எங்கள் பாக்கியப் பயனென நீஇவண் எய்திடப் பெற்றேம்யாம் கொங்கு யிர்த்ததார்த் துளவனே வியாதன்அக் குலமுனி அருளாலே, அங்கண் மூவறு புராணமும் உணர்ந்தனை அறமுதல் பொருள் நான்கிற், பொங்கு சீர்த்தியோய் நீஅறி யாதது புவனம்மூன் றினுமில்லை. 24 யாங்கள் செய் புண்ணியப் பயனொப்ப நீ இங்கெழுந்தருளப் பெற்றேம் யாம்; நறுமணம் கமழ்கின்ற துழாய் மாலையையுடைய திருமாலே வியாசமுனிவர், அம்முனிசிரேட்டர் அருள் கொடு அவரிடத்துப் பதினெண் புராணமும் அறமுதலாகக் கூறும் நாற்பொருளும், மிகு புகழோய்! நீமுற்ற உணர்ந்தனை; நீ அறியாதது முப்புவனத்தினும் இல்லை. ஆத லாற்பல நெறியினுந் துணிந்தவா றரன்திரு வடிகாண்டற் கேது எங்களுக் கருளுதி வறிதுநீ ஏகலை உயர்வானிற் பாத வம்பொரப் பெரியவர் காட்சியும் பயன்படா தொழியாதலால் சூத மாதவ என்றலும் அகங்களி துளும்பிஓ துவன்சூதன். 25 | ஆதலாற் பல நூன்முறையானும் துணிந்த வகையால் அரன் திருவடியைத் தரிசித்தற்கு எளிதாயதோர் உபாயம் எங்களுக்கு அருள் செய்; பயனின்றி நீ செல்லலை; ‘கற்பகத்தரு’ ஒப்பப் பெரியோர் தரிசனமும் பயனுறாது ஒழியாது (பயன் படும்); சூத மாதவனே!” என்று கூறிய அளவிலே களிப்பு உள்ளத் தடங்காது மீதூர்ந்து சூதன் ஓதுவான்: சூதமுனிவர் விடை கூறுதல் மொழியும் இப்பொருள் மூவறு புராணத்துட் காந்தமூ விருகூற்றிற், கழிவில் சீர்ச்சனற் குமாரசங் கிதையினிற் காளிகா கண்டத்தில், தழுவு தீர்த்தமான் மியத்தது நந்திபாற் சனற்குமாரன் கேட்டங், கழிவி லா அருள் வியாதனுக் குரைத்திட அவனெனக் கருள் செய்தான். 26 பேசப்பெறும் இப்பொருள் (விடயம்) பதினெண் புராணத்துள் காந்த புராணத்தின் ஆறு பகுதியுட்பட்ட நிலைபெறு சிறப்பினையுடைய சனற்குமார சங்கிதையுட் காளிகா காண்டத்தில் தழுவப் பெறும் தீர்த்த மான்மியத்தது. அதனை, நந்தி யெம்பெருமானிடத்துச் சனற்குமார முனியும் அவர்பால் வியாசரும், அவ்வியாசர் பால் தாமும் அருளப் பெற்று வழிவழியாக வந்த திது. நீயிர் பேரறி வாளராய் விரதநன் னெறியினிற் பிறழாமே தூய மெய்த்தவ வலியினாற் பழமலத் துகளறுத் துமையோர் பால் நாய னாரருள் பெற்றுளீர் ஆதலின் நன்றும்இப் பொருள்உங்கட் கேய ஓதுவன் ஒருங்கிய மனத்தொடுங் கேண்மின்க ளெனலோடும். | |