டிரை
நிரைந்தெழு நுரையொடு நிரைத்த வொத்தவே.
உரை
   
1884. பீலியந் தழைபிணித் திட்ட வட்டமு
மாலியங் கசைப்பன வால வட்டமு
மேலியங் கொளியவன் மறைய வேய்ந்தரோ
காலியங் கிடவிடங் காண்கி லாரரோ.
உரை
   
1885. சந்தனஞ் செறிந்தன செப்புந் தண்புகைக்
கந்தமே நிறைந்தன கரண்ட கங்களும்
கொந்துமொய்ம் மலர்நிறை கோடி கங்களும்
உந்தியொன் றொன்றினை யூன்று கின்றவே.
உரை
   
1886. நிரந்தன பூப்பலி நிரைகொண் மாரியாய்ச்
சொரிந்தன சுரும்பிவர் துணர்கொள் பூமழை
பரந்தன மங்கலப் பதாகை யவ்வழிக்
கரந்தன கருவினைக் குழாங்க ளென்பவே.
உரை
   
1887. பாடுவார் பலாண்டிசை பரவு வார்பரந்
தாடுவா ரறிவனைப் பரவி யார்களும்
கூடுவார் குழுவுமெய் குழுமி யெங்கணும்
ஊடுதான் வியலிட முள்ள தில்லையே.
உரை
   
பயாபதியின் செயல்
 
1888. நொவ்வகை வினைப்பகை யகற்றி நூனெறி
செவ்வகை மொழிந்தவன் செல்வச் சேவடிக்
கிவ்வகை யெழுவகை விழவு செல்வுழி
நெய்வகை வேலவ னிலைமை கேட்கவே.
உரை
   
சினகரம் சேர்தல்
 
1889. நீர்ப்பலி விரைப்பலி நிரந்து தேனிமிர்
பூப்பலி யெனவிவை நிரைத்துப் புண்ணியன்
சீர்ப்பொலி சினகரஞ் சென்று சேர்ந்தனன்
ஆர்ப்பொலி தழுவிய வரவத் தானையான்.
உரை
   
நகர் வலம்
 
1890. கோடுயர் கோபுர வாய்தல் சேர்ந்துதன்
நீடுயர் மழகளி றிருவித் தானிழிந்
தேடுய ரினமல ரேந்தி யீர்ம்பொழின்
மாடுயர் வளநகர் வலங்கொண் டெய்தினான்.
உரை
   
அருகக் கடவுள் தரிசனம்
 
1891. மன்னவ னணைதலு மலர்ந்த வாணிலாப்
பொன்னணி வளநக ரகத்துப் பொங்கரி
துன்னிய வணைமிசைத் துளங்குஞ் சோதியோ
டன்னணம சோகமர்ந் தடிக டோன்றினார்.
உரை
   
ஆசனம்
 
1892. குஞ்சரத் தடக்கைய குழைச் சென்னிய
மஞ்சிவர் தோற்றத்து மகர வாயொடு
செஞ்சுடர் மணிநிரை யழுத்திச் செம்பொனால்
அஞ்சுட ருமிழ்வதவ் வணையின் வண்ணமே.
உரை
   
1893. ஏழிய லுலகிலுள்ளி ருளுங் கையகன்
றாழியல் வினைகேளா டவிய வாயிரம்
தாழொளி சுடரவன் றன்னைக் காணவோர்
சூழொளி மண்டிலஞ் சுடரத் தோன்றுமே.
உரை
   
கவரி
 
1894. கழுமிய பானிலாக் கதிரின் கற்றைகள்
செழுமணித் திரண்மிசைச் செறிந்த போல்வன
எழுவளர்த் தனையதோ ளியக்க ரேந்தின
தொழுதகை யுருவின கவரி தோன்றுமே.
உரை
   
குடை
 
1895. பருகலாம் பானிலாப் பரந்த மாமணி
அருகெலா மணிந்தக டம்பொ னார்ந்துமேற்
பெருகலாஞ் சுடரொளி பிறங்கி நின்றதம்
முருகுலாம் பிண்டியான் குடையின் மும்மையே.
உரை
   
1896. அழல்வளர்த் தனையன தழையு மவ்வழல்
தழல்வளர்த் தனையன மலருந் தாமரைப்
பொழில்வளர் வளையமும் பொதுளி வண்டினம்
குழைவள ரசோகின்மேற் குளிர்செய் கின்றவே.
உரை
   
1897. மாமழைக் கண்ணியர் மருங்கு போல்வன
தூமழை வளர்கொடி துவன்றிப் பத்திகள்
பாமழை யுருவுகள் பலவுந் தோன்றவே
பூமழை பொன்னிலம் புதைய வீழ்ந்தவே.
உரை
   
வானவர் வாத்தியவொலி
 
1898. மொய்த்திலங் கலர்மழை முருகு லாவிய
மைத்தலை விசும்பிடை மயங்க வானவர்
கைத்தலம் பரவிய காம ரின்னியம்
எத்திசை மருங்கினு மிரங்கித் தோன்றுமே.
உரை
   
கின்னரர்
 
1899. மைஞ்ஞலம் பருகிய கருங்கண் மாமணிப்
பைஞ்ஞலம் பருகிய பரும வல்குலார்
மெய்ஞ்ஞலம் விஞ்சையர் விரவ மேலெலாம்
கிஞ்ஞர மிதுனங்கள் கிளர்ந்து தோன்றுமே.
உரை
   
1900. எரிமணி நெடுமுடி யிமைப்பிற் செங்கணப்
புரிமணி வண்ணனும் பொன்செ யாழியத்
திருமணி வண்ணனுந் தேவி மார்களும்
அருமணி வண்ணனுக் கருகு தோன்றினார்.
உரை
   
1901. ஒண்டமர் மணிகளு மொளிர்பொற் சாதியும்
கொண்டன ரியற்றிய கோலச் செய்கையால்
கண்டவர் கண்கவர் நகரங் காண்டலும்
விண்டுதிர் வினையினன் வேந்த னாயினான்.
உரை
   
1902. பணியொடு நறுவிரை மெழுகிப் பன்மலர்
அணியுடை யனையன பலவுஞ் செய்தபின்
மணிமுடி நிலமுற வணங்கி வாமன்மேற்
றுணிபடு வினையினன் றுதிதொ டங்கினான்.
உரை
   
வேறு
 
1903. மூவடிவி னாலிரண்டு சூழ் சுடரு நாண
     முழுதுலக மூடியெழின் முளைவயிர நாற்றித்
தூவடிவி னாலிலங்கு வெண்குடையி னீழற்
     சுடரோ யுன்னடிபோற்றிச் சொல்லுவதொன் றுண்டால் 
சேவடிக டாமரையின் சேயிதழ்க டீண்டச்
     சிவந்தனவோ சேவடியின் செங்கதிர்கள் பாயப்
பூவடிவு கொண்டனவோ பொங்கொளிகள் சூழ்ந்து
     புலங்கொளா வாலெமக்கெம் புண்ணியர்தங் கோவே.
உரை
   
1904. கருமாலை வெவ்வினைகள் காறளர நூறிக்
     கடையிலா வொண்ஞானக் கதிர்விரித்தா யென்றும்
அருமாலை நன்னெறியை முன்பயந்தா யென்றும்
     அடியேமுன் னடிபரவு மாறறிவ தல்லால்
திருமாலே தேனாரு மரவிந்த மேந்துந்
     திருவணங்கு சேவடியாய் தேவாதி தேவ
பெருமானே நின்பெருமை நன்குணர மாட்டார்
     பிணங்குவார் தம்மைவினைப் பிணக்கொழிக்க லாமே.
உரை
   
1905. ஒளியாகி யுலகாகி நீவிரிந்தா யென்கோ
     உலகெலா நின்னொளியி னுள்ளடங்கிற் றென்கோ
அளியார யுலகநீ யாள்கின்றா யென்கோ
     அமருலகு தானின்ன தடியடைந்த தென்கோ
விளியாத மெய்ப்பொருளை நீவிரித்தா யென்கோ
     நீவிரித்த வாறேமெய்ப் பொருள்விரிந்த தென்கோ
தெளியாம லில்லைநின் றிருவடிகண் மெய்ம்மை
     தெளிந்தாலுஞ் செவ்வனே தெரிந்துரைக்க லாமே.
உரை
   
