அன்றி னார்புரம் அழலெழ நகைத்த அண்ணல் சேவடிக் கன்பறா இயல்பின், துன்று மெய்த்தவ யோகியர்க் கெல்லாந் தூய நற்றவச் சாலையு மாகித், தென்றல் ஊர்தரப் பூமணங் கஞலத்தெளிபு னற்சுனை அளவில கவின்று, பொன்றி டாக்கட வுளர் முதலோர்க்குப் போக பூமியும் ஆயதப் பொருப்பு. 7 அச்சத சிருங்கம் பகைவருடைய முப்புரங்களை நெருப்புப் பற்றப் புன்முறுவல் பூத்த பெருமையர் திருவடிக்கண் அன்பு நீங்கப்பெறாத தன்மையினால் செறிந்த மெய்த்தவ யோகியர் யாவர்க்கும் புனித நற்றவச் சாலையுமாகித் தென்றல் தவழ்தலினாலே மலர் மணம் எங்குஞ் செறியத் தெளிந்த நீர்மயமாகிய அளவில்லாத நீர்ச்சுனைகளாற் பொலிந்து அழியாத பிரமன் முதலியோர்க்குப் போக பூமியுமாயுள்ளது. ‘‘அன்றினார் புரமெரித்தார்க் காலயம்” (திருத். பூச.) யோகத்திற்கும், போகத்திற்கும் இடனாய் விளங்குகிறது அது. அங்கண் வாழ்தரும் அயன்மனைக் கிழத்தி அங்கி நாப்பண்நின் றருந்தவஞ் செயல்போல், கொங்கு லாந்துவர்ப் பங்கயத் திரைதேர் குறிப்பின் ஓதிமம் அசைவற இருக்கும், பொங்குவெண் டிரைத் தீர்த்தத்தின் மாடே புரங்க டந்தவர் வரம்அவட் குதவித், தங்கு காட்சியின் நறுமலர் பொதுளித் ததைக டுக்கைபொன் சொரிவன உடைத்தால். 8 அவ்விடத்து வாழும் பிரமனது மனைவியாகிய கலைமகள் நெருப்பின் நடுவில் நின்று செய்தற்கரிய தவத்தைச் செய்தல் போல, நறுமணம் பரவும் சிவந்த தாமரையில் இரைகவரும் குறிப்பொடு அன்னம் அசைவற்று நின்றிருப்ப, எழுந்தோங்கும் வெள்ளிய அலைகளையுடைய தீர்த்தத்தின் பக்கத்தில் திரிபுரங்களை வென்ற இறைவர் வரத்தை அக்கலை மகளுக்குத் தந்தருளி நிலைபெற்றிருக்குங் காட்சிபோல நறுமணங் கமழு மலர்கள் செறிந்து நெருங்கிய கொன்றை மரங்கள் மலர் சொரிதலையுடையது. அன்னம் செந்தாமரை மலரிடை அசைவற இருப்பக் கொன்றை நின்று அதன்மேல் மலர் சொரியுங் காட்சி, நாமகள் நெருப்பிடை அசைவற நின்று தவம் செய்யச் சிவபிரான் அருளுதலை ஒக்கும். மீது சந்திர சூரியர் கிரணம் விரவ லாமையின் ஒருபொழுதலர்ந்தோர், போது கூம்பும்அச் செய்கை ஆங் கின்றிப் புரிமுறுக்குடைந் தென்றும்ஓர் இயல்பிற், கோதில் பன்மணிக்கதிரொளி வருடக் குளிர்ந்த லர்ந்திரண் டவத்தையுங் கடந்து, மாதர் வெண்பிறைக் கண்ணியர் அடிசேர் மாந்தர் ஒத்துள வளஞ்சுனை மலர்கள். 9 வளமிக்க நீர்ச்சுனையிலுள்ள, மலர்கள் தம்மேல் சந்திர சூரியர்களுடைய கிரணங்கள் கலத்தலில்லாமையால் ஒரு பொழுது அலர்ந்து மற்றோர் பொழுது குவியும் அச்செயல் அவ்விடத்தின்றிக் குற்றமில்லாத பல மாணிக்கங்களினொளி தடவுதலாற் கட்டவிழ்ந் தெப்போதும் ஓரியல்பாய் |