100காஞ்சிப் புராணம்


     இமவரைப் பிராட்டி கவுரமா நிறம்பெற் றெம்பிரான் வதுவை-
வேட்டதுவும், உமையவள் காள உரியினில் உயிர்த்த ஒளியிழை
அவுணரை மாட்டி, விமலநா யகன்றன் அருள்பெறு மாறும் மேதகு
விம்மிதத் திறமும், அமைவர ஒழுகும் ஒழுக்கமும் எங்கோன்
அருட்சிவ புண்ணியப் பேறும்.                           30

     இமயவல்லி பொன்நிறம் பெற்றுக் ‘கவுரி’ எனும் பெயர் ஏற்று
எம்பெருமானைத் திருமணம் புணர்ந்ததும். உமையவள் தன் கருநிறச்
சட்டையில் தோற்றிய காளி அவுணரைக் கொன்று புனிதன் அருள்
பெற்றதும்; மேன்மை அமைந்த அற்புதமும்; பொருந்துதல் வர ஒழுகும்
ஒழுக்கமும்; சிவபுண்ணியப் பயனும்; இப்புராணத்துட் கூறப்பெறும்.

     மற்றுமோ ராற்றாற் கிளந்திடுந் திறத்தின் மால்வரைக்
கயிலையின் உமையாள், கற்றையஞ் சடையார் விழியிணை புதைத்துக்
காஞ்சியிற் பூசனை யாற்றும், பெற்றியும் அந்தர் வேதியுங் கரிகால்
வளவர்கோன் பெருமையும் வினைநோய், செற்றிடுந் தீர்த்தம் முதலிய
மூன்றின் சிறப்பும் ஈண்டியம்பிடப் படுமால்.                31

     இனி, வேறொருமுறையிற் கயிலையில் உமையம்மையார் இறைவன்
கண்களை இறுகப்பொத்திகாஞ்சியிற் சிவ பூசைசெய்த இயல்பும், அந்தர்
வேதி வரலாறும், கரிகாற் சோழன் பெருமையும், இருவினைகளையும் பிறவி
நோயையும் போக்கும் தீர்த்தம் முதலிய மூன்றன் சிறப்புக்களும் ஈண்டுப்
பேசப் பெறும்.

பதிகம் முற்றுப் பெற்றது.

ஆகத் திருவிருத்தம் - 329