1906. களியானை நாற்கோட்ட தொன்றுடைய செல்வன்
     கண்ணொரா யிரமுடையான் கண்விளக்க மெய்தும்
ஒளியானை யூழி முத லானானை யோங்கி
     உலகளவு மாகியுயிர் தமக்குறுகண் செய்யா
அளியானை யாரழலஞ் சோதிவாய் சூழ்ந்த
     அருளாழி யானையிணை யடிபரவு வார்கட்
கெளியானை யெந்தை பெரு மானையே யல்லால்
     இறையாக வீங்கொருவ ரெண்ணுமா றென்னே.
உரை
   
1907. தெருளாமை யால் வினவற் பாலதொன் றுண்டு
     திருவடிகள் செம்பொனா ரரவிந்த மேந்த
இருளாழி யேழுலகுஞ் சூழொளியின் மூழ்க
     இமையாத செங் கண்ணி னிமையோர்வந் தேத்த
உருளாழி யானு மொளி மணிமுடிமேற் கைவைத்
     தொருபாலில் வரவுலக நின்னுழைய தாக
அருளாழி முன்செல்லப் பின்செல்வ தென்னோ
     அடிப்படா தாய்நின்ற வான்ஞால முண்டோ.
உரை
   
1908. வானோர்த முலகுடைய மானீல வண்ணன்
     மகிழ்ந்திறைஞ்சு மாலையணி மணிமுடிமேல் வைகா
ஊனாரு மறவாழி யோடைமால் யானை
     உடையான்ற னொளிமுடியின் மேலுரையோ நிற்கத்
தேனாரு மரவிந்தஞ் சென்றேந்தும் போழ்து
     திருவடிகள் செந்தோடு தீண்டாவே யாகில்
ஆனாவிம் மூவுலகு மாளுடைய பெம்மான்
     அடியுறுவா ரின்மைதா மறிவுண்ட தன்றே.
உரை
   
1909. தேனருளி மந்தாரச் செந்தாமந் தாழ்ந்து
     திரளரைய செம்பவளம் வம்பாக வூறி
வானருளி மாணிக்கச் செங்கதிர்கள் வீசி
     மதிமருட்டும் வெண்குடையோர் மூன்றுடைய வாமன்
யானருள வேண்டியடி யிணைபணியும் போழ்து
     இமையவர்கோ னாயிரச் செங்கணான் வந்து
தானருளு மாறென்று தாள்பணியும் போழ்துந்
     தகையொன்ற தேலிறைமை தக்கதே யன்றே.
உரை
   
1910. விண்டாங்கு வெவ்வினை வெரூஉவுதிர நூறி
      விரிகின்ற மெய்ஞ்ஞானச் சுடர் விளக்கு மாட்டிக்
கண்டார்க ணின்னிலைமை கண்டொழுக யானின்
     கதிர்மயங்கு சோதியாற் கண்விளக்கப் பட்டுத்
தண்டாஅ மரைமலரின்மே னடந்தா யென்றுந்
     தமனீயப் பொன்னணையின் மேலமர்ந்தா யென்றும்
வண்டார சோகி னிழல் வாயமர்ந்தா யென்றும்
     வாழ்த்தினால் வாராயோ வானவர்தங்கோவே.
உரை
   
1911. கருவார்ந்த பொருணிகழ்வுங் காலங்கண் மூன்றுங்
     கடையிலா நன்ஞானக் கதிரகத்த வாகி
ஒருவாதிங் கவ்வொளியி னின்னுள்ள வாகில்
     உலகெல்லா நின்னுளத் தேயொளிக்க வேண்டா
திருவார்ந்த தண்மார்ப தேவாதி தேவ
     திரளரைய செந்தளி ரசோகமர்ந்த செல்வ
வருவாரும் வையகமு நீயும்வே றாகி
     மணிமேனி மாலே மயக்குவதிங் கென்னோ.
உரை
   
1912. செங்க ணெடுமாலே செறிந்திலங்கு சோதித்
     திருமுயங்கு மூர்த்தியாய் செய்யதா மரையின்
அங்கணடி வைத்தருளு மாதியா யாழி
     அறவரசே யென்றுநின் னடிபணிவ தல்லால்
எங்க ணிட ரகலுமா றிந்நிலைமை யெய்தி
     இருளுலக நீக்குமரு டருகநீ யென்று
வெங்கணிரு வினையையற வென்றாய்முன்னின்று
     விண்ணப்பஞ் செய்யும் விழுத்தகைமை யுண்டோ.
உரை
   
வேறு
 
1913. என்றுநன் கேத்தி யிறைஞ்சி யிறைவனைச்
சென்றுயர் சேவடிச் சேடந் தலைவைத்து
வென்றவன் கோயில் வலங்கொண்டு மீண்டுமொர்
பொன்றவழ் வேதிகை மண்டபம் புக்கான்.
உரை
   
சாரணர்
 
1914. ஆங்கொர் முனிவ னருந்தவப் பல்குணந்
தாங்கிய மாமலை யன்ன தகையவன்
பூங்கமழ் சேவடிப் போதுதன் பொன்முடி
தாங்கிய தாம நுதியாற் றுடைத்தான்.
உரை
   
1915. ஆற்றி லமைந்த வருந்தவத் தால்வினை
ஊற்றுச் செறித்த வொருபெயர் மாதவன்
மாற்றரு மந்திர வாய்மொழி யாயிடை
ஏற்றன கொண்டாங் கிறைவ னிருந்தான்.
உரை
   
அமைச்சர் வேண்டுகோள்
 
1916. வணங்கி மணிமுடி மன்ன னிருப்ப
மணங்கமழ் கண்ணியர் மந்திர மாந்தர்
அணங்கு மறவமிழ் தூட்டி யடிகள்
பிணங்கும் பிறவிகள் பேர்த்துய்மி னென்றார்.
உரை
   
முனிவன் கூற்று
 
1917. வன்ன மணிமுடி மன்ன னிருந்திட
இன்னியற் செல்வ மெனைப்பல வெய்திய
மன்ன னறியுந் திருவற மாண்பினை
என்னை வினவிய தென்னைகோ லென்றான்.
உரை
   
அமைச்சர் கூற்று
 
1918. அடிக ளடிசி லமைந்த தயில்வான்
முடிய முயலு முறைமை யறியான்
நெடிதின துவறு நீர்மையு மோரான்
வடிவமர் செல்வன் வகையு மதுவே.
உரை
   
முனிவன் செயல்
 
1919. மந்திர மாந்தர் மொழிதலும் வானிடை
அந்தரம் வாழு மமரர் வழிபடும்
தந்திர ஞான்ற தவத்திற் கரசனும்
இந்திர னன்னாற் கெடுத்துரைக் கின்றான்.
உரை
   
முனிவர் உபதேசம்
 
1920. கதியுங் கதியினுட் டுப்புமத் துப்பின்
விதிசெய் வினையும் வினைவெல் வகையு
மதியவர் காமுறும் வீட்டது மாண்பும்
அதிபதி கேளென் றருந்தவன் சொன்னான்.
உரை
   
1921. ஓடுஞ் சகடத் துருளு மொளிகொள
வீடி லொருவன் விசிறும் வளையமும்
ஆடுந் துகளு மெனச்சுழன் றாருயிர்
நாடுங் கதியவை நான்குள கண்டாய்.
உரை
   
1922. நரகர் விலங்கு மனிதர்நற் றேவர்
விரவி னவர்தம் விகற்ப முரைப்பிற்
பெருகு முரையென்று பெய்ம்மலர்த் தாரோன்
உருக வொருவா றுறுவ னுரைத்தான்.
உரை
   
நரகர் கதி
 
1923. கீழா நரகங் கிளத்தும் படலங்கள்
ஏழா யிருபத் திரட்டியோ டொன்பது
போழா மவற்றுள் ளவர்கள் புகலிடம்
பாழா மிலக்கமெண் பஃதுட னான்கே.
உரை
   
