இங்ஙனம் முனிவரர் பலரும் தத்தம் மனக் கருத்தையே வலியுறுத்திப் பேசி மாறுபடுகையில், தவமுடையராகிய தாங்கள் செய் நலமுடைய பெருந் தவம் கொணர்ந்தாற் போல நைமிச வனத்தை அணுகினர் விடையூரும் விமலன்றன் திருவடிகளை இடையறாத நினைவால் தடவுகின்ற பேசப் பெறும் உண்மைத் தவமுடைய பராசர முனிவர் ஈன்றருளிய வியாசர் தம் மாணாக்கராகிய சூதமுனிவர். விளங்கு நீற்றொளி கதிர்செய வீங்கிருள் அக்கமா லிகைவீசும், வளங்க னிந்தபொன் மேனியான் புண்ணியம் வடிவெடுத்தென வந்தான், துளங்கு றாதுயர் புராணமுற் றளந்தறி தொல்லையோன் அமரர்க்காக, களங்க றுத்தவன் உண்மைதேர்ந் துயிர்க்கெலாங் கருணை கூர்ந் தருள்சூதன். 21 உயர்தற்குக் காரணமாகிய பதினெண் புராணங்களையும் முழுதும் அளந்தறிந்த பழையோனும், தேவர் பொருட்டு விடமுண்டு கண்டங்கறுத்தவன் உண்மை யியல்பை ஆராய்ந்து சலியாது நின்று உயிர்க்கெலாம் கருணை மீக்கூர்ந்து அருள் செய் சூதமுனிவரனும் ஆகியோன் விளங்கு திருநீற்றொளி கதிரைப்பரப்ப, உருத்திராக்கமாலை பேரிருளை வீசும் நலமுதிர்ந்த பொன் மேனியனாய்ப் புண்ணியம் ஓருருக்கொண்ட தெனும் வடிவொடும் எழுந்தருளினன். முனிவர் வினாவுதல் புக்க சூதனை முனிவரர் யாவரும் பொங்கிய பெருங்காதல் மிக்க ஓகையின் எதிர்கொடு பூசனை விதயுளி வழாதாற்றித் தக்க ஆதனத் திருத்தினர் வினவுவார் தறுகண்ஐம் புலவாழ்க்கை ஒக்க நீப்பயாம் முன்னரே அருந்தவம் உஞற்றினம் அதனாலே. 22 | நைமிச வனத்துட் புக்க சூத புராணிகரை முனிவரர் யாவரும் மிகுபெரு விருப்பினால் மிக்க மகிழ்ச்சியின் இருக்கை யெழலும் எதிர் செலவும் கொடு தகுந்த தவிசில் இருத்தி விதிமுறை வழுவாது பூசனை செய்து வினவுவார் வன்கண்மையுடைய ஐம்புல வாழ்க்கையை ஒருங்கு கைவிட ‘‘யாம் முன்னமே அரிய தவத்தைச் செய்தனம்” ஆகலின். வென்றி வெள்விடைப் பிரானடி காண்பதே வீடுபேற்றினுக்கேது, என்று தேறினம் காண்பதற் குபாயம்மற் றிதுவெனத் தெளிகில்லேம், ஒன்ற லாதன வேறு வேறுரைத்தனம் உயங்கினம் பிணங்குற்றேம், மன்ற கண்டிலேம் துணிவு மெய்யுணர்வினான் மலக்குறும் பறச்செற்றோய். 23 வெற்றியையுடைய வெள்ளை விடைப் பெருமானடியைக் காண்டலே வீடுபேறுகைக்கு வழி என்று தெளிந்தேம். அத்திருவடிகளை அறிதற்குரிய உபாயம் இதுவெனத் தெளியும் வலியிலேம். வெவ்வேறுபட ஒவ்வொன்றை முத்தி சாதனமென வலியுறுத்துகின்றேம்; தளர்ந்தனம்; மகறுபட்டேம், துணிந்து ஒருவழியை நிச்சயமாகக் காணேம்; மலத்தீமையை முற்ற அழித்தவரே! (முத்தரே). |