வேதமும், வேதாங்கங்களும், சிந்தித்துத்தெளிந்தவர்; வேதத்தின் முடிவுகண்ட அறிவினர்; விமலர்க்கு உறையுளாம் திருவைந்தெழுத்தையே கணிப்பவர், ஐம்பொறியைத் தடுத்தலால் உயர்ந்தவர்; மனையாள் மகவொடும் செந்தீ வளர்ப்பவர்; தம்முயிரைப்போலச் சிற்றுயிர்களையும் எண்ணிப் பேரருளிற்கு அளவு கோலாயுள்ளவர்; இத்தன்மையோர் விளங்க ஓரிடத்துக் குழுமி, அந்தித்த, அந்தம் என்பதன் அடிப்பிறந்த பெயரெச்சம்; ‘கந்தித்த’ என்பது-போலக் கொள்க. ‘வனத்தின்கட் டீயோ’டும் சென்று தங்கல், (திருக். பரி. உரை) வானப்பிரத்த நிலை இது. கரைமிடற் றிறையைக் கண்ணுறக் காணுங் காட்சியாங் கணிச்சியின் அல்லால், மறவினைக் கனிகள் மல்கிய உலக வாழ்வெனும் நச்சுமா மரத்தை, இறுமுறை காண்ப தரிதெனத் துணிந்தார் இதுபெறும் உபாயம்மற் றெவனென், றறிவினில் நெடும்போ தாய்வுழி அவருள் அருந்ததி கொழுநன்ஈ தறையும். 12 திருநீலகண்டப் பெருமானை எதிர் தோன்றக் காணுங் காட்சியாகிய மழுப்படை கொண்டன்றிப் பாவச் செயல்களாகிய பழங்கள் மிகுந்த உலகவாழ்க்கை யென்னும் விடமாமரத்தை அழிக்கின்ற வகை காண்டல் அரிதென்று ஒரு முடிவிற்கு வந்தவர் அக்காட்சியைப் பெறும் உபாயம் யாதென் றறிவினில் நெடுங்காலம் ஆராய்கையில் அக்குழாத்தவருள் அருந்ததிக்குக் கணவராகிய வசிட்டர் இதனைச் சொல்வார். தவம் அறுசீரடி யாசிரிய விருத்தம் தவமே மேலாம் நெறியாகும் தவமே சிவனார் தமைக்காட்டும் தவமே துறக்கம் அடைவிக்கும் தவமே நரனைத் தேவாக்கும் தவமே வலாரி திசைக்கிறைவர் சார்ங்கன் அயனும் ஆக்குவிக்கும் தவமே கிடைப்பிற் கிடையாத துண்டோ என்று சாற்றினனால் 13 | தவமே மேலாகிய சாதனம் ஆகும்; அத்தவமே சிவபிரானைத் தரிசிப்பிக்கும்; அதுவே சுவர்க்கத்திற் சேர்க்கும்; மானுடனைத் தேவனாக்கும்; இந்திரனும் ஆக்கும், ஏனைய திக்குப் பாலகர்கள் ஆக்கும்; திருமால் பிரமரும் ஆக்கும்; அத்தவமே வாய்த்தல் அரிது; அது வாய்ப்பின் வாய்க்காததுண்டோ என்று விரித்துரைத்தார். அறம் அறமே மறங்கள் முழுதழிக்கும் அறமே கடவுள் உலகேற்றும் அறமே சிவனுக் கொருவடிவ மாகும் சிவனை வழிபடுவோர்க் கறமே எல்லாப் பெரும்பயனும் அளிக்கும் யார்க்கும் எவ்விடத்தும் அறமே அச்சந் தவிர்ப்பதென அறைந்தான் சாதா தபமுனிவன். 14 | |