நரகங்களின் பெயர்
 
1924. இருளி னிருளு மிருளும் புகையும்
அருளி லளறு மணலும் பரலும்
மருளின் மணியு மெனவிப் பெயர
பொருளி னரகங்கள் போதரக் கொண்ணீ.
உரை
   
1925. ஆங்க ணரக மடைந்தார் படுதுயர்
ஈங்க ணுரைப்பி னெமக்கும் பனிவரும்
வாங்கி யவற்றின் முதலதன் வார்த்தைகள்
பாங்கின் மொழிவன் பனிமலர்த் தாரோய்.
உரை
   
1926. பத்தடம் பத்தொடு மூன்றா மவற்றிடை
ஒத்த வுறையு ளிலக்கமொர் முப்பது
கொத்தெரி வெம்பவர் கும்பிக் குழியவை
இத்துணை யென்பதொ ரெல்லை யிலவே.
உரை
   
1927. பேழைப் பிளவும் பிலத்தின் முகங்களும்
தாழிப் பதலையும் போலுந் தகையன
ஆழப் பரந்த வழுக லளறவை
பீழைப் பதகர் பிறக்கு மிடமே.
உரை
   
வேதனைகள்
 
1928. குழிபடு கும்பிக் கருவாய் பெருகி
அழுக லுடம்பிவை யங்கு நிறைந்தால்
வழுவி யனல்படு பாறைக் கண் வைகிப்
புழுவி னுருள்வ பொரிவ பொடிவ.
உரை
   
1929. புழுவி னுருண்டு பொடிந்தவர் பொங்கி
எழுவர் புகையைந் தெழுந்தபின் மீட்டும்
வழுவினர் வீழ்வர் மறிந்துமவ் வாறே
ஒழிவிலா வேதனை யுள்ளள வெல்லாம்.
உரை
   
1930. அந்தோ வறனே வெனவழைப் பார்களை
வந்தோ மெனச்சொல்லி வாங்குபவ ரில்லை
வெந்தே விளிந்து மொழியார் விழுத்துயர்
முந்தே வினைய முயன்றனர் புக்கார்.
உரை
   
1931. அன்னணம் வேதனை யெய்து மவர்களைத்
துன்னி யுளர்சிலர் தூர்த்தத் தொழிலவர்
முன்னதிற் செய்த வினையின் முறைபல
இன்னண மெய்துமி னென்றிடர் செய்வார்.
உரை
   
1932. தங்கிருட் போதிற் றலைச்சென் றயன்மனை
அங்கு மகிழ்ந்தா ளவளிவள் காணெனச்
செங்கன லேயென வெம்பிய செம்பினில்
பொங்கனற் பாவைகள் புல்லப் புணர்ப்பார்.
உரை
   
1933. கொள்ளு மிவையெனக் கூட்டில் வளர்த்ததம்
வள்ளுகிர்ப் பேழ்வாய் ஞமலி வடிவுகள்
அள்ளிக் கதுவ வலறி யயலது
முள்ளிற் புனைமர மேற முயல்வார்.
உரை
   
1934. மேயப் பருவம் விரும்பிய மீனினம்
காயப் பெருந்தடி காண்மி னிவையெனத்
தீயைப் பருகிய செப்புத் திரளவை
வாயைப் பெருகப் பிளந்து மடுப்பார்.
உரை
   
1935. மறிப்பல கொன்று மடப்பிணை வீழ்த்துங்
கறிப்பல வெஃகிக் கறித்தவர் தம்மை
உறுப்புறுப் பாக வரிந்தரிந் தூட்டி
ஒறுப்பர் சிலரை யவரு மொருபால்.
உரை
   
1936. இடைப்பல சொல்லி யெளியவர் தம்மை
உடைப்பொருள் வெஃகி யொறுத்த பயத்தான்
முடைப்பொலி மேனியை முண்மத் திகையாற்
புடைப்ப நடுங்கிப் புரள்வ ரொருசார்.
உரை
   
1937. வெறுப்பன வேசெய்து மேலா யவரைக்
குறிப்பல சொல்லிய நாவைக் கொடிற்றால்
பறிப்பர் பரிய வயிரமுட் கொண்டு
செறிப்ப ருகிர்வழி யேறச் சிலரே.
உரை
   
1938. பொரிப்பர் சிறைசெய்து பொங்கெரி மாட்டிக்
கரிப்பர் கனல்படு காரக லேற்றித்
திரிப்பர் பலரையுஞ் செக்குர லுட்பெய்
துரிப்ப ருடலை யவரு மொருபால்.
உரை
   
1939. பழுப்பல பற்றிப் பறிப்பர் பதைப்ப
மழுப்பல கொண்டவர் மார்பம் பிளப்பர்
கழுப்பல வேற்றி யகைப்பர் கடிதே
விழுப்பெரும் பூணோய் வினையின் விளைவே.
உரை
   
1940. பறிப்பர் பலரவர் கைகளைப் பற்றிச்
செறிப்பர் விரல்களைச் சீவுவர் மேனி
நெறிப்ப ரெலும்பு நிரந்துடன் வீழ
மறிப்பர் மலைமிசை மற்று மொருசார்.
உரை
   
1941. சாவ நலிந்திடுந் தண்ணீர்ப் பிணிபெரி(து)
ஆவென் றலறு மவரையரு நஞ்சின்
வாவிகள் காட்டலின் மண்டி மடுத்துண்டு
நாவு மழுக நரல்வ ரொருசார்.
உரை
   
1942. அழலிவை யாற்றோ மெனவழன் றோடி
நிழலிவை யாமென நீள்பொழிற் புக்கால்
தழல்வளி தாமே தலைவழி சிந்தக்
கழல்வனர் வீழ்ந்து கரிவ ரொருசார்.
உரை
   
1943. முல்லை முகைமலர்த் தாரோய் முதற்புரை
அல்ல லெனைப்பல வாயிர கோடிகள்
எல்லையி றுன்ப மிவற்றி னிருமடி
புல்லினர் கீழ்க்கீழ்ப் புரைபுரை தோறும்.
உரை
   
1944. விளிவி றுயரொடு மேற்பொங்கி வீழும்
அளவு மவர்கண் முறையும் பிறவும்
அளவில் கீழ்க்கீ ழிரட்டி யறைந்தேன்
உளரொளி ஞானமஃ தொன்று மொழித்தே.
உரை
   
1945. பெய்யா வருநஞ்சும் பேரழற் குட்டமும்
செய்யாக் குழிகளுஞ் சீநீர்த் தடங்களும்
நையா நரக ரிடமிவை நாறினும்
உய்யா பிறவுயி ரோசனைக் கண்ணே.
உரை
   
1946. எழுவின் முழமூன் றறுவிர லென்ப
வழுவின் முதலதன் கீழ்ப்புரை வாழ்வார்
ஒழிவில பொங்குவ ரோசனை யேழ்மேன்
முழுவிலைஞ் ஞூற்றொடு முக்கா வதமே.
உரை
   
1947. ஆண்டுச் சிறுமை பதினா யிரமுள
நீண்டவர் வாழ்நா ணிறைவு கடலெல்லை
ஈண்டிதன் கீழ்க்கீழ்ப் பெருகிவரு மெங்கும்
வேண்டிற் சிறுமைதம் மேலோர் நிறைவே.
உரை
   
1948. மூன்று மொரேழு மொழிபஃதும் பத்தினோடே
ஏன்ற நல்லேழு மிருபத் திரண்டுமென்
றான்ற வலைகடன் முப்பத்து மூன்றுமென்
றூன்றின கீழ்க்கீ ழுயர்ந்தன வாழ்நாள்.
உரை
   
1949. முடைகொண் முழுச்செவி மொண்பற் பதகர்
உடையந் தலியிருப் புண்பது நஞ்சே
புடையவர் காணிய போர்நனி மூட்ட
மிடைவர் படுகொண்டு வேதனை மிக்கார்.
உரை
   
1950. வேவா ரழலுள் விளியா ரளற்றினுள்
ஓவார் புகையு ளுகையா வுழல்பவர்
ஆவா வளிய நரகர் படுதுயர்
ஏவார் சிலையா யிரங்குந் தகைத்தே.
உரை
   
1951. ஆங்குண் டெனப்படு மாழ்துயர் வீழ்பவர்
தேங்கொண்ட பைந்தார்த் திறன்மன்ன யாரெனில்
தாங்கொண்ட தார மறுத்துப் பிறன்வரைப்
பூங்கொண்டை மாரைப் புணரு மவரும்.
உரை
   
1952. உள்ளங் கொடியா ருயிர்க்கொலை காதலர்
வெள்ளங் கொடியன மேவிப் பிறன்பொருள்
கொள்ளுங் கொடுமைக் குணத்தின் மனித்தரும்
நள்ளலர்ச் சாய்த்தோய் நரக மடைவார்.
உரை
   
1953. நல்லறங் காய்ந்து நலிந்து பொருள்படைத்
தில்லறஞ் செய்யா திறுகு பவர்களும்
புல்லறம் புல்லாப் புலவரை வைதுரைத்
தல்லறஞ் செய்யு மறிவில் லவரும்.
உரை
   
1954. தெண்டிரை வாழுந் திமிலுங் கலங்களுங்
கொண்டிரை யாகவுயிர் கொல்லுஞ் சாதியும்
கண்டிடு காதனை நின்னாற் செயப்படும்
தண்டிக டம்மொடுஞ் சார்த்தினை கொண்ணீ.
உரை
   
1955. ஆறா நரக வழலினு ளாழ்பவர்
தேறார் திருவறந் தேறினு நல்வத
மேறார் சிலர்நனி யேறினு நில்லலர்
வேறா யினிச்சொல்ல வேண்டுவ துண்டோ.
உரை
   
விலங்குகதித்துன்பம்
 
1956. விலங்குடன் சாதி விரிப்பிற் பெருகும்
உலங்கொண்ட தோண்மன்ன வோரறி வாதி
புலங்கொண்ட வைம்பொறி யீறாப் புணர்ந்த
நலங்கொண்ட ஞாலத்தி னாடி யுணர்நீ.
உரை
   
1957. நின்று வருந்து நிகோதப் பிறவியுள்
ஒன்றறி வெய்தி யுழக்கு முயிர்பல
அன்றிச் சிறிதுண் டவற்றினு மவ்வழிச்
சென்று பெயர்வ சிலவுள கண்டாய்.
உரை
   
1958. ஓரறி வாகி யுழக்கு முயிர்களைப்
பேரறி வாரும் பிறரில்லை யின்னவை
யாரறி வாரழி யுந்திறம் யாதெனில்
கூரறி வில்லவர் கொன்றிடு கின்றார்.
உரை
   
1959. உயிர்தொகை யாறனு ளொன்றொழித் தேனைப்
பெயர்த்தொகை பெற்ற பிறவிக டம்மைப்
பயிர்த்தலு மின்றி யுலகம் பதைப்பச்
செயிர்த்தவர் போலச் செகுத்திடுங் கண்டாய்.
உரை
   
1960. ஏனை யொழிந்த வியங்குநற் சாதிகள்
ஆனை முதலா வளிய விலங்குகள்
மானுடர் பற்றி வலிந்து நலிந்திட
ஊனெய் யுருகு முழக்கு மொருபால்.
உரை
   
1961. ஊர்ந்து முழுது முறுபார மேந்தியும்
சாய்ந்த விலங்குக டாளுடைந் தாழ்தர
வீர்ந்து மறுத்து மிறைச்சி யுவப்பவர்
தேர்ந்து செகுப்பவுந் தேயுஞ் சிலவே.
உரை
   
1962. தடிவிலை வாழ்நர் தடிந்திடப் பட்டு
முடிவிலை வாழ்நர் முருக்க முரிந்தும்
கொடுவி லெயினர்கள் கொல்லக் குறைந்தும்
விடலில வேதனை வேந்த விலங்கே.
உரை
   
1963. அந்தோ வளிய விலங்குகள் யார்கண்ணும்
நொந்தோ மெனச்சென்று நோக்கி னுனிப்பொடு
வந்தோ மெனநின்ற மாண்புடை யார்களும்
உய்ந்தோய்ந் தொழிய முயன்றிடு கின்றார்.
உரை
   
முனிவரே அறிபவை
 
1964. கன்னியர் வேட்கை கடவு ளரும்பிணி
துன்னிய துன்ப விலங்கின் சுடுதுயர்
என்னு மிவற்றினை யெம்போல் பவரன்றி்
மன்ன வறிபவர் மற்றில்லை மன்னோ.
உரை
   
1965. வலிய முழங்கினு நாறினும் வட்கி
நலியு மிவை யென நையு மொருபால்
பலிபெறு தெய்வங்கண் மேலிட்டுப் பாற்றும்
கலியவர் கையுட் கழியு மொருபால்.
உரை
   
1966. கண்களி னோக்கியுங் காதலி னுள்ளியும்
மண்க ளிடைவிட்டு வைகியும் புல்லியும்
தண்கமழ் தார்மன்ன தாயர் வளர்ப்புழி
எண்களை யின்றிட ரெய்து மொருபால்.
உரை
   
1967. இன்னன துன்பமோ டிவ்விலங் காகுநர்
என்னவ ரென்னி னிவைநனி கேளினி
மன்னிய மாதவ மேற்கொண்டு மாயங்கள்
பின்னை முயல்வார் பிறப்பு மதுவே.
உரை
   
1968. பொருளிடை மாயம் புணர்த்தும் பிறரை
மருளிக ளாக மயக்கு மவரும்
இருளுடை யுள்ளமொ டேதங்க ளெண்ணா
அருளி லவரு மவைநனி யாவார்.
உரை
   
1969. பற்றொடு பற்றி முனிந்தார் பலபல
செற்ற நவின்றார் செறுப்பொடு சென்றவர்
சுற்ற மழிக்குந் துவர்ப்பகை துன்னினர்
மற்றிவ் விலங்கெய்து மன்னுயிர் மன்னா.
உரை
   
1970. இல்லையுயி ரென்று மில்லைபிறப் பென்று
நல்லன தீயன நாடி லிலவென்றும்
பல்லன சொல்லிப் படுத்துண்ணும் பாவிகள்
நில்லாது செல்வர் நிகோத கதியே.
உரை
   
மக்கட்கதி
 
1971. மாக மழைவண்கை மன்னவ மக்களும்
மேக கதியின ரநேக விகற்பினர்
சேகர் மிலைச்சர் மனிதர் கடிப்பியர்
போக மனித ரெனப்பொருட் பட்டார்.
உரை
   
சேகர்
 
1972. பத்து வகைய பரதவி ரேவதத்
தத்தகு கால விழிவி னகத்தவர்
சித்தந் தெளிவிலர் சீல மடைவிலர்
செத்த வறிவினர் சேக ரவரே.
உரை
   
மிலேச்சர்
 
1973. தீவினுள் வாழுங் குமானுடர் தேசத்து
மேவி யுறையு மிலைச்ச ரெனப்பெயர்
ஆவ ரவருண் மிலைச்ச ரவரையும்
வீவருந் தாரோய் விலங்கினுள் வைப்பாம்.
உரை
   
1974. வாலு நெடியர் வளைந்த வெயிற்றினர்
காலு மொரோவொன் றுடையர் கலையிலர்
நாலுஞ் செவியர் நவைசெய் மருப்பினர்
சீல மடைவிலர் தீவினுள் வாழ்வார்.
உரை
   
1975. மக்கட் பிறப்பெனு மாத்திர மல்லது
மிக்க வெளிற்று விலங்குக ளேயவர்
நக்க வுருவினர் நாணா வொழுக்கினர்
தொக்கனர் மண்ணே துளைத்துண்டு வாழ்வார்.
உரை
   
1976. பூவும் பழனு நுகர்ந்து பொழின்மரம்
மேவி யுறையு மிலைச்சர் மிகப்பலர்
ஓவலர் வாழ்வ தொருபளி தோபமென்
றேவல் சிலைமன்ன வெண்ணி யுணர்நீ.
உரை
   
மனிதர்
 
1977. தேச மிலைச்சரிற் சேர்வுடை யாரவர்
மாசின் மனிதர் வடிவின ராயினும்
கூசின் மனத்தர் கொடுந்தொழில் வாழ்க்கையர்
நீச ரவரையு நீரி னிழிப்பாம்.
உரை
   
1978. கூடன் மிலைச்சர் குமானுட ரென்றிவர்
ஏடவிழ் தாரோ யெவரா பவரெனில்
கோடிக் குதர்க்க முரைத்துக் குணங்களை
நாடினர் கொள்ளா நலமி லவரும்.
உரை
   
1979. அடங்கா மரபி னவர்கட் கடங்கார்
விடங்கார் மணந்த விடக்கும் பிறவும்
உடங்காய்ந் துணக்கொடுப் பாரு முயர்ந்தோர்
தொடங்கா வினைக டொடங்கு மவரும்.
உரை
   
1980. அன்ன பிறவியு ளாங்கவ ராபவர்
இன்னுஞ் சிலவ ரிழிகதிப் பாற்பட்டுத்
துன்னிய போழ்தே சுருங்கி யொழிபவர்
என்னும் பிறர்க ளறிவிற் கிகந்தார்.
உரை
   
1981. மக்கள் வதியு மிரண்டரைத் தீவினுள்
தக்க நிலத்துப் பிறந்தவர் தம்முளும்
முக்குலத் தாரொடுங் கூடா முயற்சியர்
ஒக்கலைப் போல்வார் பலரு முளரே.
உரை
   
1982. முக்குலத் தாரொடு மூடத் தொழுதியர்
தக்க தகாவென்ப தோராத் தகையவர்
மக்க ளெனப்படு வாரலர் மற்றவர்
பக்கங் கிடக்கும் பதரெனக் கொண்ணீ.
உரை
   
1983. நல்ல நிலங்க ணலங்கொள் வடிவுகள்
இல்லை யமர்ந்துழித் தோன்ற லெனவிவை
எல்லையில் யோனிக ளெல்லா மிகந்தெய்தல்
அல்லியந் தாரோ யரிது பேரிதே.
உரை
   
1984. அண்ணை யலிகுரு டாதி யவர்களை
மண்ணுயர் ஞாலத்து மானுட ராகவைத்
தெண்ணுநர் யாருள ரெல்லா மமையினும்
பெண்ணின் பிறவியும் பீடுடைத் தன்றே.
உரை
   
1985. எண்பத்து நான்கெனு நூறா யிரமுள
பண்பொத்த சாதிப் பதமென்ப மற்றவை
கண்பற்றுந் தாரோய் களிப்பதொர் நல்வினைத்
திண்பற் றுடையவ ரிவ்வுடல் சேர்வார்.
உரை
   
1986. சார்ந்த பொழுதே தலைநாட் கருவினுள்
வார்ந்து வழுவா தமைந்து வளரினும்
மீர்ந்தண் கமழ்நறுந் தாரோ யிடர்பல
கூர்ந்து வருபயாங் கூற வுலவா.
உரை
   
1987. குழவி யருஞ்சுரஞ் சென்று குமர
வழுவ வடவி யரிதி னிகந்தால்
கிழவெனு மெல்லை கெழீஇயினர் சார்ந்து
வழுவினர் செல்வது மற்றோர் கதியே.
உரை
   
மனித வின்பம் தாழ்ந்தது
 
1988. யானை துரப்ப வரவுறை யாழ்குழி
நானவிர் பற்றுபு நாலு மொருவனோர்
தேனெய் யழிதுளி நக்குந் திறத்தது
மானுய ரின்ப மதித்தனை கொண்ணீ.
உரை
   
1989. அன்பும் பிறவு மமைந்தாங் ககத்திருந்
தின்பங் கருது மிருவர்க் கிடைபல
துன்பங்க டோன்றுந் தொடர்ப்பா டுளவெனில்
முன்பவை யில்லெனின் முற்றுந் தொழிலே.
உரை
   
நன் மாண்பு
 
1990. இன்ன நிலைமை யிதனுட் பிறந்தவர்
மன்னுமொன் றுண்டு வதத்தாற் பெறுவது
பொன்னியல் சேர்கற்ப போக நிலங்களிற்
துன்னு முயற்சி துணியுந் திறமே.
உரை
   
முயற்சி துணி திறம்
 
1991. துன்னு முயற்சி துணியுந் திறமவை
பன்னி யுரைப்பிற் பலவாய்ப் பெருகினும்
தன்னிய றானந் தவமொடு பூசனை
என்னுமிந் நான்கென வெண்ணி யுணர்நீ.
உரை
   
1992. தலையு மிடையுங் கடையுமாச் சாற்றும்
நிலைமைய தான நிழன்மணிப் பூணோய்
உலைவி லேற்போ னுடனீ பவனீயும்
மலைவில் பொருளின்ன மாட்சிய மன்னா.
உரை
   
1993. ஐமை யமைந்தார்க் கெழுமை யமைந்தவர்
இம்மை நினையா ரிமைபத மீவழி
மும்மைக்கு மும்மடங் காய முறைமையில்
பொய்ம்மையில் புண்ணியம் போர்க்கும் புகுந்தே.
உரை
   
இரப்போர்
 
1994. துறவி யடக்கை பிறர்க்குநன் றாற்றல்
உறவினர்க் கோம்புதன் மெய்த்தலைப் பாடென்
றறிவ ரறைந்தாங் கறைந்தனன் றானங்
குறைவில னேற்பவற் கேற்ற குணனே.
உரை
   
வள்ளல்
 
1995. போதிசை வாற்றல் பொன்றுதறு கட்பம்
ஈதற் கிவறுத லேற்பவர் மாட்டெழு
காதல் கழிபற்றி லாமை தெரிந்தறி
வேதமின் றீவான் குணமிவை யேழே.
உரை
   
தன்னியல்
 
1996. தானு மடங்கி யடங்கினர்க் கேந்திய
ஊன முயிர்களுக் கெல்லா முணர்வது
ஞான வொழுக்கம் பெருகு நலத்ததை
ஈனமி லின்ப நிலங்கட் குவித்தே.
உரை
   
1997. கடைநின் றவருறு கண்கண் டிரங்கி
உடையதம் மாற்றலி லுண்டி கொடுத்தோர்
படைகெழு தானையர் பல்களி யானைக்
குடைகெழு வேந்தர்க ளாகுவர் கோவே.
உரை
   
பொருள்
 
1998. ஊறுபல செய்துயிர் கட்கிடர் செய்யும்
வீறில் பொருளை வினையவர்க் கீந்தவன்
ஏறும் பயனிஃ தென்றினி யான்சொல்லி
நாறிணர்த் தாரோய் நகுவ துடைத்தே.
உரை
   
1999. தன்கைப் பொருளு மிழந்து தனக்கொரு
புன்கட் கதிசெல்லும் வாயில் புணர்ப்பவன்
வன்கட் பதகர்க்கு வான்பொருள் கைக்கொடுத்
தென்கைப் பணிகொண்மி னென்பவ னொத்தான்.
உரை
   
தானப்பயன்
 
2000. ஒத்த குணங்க ளமைந்தாங் குறுவர்க்குத்
தத்துவந் தேறி யவன்செய்த தானங்கள்
முத்திறத் துள்ளும் படாது முடிமன்ன
உத்தம தேவரு ளுய்க்கு முணர்நீ.
உரை
   
2001. மிக்க விரதம் விரிபல வாயினும்
தொக்கன வைந்திற் சொலுமூன்றி னான்கினில்
ஒக்க வவற்றி னுறுபயஞ் சொல்லிடில்
தக்கவர்க் கொத்ததிற் றன்னங் குறைவே.
உரை
   
விரதம்
 
2002. எல்லா விரத மியல்பொக்கு மாயினும்
அல்லா விரத மனையா யவர்கட்குக்
கொல்லா விரதங் குடைமன்ன வாமெனின்
வெல்லா வகையில்லை வீங்கெழிற் றோளாய்.
உரை
   
தவத்தின் இயல்பு
 
2003. தம்மை யுடையவர் தாங்குந் தவத்தியல்
எம்மை வினவி னெமக்கு முரைப்பரி
தும்மையுலகத் தொளிபடு மூக்கமோ
டிம்மை யிகந்தார்க் கிசையு மதுவே.
உரை
   
2004. தவஞ்செய்து வந்தார் தவநிலை நிற்பார்
அவஞ்செய்து வந்தார்க் கரிது பெரிதும்
பவஞ்செய்து மாக்கள் பரியு மதுதான்
எவன் செய்து மென்னை யீர்மலர்த் தாரோய்.
உரை
   
2005. தெருண்டவர் மேற்கொளுஞ் செய்தவச் செல்வம்
இரண்டும் பலவு மியலாய்ப் பெருகு
மருண்டினி யென்னவை வந்த பொழுதே
முரண்டரு தோண்மன்ன முற்ற வுணர்நீ.
உரை
   
பூசனைப்பயன்
 
2006. உலகங்கண் மூன்று முடைய பெருமாற்
கலகையில் பூசனை யாற்ற முயன்றால்
திலக மிவரெனத் தேவர்க ளாவர்
விலகுஞ் சுடரொளி வீங்கெழிற் றோளாய்.
உரை
   
புண்ணிய வாயில் ஏழ்
 
2007. புண்ணிய வாயி லெனநாம் புகழ்ந்துரை
கண்ணிய நான்கா யடங்கு மடங்கினும்
நுண்ணிய நூல்வழி நோக்கி நுனித்தவர்
எண்ணிய வாயில்க ளின்னு முளவே.
உரை
   
2008. அருளுந் தெருளுங் குணத்தின்க ணார்வமும்
பொருளொன்று சேரும் புகழ்ச்சி நிகழ்வும்
மருளி றவமும் வாலிய ஞானமும்
இருளறு தியான நிகழ்வுமென் றேழே.
உரை
   
அருள்
 
2009. ஆருயிர் யாதொன் றிடருறு மாங்கதற்
கோருயிர் போல வுருகி யுயக்கொள்ள
நேரி னதுமுடி யாதெனி னெஞ்சகத்
தீர முடைமை யருளி னியல்பே.
உரை
   
தெருள்
 
2010. வையினும் வாழ்த்தினும் வாளா விருப்பினும்
வெய்ய முனிதல் குளிர்தல் வெறுப்பொடு
மையன் மும் மூடப் பகுதி மயக்கின்மை
செய்ய மனத்தோர் தெருளின் றிறமே.
உரை
   
குணத்தின்கண் ஆர்வம்
 
2011. அறிவ ரடிமுத லார்வம் பெருக்கல்
உறுவ ரொழுக்க முவத்தன் முதலா
இறுதியில் பல்குண நோக்கமென் றின்ன
செறிதலி லார்வங்கள் செல்வந் தருமே.
உரை
   
புகழ்
 
2012. ஆற்றல் வகையா லருந்தவ மேற்கொண்டு
நோற்று நுனித்த லொழுக்கந் தலைநிற்றல்
போற்றி யுரைத்தல் புகழ்ச்சி நிகழ்விஃ
தேற்று மிருவிசும் பீர்மலர்த் தாரோய்.
உரை
   
தவம்
 
2013. அற்ற துவர்ப்பின ராகு மருநிலை
உற்றவர்க் கிவ்வா றொழுக்கந் தலைநிற்றல்
நற்றவ மென்றிங்கு நாங்கண் மொழிந்தது
மற்றிது வானுல காள்விக்கு மன்னா.
உரை
   
ஞானம்
 
2014. நூற்பொருள் கேட்டு நுனித்தோ ருணர்வது
மாற்படை கூட்டு மயங்கிரு டீர்ப்பது
மேற்படை மெய்ம்மை விளக்கும் விளக்கது
நாற்படை யோய்நல்ல ஞான நிகழ்வே.
உரை
   
தியானம்
 
2015. சென்று பெருகுந் தியான நிகழ்ச்சியும்
ஒன்ற வுரைப்பி னொருநால் வகைப்படும்
நன்றியின் மாற்றினை நல்குமிரண் டல்லன
வென்றி விசும்பொடு வீடுந் தருமே.
உரை
   
2016. போற்றிய புண்ணியப் பொற்சுண்ண முன்புகழ்
வாற்றி முயல்வார்க் ககநிகழ் வாமவை
மாற்றிய வற்றை மறுதலை யாக்கொளிற்
பாற்றி யுழப்பிக்கும் பாக நிகழ்வே.
உரை
   
2017. காட்சி யெனும்பெயர்க் கதிர்விளக் கேற்றிய
மாட்சி யுடையார் வதமில ராயினும்
ஆட்சி கரிதன் றமருல கல்லது
மீட்சியில் பேரின்ப வெள்ளத் துழவே.
உரை
   
2018. மெய்ப்பொரு டேறுதல் காட்சி விளக்கது
செப்படு மாயின் வினையெனுந் தீயிருள்
அப்படி மானு நிலையன் றதனைநின்
கைப்பொரு ளாக்கொள் கதிர்மணிப் பூணோய்.
உரை
   
தெய்வ மனிதர்
 
2019. தெய்வ மனித ரவரைத் தெளிவுறின்
ஐய விசயனு மாழி வலவனும்
எய்த விவர்முத லீரொன்ப தின்மரிவ்
வைய மருள வருந ருளரே.
உரை
   
பிரதி வாசுதேவர்
 
2020. ஆழி யிழந்த வயகண்ட னாதியாப்
பாழி வலவன் பகைவர்மும் மூவரும்
வீழ வுரைத்தேன் வியன்பெரு ஞாலத்துள்
ஊழிதொ றூழி யுலப்பில கண்டாய்.
உரை
   
சக்கரவர்த்திகள்
 
2021. தேய வினைவெல்லுந் தெய்வ மனிதருள்
நீயு மொருவனை நின்குலத் தாதிக்கட்
பாய விழுச்சீர்ப் பரதனை யுள்ளுறுத்
தாய திகிரி யவரு மவரே.
உரை
   
தீர்த்தங்கரர்
 
2022. தீர்த்தஞ் சிறக்குந் திருமறு மார்பரும்
பேர்த்துப் பிறவாப் பெருமை பெறுநரும்
ஓர்த்திவ் வுலகினு ளுத்தமர் மற்றவர்
தார்த்தங்கு மார்ப தவத்தின் வருவார்.
உரை
   
போக மனிதர்

வேறு
 
2023. தக்கமிகு தானமுத லாயதலை நிற்கும்
மக்களிவ ராவர்மத யானைமற வேலோய்
புக்கவரு ளேபடுவர் போகநிலஞ் சார்ந்தார்
ஒக்கவவர் தன்மையு முரைக்கவுல வாவே.
உரை
   
2024. உத்தமர்க ளேனையிடை யோர்கள்கடை யோராம்
முத்தகைய ராவரவர் மூரிநெடு வேலோய்
பத்துவகை பாதவ மியற்றிய பயத்தால்
அத்தகைய செய்கையு மவர்க்கனைய கண்டாய்.
உரை
   
2025. அங்கிருவர் தம்பதிகள் செய்கையை யறைந்தால்
இங்கிருவர் செய்கைதமை யெண்ணியறி வாய்நீ
தங்குரவ ரோடிருவர் மாறிருவர் தாமாய்
இங்கிருவர் தேவர்கள் வளர்ப்பவியல் கின்றார்.
உரை
   
2026. நக்ககுழ விப்பருவ நாற்பதினொ டொன்பான்
ஒக்கவரு நாள்கள்கலை யோடுட னிறைந்தால்
மிக்கவொளி சூழ்ந்துமிளிர் மேனியவ ராகித்
தக்கவிள மைப்பருவ மெய்தினர்க டாமே.
உரை
   
2027. கொம்பழகு கொண்டகுழை நுண்ணிடை நுடங்க
வம்பழகு கொண்டமணி மென்முலை வளர்ந்தாங்
கம்பவழ வாயுளணி முள்ளெயி றிலங்கச்
செம்பவழ மேனியவள் கன்னிமை சிறந்தாள்.
உரை
   
2028. நீலமணி கண்டனைய குஞ்சிக ணிறைந்தான்
ஞாலமளி கொண்டநளிர் தாமரை முகத்தான்
கோலமணி மால்குவடு குங்கும மடுத்தால்
போலுமணி மேனியொடு காளை பொலிவுற்றான்.
உரை
   
2029. தாதுபடு சண்பக மிகந்த நறுமேனிக்
காதுபுனை காமர்குழை பொற்சுருளை மின்ன
மீதுபடு கற்பக விளந்தளிர் மிலைச்சிப்
போதுபுனை கோதையவள் பூம்பொழி லணைந்தாள்.
உரை
   
2030. பவழவரை யன்னதிர டோட்பரவை மார்பன்
றவழுமணி யாரமொடு தார்மணி தயங்கக்
கவழமனை மேவுகளி யானையென வந்தாங்
கவிழுமல ரீர்ம்பொழிலு ளையனு மணைந்தான்.
உரை
   
2031. கன்னியவள் மேலிளைய காளையிரு கண்ணும்
மன்னுகமழ் தாமரையின் வாயித ழலங்கல்
பின்னியென வீழ்ந்த பிணை யன்னவவள் கண்ணும்
துன்னுமிரு நீலமென வந்தெதிர் துதைந்த.
உரை
   
2032. நையுமென நின்றவிடை யாள்குணமோர் நான்கும்
வையமகிழ் காளையிவன் மாண்டகுண நான்கும்
ஐயென வகன்றன வணைந்தனர் கனிந்தார்
மெய்யுமிடை வுற்றவிது வால்விதியின் வண்ணம்.
உரை
   
2033. அன்றுமுதன் மூன்றளவு மல்லமுடி காறும்
சென்றுபெரு கிக்களி சிறந்துநனி காமம்
என்றுமிடை யின்றியிமை யாரினுகர் வார்க்கு
நின்றது பிராயமது வேநிழலும் வேலோய்.
உரை
   
போகநிலம்
 
2034. கங்குலவ ணில்லைகலி யில்லைநலி வில்லை
அங்கவர்க ணாளிடைக ழித்தமிழ் தயின்றால்
எங்குமில வின்பவெழி லெய்தறரு மீதால்
தங்கிய தவத்தரசர்க் கீந்தபயன் றானே.
உரை
   
2035. அன்னமிகு போகமவ ரெய்திவிளை யாடி
முன்னமுடி பல்லமவை மூன்றுடன் முடித்தால்
பின்னுமவர் தம்வழி பிறந்தவரை நோக்கி
மின்னுமினி தேறுவது வானுலக மன்னா.
உரை
   
2036. பல்லமுத லோர்பகுதி மூன்றிரண்டு மொன்றும்
அல்லவிரு வர்க்க மிழ்து மம்முறையி னேறும்
நல்லநிலங் காலமுயர் வென்றிவைக ணாடிச்
சொல்லவுல வா விவர்கள் செய்கைசுடர் வேலோய்.
உரை
   
2037. செம்பவழம் வெண்பளிங்கு பைந்தளிர் சிறக்கும்
வம்பழகு கொண்டமணி மேனியவர் பூவார்
கொம்பவிழுஞ் சண்பகங்கண் முல்லையிணர்க் கோங்கம்
அம்பவழ வண்ண முதலானவர்மெய் நாற்றம்.
உரை
   
2038. நலங்கண்மிகு நம்முலகி னன்மைமிகு நீரால்
புலங்கண்மிகு போகமொடு போகநிலத் துள்ளால்
விலங்கொடுள வாழ்பறவை யவ்வுடம்பு விட்டால்
கலங்கண்மிகு கற்பநில மேறுவன கண்டாய்.
உரை
   
தேவர்கதித் துன்பம்

வேறு
 
2039. பூவிரியு நறுமேனிப் பொன்னிலங்கு நிமிர்சோதித்
தேவர்கடந் திறமுரைத்த றேவருக்கு மரிதெனினும்
நாவிரவி நாமுரைப்ப நால்வகையாய் விரியுமவை
ஓவரிய பெரும்புகழா யொருவகையா லுரைப்பக்கேள்.
உரை
   
2040. ஈரைவர் பவணர்களு மிருநால்வர் வியந்தரரும்
ஒரைவர் சோதிடரு மொருபதின்மே லறுவரெனுங்
காரைய முறுவகையாய் கற்பகரு மீயுலகிற்
சீரைய மில்லாத திருமலர்த்தார்த் தேவரே.
உரை
   
2041. உற்றவர்க்கு மேலவர்க ளொன்பதின்ம ரொன்பதின்மர்
மற்றவர்க்கு மேலவரை வகையரவர் மேலவர்கள்
இற்றவர தெண்வகையா மிவர்க்கென்று மில்லாத
செற்றநோய் செயிர்பகையென் றிவைமுதலசெல வுணர்நீ
உரை
   
பவணர்
 
2042. அருமணியி னொளிநிழற்று மாயிரமாம் பணமணிந்த
திருமணிசேர் முடியவருந் தீயொழுகு சிகையருமாப்
பருமணிய படலஞ்சேர் பவணத்துப் பதின்மர்கெளாண்
குருமணிகொ ணெடுமுடியாய் கூறுபா டுடையவரே.
உரை
   
வியந்தரர்
 
2043. கின்னரர்கண் முதலாய வியந்தரரைக் கிளந்துரைப்பின்
இன்னநர ருலகத்து ளெவ்வழியு முளராகி
மென்னரம்பி னிசைகேட்டும் வெறியயர்வு கண்டுவந்தும்
மன்னவரை வணங்கியுந்தம் மனமகிழ்வ ரொருசாரார்.
உரை
   
2044. குலகிரியு மலையரசுங் குளிர்பொழிலு நளிர்கயமும்
பலகிரியுந் தீவகமும் படுகடலும் படிநகரும்
உலகிரிய வெளிப்பட்டு மொளிகரந்து முறைந்தியல்வர்
அலகிரியும் பலகுணத்தோ யமரர்களே னைப்பலரே.
உரை
   
சோதிடர்
 
2045. சந்திரருஞ் சூரியருந் தாரகையு நாண்மீனும்
வெந்திறல கோட்களுமா மெனவிளங்கி விசும்பாறா
மந்தரத்தை வலஞ்சூழ்ந்து வருபவரு நிற்பவரும்
சுந்தரஞ்சேர் மணிமுடியாய் சுடர்பவருஞ் சோதிடரே.
உரை
   
2046. எண்ணியமுத் தேவர்களு மிவர்மடந்தை யவருமாய்க்
கண்ணியறூ நற்காட்சிக் கதிர்விளக்குத் தூண்டினார்
நண்ணுபவோ வெனினண்ணார் நல்விரதந் தலைநின்று
புண்ணியங்கள் படைத்தாரக் குழுவினிடைப் பொலிவாரே.
உரை
   
2047. காதலரிற் பிழையாராய்க் கள்ளூன்றேன் கடிந்தகற்றி
ஈதலோ டில்லிருக்கு மிளம்பிடியர் முதலாயார்
ஓதினமுத் தேவரா யுயர்ந்தவர்க்கு ளுயர்ந்துளராய்ச்
சோதியும்பே ரெண்குணனுந் துப்புரவுந் துன்னுவரே.
உரை
   
கற்பகர்
 
2048. மந்தரமா நெடுமலையின் மத்தகத்து மேற்கூற்றின்
அந்தரப்பே ருலகத்து ளமரரைமற் றறையுங்கால்
இந்திரவில் லெனவெளிப்பட் டிமையவர்க டொழுதேத்தச்
சுந்தரநன் மணிப்படிவ மெனச்சுடர்ந்து தோன்றுவரே.
உரை
   
2049. அலர்மாரி மேற்சொரிவா ரமிழ்தநீ ராட்டுவார்
பலர்மாண்ட கலனணிந்து பலாண்டிசைப்பார் பாடுவார்
மலர்மாண்ட மணிக்கவரி மருங்கசைப்பார் மடந்தையரைச்
சிலர்மாணச் சேர்த்துவார் தேவரா யதுபொழுதே.
உரை
   
2050. ஆடாது மொளிதிகழு மாரணங்கு திருமேனி
வாடாத கண்ணியினர் மழுங்காத பூந்துகிலர்
ஏடார்ந்த தொங்கலரா யின்பநீர்ப் பெருவெள்ளம்
நீடாரக் குளித்தாடு நிலைமையரே யவரெல்லாம்.
உரை
   
2051. பொன்மாட நெடுநிலத்தார் புகலமளி யணைமேலார்
கன்மாடு பொன்வளருங் கதிர்மணிக்குன் றதன்மேலார்
மின்மாடு மிளிர்ந்திலங்கு விமானத்தா ரெனினல்லால்
சொன்மாடு பிறிதில்லைச் சுவர்க்கஞ்சேர்ந் தவர்கட்கே.
உரை
   
2052. கந்தருவக் கோட்டியுள்ளார் கண்கனிய நாடகங்கண்
டிந்திரனோ டினிதினிருந் திளம்பிடியார் பாராட்டச்
சுந்தரமா மணிமாடச் சூளிகைய ரெனினல்லால்
அந்தரமேற் பிறிதில்லை யமரருல கடைந்தவர்க்கே.
உரை
   
2053. கந்தாரங் களித்தனைய பனிமொழியார் கண்கவர
மந்தார வனத்திடையார் மணிமுழவி னிசைவாங்க
மந்தார மணியரங்கி னெனும்வார்த்தை யவையல்லாற்
செந்தாரோய் தேவர்கள் செய் திறற்றொழின்மற் றுடையரே.
உரை
   
2054. தீர்த்தங்க டிறந்தவர்க்குச் சிறப்போடு திசையெல்லாந்
தேர்த்தங்க ணொளிபரப்பச் செல்பொழுதுந் தம்முலகில்
கார்த்தங்கு மயிலனையார் காமஞ்சேர் கனிகோட்டி
தார்த்தங்கு வரைமார்ப தம்முருவி னகலாரே.
உரை
   
2055. இமையாத செங்கண்ண ரிரவறியார் பகலறியார்
அமையாத பிறப்பறியா ரழலறியார் பனியறியார்
சுமையாகி மணிமாலை சுடர்ந்திலங்கு நெடுமுடியார்
அமையாத நல்லுலகி னகைமணிப்பூ ணமரரே.
உரை
   
தேவர் குணஞ் செய்தல்
 
2056. அணுவளவாய்ச் சிறுகுதன்மற் றதிநுட்ப மிகப்பெருகல்
நணியவர்போ னினைத்துழியே நண்ணுறுதல் விழைதகைமை
பணியினமைத் திடல்குறிப்பிற் பலவுருவு நனிகோடல்
துணிவமையு நெடுவேலோய் சுரருடைய குணங்களே.
உரை
   
தேவர் அடையும் துன்பம்
 
2057. அளிதருஞ்செங் கோலுடையோ யமரருக்குமந்தரமுண்
டொளியோடு பேரின்ப முயர்ந்தவர்க்கே யுயர்ந்துளவாம்
தெளிதரு நற் காட்சியது திருந்தியமே னெடுந்தகையோர்க்
கெளிதகவும் பெரும்பாலும் பெறலேனோர்க் கரியவே.
உரை
   
2058. கனைகதிராக் கதிர்கலந்து கண்ணிலங்கு திருமூர்த்தி
புனைகதிரொண் மணிப்படிவம் பொழிந்ததுபோற் பொலிந்ததன்மேல்
வனைகதிரின் மணிமுடியும் மாணிக்கக் கடகமுமென்
றினமுதலாச் சிடர்ந்தினிதி னியல்பாய்நின் றெரியுமே.
உரை
   
2059. செழுந்திரட்பூம் பாவைகளுந் திகழ்மணியின் சுடர்க்கொழுந்தும்
எழுந்திலங்கு மேனியரா யெரியுமணிக் கலந்தாங்கி
மொழிந்துலவாக் காரிகையார் முலைமுற்றா விளமையார்
அழிந்தலராக் காரிகைமா ரமரரசர் தேவியரே.
உரை
   
2060. இன்பமே பெரிதாகி யிடையறவின் றிமைப்பளவும்
துன்பமொன் றில்லாத துறக்கத்திற் பெருஞ்செல்வம்
மன்பெருமா தவத்தினால் வருமொருநா ளீறுடைய
தன்பதன்கண் மிசையேயென் றடிகடரு பொரு டெளிந்தார்.
உரை
   
2061. பவணத்தார்க் கொருகடலா மிகையமரும் பல்லமொன்றாம்
இவணொத்த வமரருக்கு மிருவிசும்பிற் சுடரவர்க்கும்
சிவணொத்த வுயர்வாழ்நாள் சென்றபினர்ச் செல்கதியும்
அவணொத்த தத்தமது விதிவகையா மதிபதியே.
உரை
   
2062. இரண்டாகு முதலவர்கட் கேழீரைந் தீரேழாய்த்
திரண்டிரண்டாய் மூவுலகத் தொழிந்தவர்சேர் பிரண் டிரண்டாய்
அரண்டகவந் தேறிப்பின் னாரணவச் சுதருலகின்
மருண்டாய மணிமுந்நீர் பதினொன்றற் கிருமடியே.
உரை
   
2063. ஆங்கவர்மே லமரரசர் மும்மூவர்க் கொரோவொன்றாய்
ஓங்கினர்மே லொன்பதின்மர்க் கொன்றொன்றா யவர்மேலார்
பாங்கினுறப் பெறுகுவன பதினைந்திற் கிருமடிமேல்
வாங்கொலிநீ ரொருமூன்று வாழ்வென்ப மணிமுடியாய்.
உரை
   
2064. ஆயிடைய வமரரசர் திறம்வினவி னணங்கனையார்
வேயிடைமென் பணைப்பொற்றோள் விழைவின்றிப் பெரிதாகி
ஏயிடையோ ரறவின்றா வின்பஞ்செய் திருமூர்த்தி
சேயிடையொள் ெளாளிநிழற்றச் செம்மாந்தா ரிருந்தாரே.
உரை
   
2065. ஊனிலா வுறுப்பமையா வொளியமா யுலகெல்லாம்
பானிலாப் பரந்தெறிப்பப் பளிங்கினது படிவம்போன்
மேனிலா மணியனையார் வெண்சங்கே ரிலைச்சையாம்
கோனிலா வவரின்மிக் கவரில்லைக் குடைவேந்தே.
உரை
   
2066. அப்பால தத்திதியா மதனிலமைந் தாலூணின்
றொப்பாரும் பிறிதிவணின் றூழிநாட் பெயர்ந்திழிவின்
றெப்பாலுந் திரிவின்றோ ரியல்பாய வின்பத்தான்
மெய்ப்பால தவ்வரைசர் வீற்றிருக்கும் வியனுலகே.
உரை
   
அறவுரை
 
2067. கதிநான்குங் கதிசேரும் வாயிலுமிவ் விவையிதனால்
விதிமாண்ட நரகமும்புன் விலங்குகளுஞ் சேராமை
மதிமாண்ட நற்காட்சி வழிநின்று தவந்தாங்கில்
நிதிமாண்ட பெருஞ்செல்வ நீங்காத வியல்பென்றான்.
உரை
   
2068. உறுதிகணன் குரைக்குங்கா லுபசார முரைப்பதோ
அறுதியில்பே ரருளீரென் றரசனாங் கடிதொழலும்
இறுதியிலாப் பேரின்ப மெய்துமா றெடுத்துரைத்தான்
மறுதரவில் கதிபடரு மாதவத்து வரம்பாயோன்.
உரை